தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் வடக்கு பிள்ளையார்கோயில் தெருவைச் சேர்ந்தவர், பெருமாள். செங்கல்சூளையில் கூலிவேலை செய்துவரும் அவரது இரண்டாவது மகள், பேச்சியம்மாள். தான் படிக்காவிட்டாலும் தன் பிள்ளைகளாவது நன்றாகப் படித்து அரசு வேலைக்குச் செல்ல வேண்டும் என்று விரும்பிய பெருமாள், தன் மகள் பேச்சியம்மாளை பாளையங்கோட்டையில் உள்ள குழந்தை ஏசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்திருந்தார்.
சுமாராகப் படிக்கும் பேச்சியம்மாள், சமீபத்தில் நடந்துமுடிந்த அரையாண்டுத் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார். அத்துடன், விடுமுறை நாள்களில் பள்ளியில் நடத்தப்படும் சிறப்பு வகுப்புகளுக்கும் போகாமல் இருந்திருக்கிறார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சரிவர படிக்காமலும் வகுப்புகளுக்கு வராமலும் இருந்த பேச்சியம்மாளை ஆசிரியர்கள் கண்டித்துள்ளனர். அத்துடன், பெற்றோரை அழைத்துவரச் சொல்லி பேசியிருக்கிறார்கள். இந்த நிலையில், இரு தினங்களுக்கு முன்பு பள்ளிக்கு வந்த பேச்சியம்மாள், மீண்டும் வீட்டுக்கு திரும்பிச் சென்றுள்ளார்.

வீட்டுக்கு வந்த அவர், தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி அறிந்ததும், செய்துங்கநல்லூர் போலீஸார் விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி, பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அவரது பெற்றோர், செய்துங்கநல்லூர் காவல் நிலையத்தில், தன் மகள் வயிற்று வலி காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக எழுதிக் கொடுத்ததால், அதன்படி வழக்கு போடப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதற்கிடையே, பேச்சியம்மாளின் உடற்கூறு ஆய்வு முடிந்த பின்னர் அவரது உடலை வாங்க மறுத்த உறவினர்கள், பள்ளி ஆசிரியர்கள் கடுமையாகக் கண்டித்ததால்தான் பேச்சியம்மாள் தற்கொலை செய்துகொண்டதாகக் குற்றம் சாட்டினார்கள். அதனால் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தின்மீது வழக்குத் தொடரக் கோரி, உடலை வாங்க மறுத்துப் போராட்டம் நடத்தினார்கள்.

ஏ.பி.வி.பி அமைப்பினர், இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். பள்ளி முன்பாக உறவினர்கள் சிலர் அமர்ந்து முற்றுகையில் ஈடுபட்டனர். போலீஸார், அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள். இதுகுறித்து கல்வியாளர்கள் கூறுகையில், ’விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தி, பள்ளி மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படக் காரணமாக இருக்கக்கூடாது’ என்றார்கள்.