Published:Updated:

“கடவுள் கொடுத்த வரம் இது!”

தூய்மைப் பணியாளர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
தூய்மைப் பணியாளர்கள்!

- கொரோனா தந்த கொடூர மரணம்... தூக்கிச் சுமந்த தூய்மைப் பணியாளர்கள்!

“கடவுள் கொடுத்த வரம் இது!”

- கொரோனா தந்த கொடூர மரணம்... தூக்கிச் சுமந்த தூய்மைப் பணியாளர்கள்!

Published:Updated:
தூய்மைப் பணியாளர்கள்!
பிரீமியம் ஸ்டோரி
தூய்மைப் பணியாளர்கள்!
மரணித்தவரின் முகத்தைக்கூட கடைசியாக ஒருமுறை பார்க்கவிடாத துயரத்தைக் கொடுத்துள்ளது கொரோனா. உறவினர்களை விலக்கிவைத்து, அவர்கள் தூரத்தில் இருந்து கதறித் துடிப்பதைப் பார்க்கும்போது கண்கள் கலங்குகின்றன.

கொரோனாவால் இறந்தவரின் உடலிலிருந்து தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் அனைவருமே பின்வாங்கும் சூழல். ஆனால், அந்த உடலைத் தொட்டுத் தூக்கி அடக்கம் செய்கிறார்கள் தூய்மைப் பணியாளர்கள். அவர்களின் சேவையும் உயிரை பணயம் வைக்கும் தியாகமும் என்றென்றும் போற்றுதலுக்குரியவை.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

வேலூர் சைதாப்பேட்டையைச் சேர்ந்த 46 வயதுடைய ஒருவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த அவர், ஏப்ரல் 7-ம் தேதி மரணமடைந்தார். அரசு அறிவுறுத்தலின்படி, மறுநாள் உடலை அடக்கம் செய்வதற்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன. உடல் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. சாதாரண துணியைக்கொண்டு நான்கு அடுக்குகளாக உடல் சுற்றப்பட்டது. அடுத்து பிளாஸ்டிக் பையில் வைத்து உடல் மூடப்பட்டு மீண்டும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

உடலை இடுகாட்டுக்குத் தூக்கிச் சென்று அடக்கம் செய்ய, வேலூர் மாநகராட்சியின் 2-ம் மண்டலத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர்கள் சரத்குமார், மதன்குமார், தங்கராஜ், குப்பன், ஜெகநாதன் ஆகிய ஐந்து பேர் மருத்துவமனைக்கு வந்தனர். முதலில் அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. பிறகு, முழு பாதுகாப்புக் கவச உடை கொடுக்கப்பட்டது. அதை அணிந்துகொண்டவர்கள் இறந்தவரின் உடலைத் தூக்கி வந்து ஆம்புலன்ஸில் ஏற்றினர்.

இறந்துபோன நபர் வசித்த சைதாப்பேட்டைப் பகுதி இடுகாட்டுக்கு ஆம்புலன்ஸ் சென்றது.

“கடவுள் கொடுத்த வரம் இது!”

10 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டு அதனுள் அதிகளவு கிருமிநாசினி ஊற்றப்பட்டது. ஆம்புலன்ஸிலிருந்து உடலைக் கீழே இறக்கி பள்ளத்தில் வைத்தார்கள் தூய்மைப் பணியாளர்கள். மண்ணைக் கொட்டி பள்ளத்தை மூடினர். பிறகு, அவர்கள்மீது 10 நிமிடங்களுக்கு ஒருமுறை கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. தூய்மைப் பணியாளர்கள் அணிந்திருந்த உடை அங்கேயே தீயிட்டுக் கொளுத்தப்பட்டது. உடல் புதைக்கப்பட்ட இடத்தின்மீதும் அதிகளவு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இறுதிச்சடங்கில் இறந்தவருடைய உறவினர்கள் எவரும் அருகில் அனுமதிக்கப்படவில்லை. 20 அடி தூரத்தில் நிற்கவைக்கப்பட்டனர். இறந்தவரின் முகத்தைக்கூடப் பார்க்க முடியாமல் அவர்கள் அங்கு இருந்தே கதறி அழுத காட்சி அனைவரையும் கண் கலங்கவைத்தது. அங்கு இருந்தபடியே மதச் சடங்குகளும் செய்யப்பட்டன. உயிரிழந்தவரின் குடும்பத்தினர், உறவினர்கள், அக்கம்பக்கம் வசிப்பவர்கள், அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட அவருடன் தொடர்பில் இருந்த 53 பேர் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர். உடலை அடக்கம் செய்த தூய்மைப் பணியாளர்கள் ஐந்து பேருக்கும் தினமும் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

“கடவுள் கொடுத்த வரம் இது!”

தூய்மைப் பணியாளர்களின் இந்தச் சேவையைப் பார்த்தபோது எல்லையில் உயிரை பணயம் வைத்து நாட்டைக் காக்கும் ராணுவ வீரர்களுக்கும் இவர்களுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பது புரிந்தது.

“கடவுள் கொடுத்த வரம் இது!”

இவ்வளவுக்கும், அந்த ஐந்து பேரும் நிரந்தரப் பணியாளர்கள் அல்லர்... தற்காலிகப் பணியாளர்கள்; மிகக் குறைந்த ஊதியம் பெறுபவர்கள். ஐந்து பேரில் தங்கராஜ் என்கிற 25 வயது பணியாளர், பி.ஏ வரலாற்றுப் பிரிவில் பட்டம் பெற்றவர்.

தூய்மைப் பணியாளர்களிடம் பேசினோம். ‘‘எத்தனையோ அநாதைப் பிணங்களை அடக்கம் செஞ்சிருக்கோம். ஆனா, இப்படி ஒரு சூழ்நிலை வந்ததில்ல. இது எங்களுக்கு ரொம்பவும் புதுசு. அதிகாரிங்க எங்களுக்கு இந்த வேலையைக் கொடுத்தப்ப, ஒருவித பயம் இருந்துச்சு. மனுஷனோட உடலை மனுஷனே தொட முடியாத நிலைமை. கொஞ்சம் தப்பு நடந்தாலும் எங்களுக்கும் நோய் தொத்திக்கலாம். நாம எவ்வளவு ஜாக்கிரதையா இருந்தாலும்கூட நோய் எப்படியும் நம்மளைத் தொத்திக்கலாம். அதுக்கும் வாய்ப்பு இருக்கில்ல சார்... இந்த வேலையைப் பார்த்தப்போ என்னமோ வெடிகுண்டைச் செயலிழக்க வெக்கிறாப்புல இருந்துச்சு. ஆனாலும், என்ன நடந்தாலும் சரின்னு துணிச்சலா இறங்கினோம். மனுஷனுக்கு மனுஷன் இதைகூட பண்ணலைன்னா அவன் மனுஷனே இல்லை. சேவை செய்யறதுக்கு எங்களுக்குக் கிடைச்ச வாய்ப்பு இது. இன்னும் சொல்லப்போனா, கடவுள் கொடுத்த வரம் சார் இது. ரொம்பப் பெருமையா இருக்கு. அதேசமயம், இப்படி ஒரு நிலைமை வேற யாருக்கும் வரக்கூடாதுன்னு கடவுளை வேண்டிக்கிறோம்.

இறந்தவரோட சொந்தக்காரங்க எங்களுக்கு ஒரு தொகை கொடுத்தாங்க. அது எதுக்கு சார் எங்களுக்கு? அதை நாங்க வாங்கலை. இறந்தவருக்கு ஒரு மகன் இருக்கிறதா கேள்விப்பட்டோம். அவரோட படிப்புச் செலவுக்கு அதை வெச்சுக்கச் சொல்லிட்டோம். என்னமோ தெரியலை... ஒரு பக்கம் துக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் இந்த வேலையைச் செஞ்சதுக்காக மனசு நிறைவா இருக்கு.

“கடவுள் கொடுத்த வரம் இது!”

ஒரே ஒரு கோரிக்கைங்க. எங்களோட இந்த வேலையை நிரந்தரமாக்கிக் கொடுக்கணும். நாங்க இன்னும் மனநிறைவா வேலை பார்ப்போம். மாநகராட்சி அதிகாரிகளையும் சும்மா சொல்லக் கூடாதுங்க... எங்கமேல அக்கறையா இருக்காங்க. தினமும் எங்க உடல்நிலையைக் கண்காணிக்கிறாங்க’’ என்றனர் உருக்கமாக.

“தனிமைப்படுத்திக்கொள்வதே சிறந்த தீர்வு!”

மீண்டு வந்த ராணிப்பேட்டை இளைஞர்

ஒரு பக்கம் துயரங்கள் சூழ்ந்தாலும் மறுபக்கம் நம்பிக்கை வெளிச்சக்கீற்றுகள் நமக்கு ஆறுதலை அளிக்கின்றன.

கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளார் ராணிப்பேட்டை மாவட்டம் கீழ்விஷாரத்தைச் சேர்ந்த 26 வயது இளைஞர் அகமதுல்லா. ஏப்ரல் 10-ம் தேதி, வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையிலிருந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் வீடு திரும்பிய அந்த இளைஞரை, மருத்துவர்களும் செவிலியர்களும் கைதட்டி கரவோசையுடன் வழியனுப்பிவைத்தனர். “என் பெயரைக் குறிப்பிட்டு எழுதுங்க. அப்போதான் கொரோனா நோயாளிங்க மீண்டு வந்த பிறகும் அவங்கள தீண்டத்தகாதவங்களா நடத்துற கொடுமை ஒழியும்” என்ற அகமதுல்லாவின் வேண்டுகோளின் பேரில், அவரின் பெயரையும் புகைப்படத்தையும் வெளியிடுகிறோம்.

அகமதுல்லா
அகமதுல்லா

‘‘கடந்த மார்ச் மாதம் 17-ம் தேதி துபாயிலிருந்து விமானம்மூலம் ஊர் திரும்பினேன். அருகில் பயணம் செய்தவரிடமிருந்து எனக்கு கொரோனா தொற்றியது. விமான நிலையத்தில் வந்து இறங்கியபோது பரிசோதனை செய்தனர். அப்போது உடல்நலம் பாதிக்கப்படவில்லை. இரண்டு நாள்கள் கழித்தே சளி, இருமலுடன் காய்ச்சல் ஏற்பட்டது. உடனடியாக, வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் என்னை அனுமதித்தனர். கொரோனா தொற்று உறுதியானதால் மருத்துவர்கள் தீவிரமாகக் கண்காணித்து சிகிச்சை அளித்தனர். காலையில் இட்லி, மதியம் சாப்பாடு, இரவு இட்லி கொடுத்தனர். சிறப்பாகவும் கவனித்துக்கொண்டனர்.

கூடவே, ‘கொரோனாவிலிருந்து மீண்டுவிடுவீர்கள். பயப்பட வேண்டாம்’ என்று ஒவ்வொரு நாளும் மருத்துவர்கள் நம்பிக்கை கொடுத்தனர். அவர்களின் நம்பிக்கையால்தான் குணமடைந்து வீடு திரும்பியிருக்கிறேன். என் குடும்பத்தினரையும் மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தினர். அவர்களுக்குத் தொற்று இல்லை. அடுத்த 28 நாள்களுக்கு வீட்டிலேயே என்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். தமிழக அரசுக்கும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். கொரோனாவிலிருந்து மீள்வதற்கு தனிமைப்படுத்திக்கொள்வதே சிறந்த நிவாரணம். மனதைரியத்துடன் இருந்தால், நோய்த்தொற்றிலிருந்து விடுபட்டு விரைவில் வீடு திரும்பலாம்’’ என்றார் புத்துணர்வுடன்.

இரவிலேயே கரிய இரவு விடியவதற்கு முன்பான இரவு - ஸ்பானிஷ் பழமொழி இது. கரிய இரவு கரைந்து, நாளை நம் அனைவருக்குமே விடியும். நம்பிக்கைக்கொள்வோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism