கொரோனா வைரஸ் வேகமாகப் பரவிவருகிறது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் மக்களின் நடமாட்டம் வழக்கம் போல இருந்துவருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. சென்னையில்தான் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

தமிழகத்தில் கொரோனா பரவுவதைத் தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சுகாதாரத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். இருமல், காய்ச்சல் இருக்கிறதா என வீடு வீடாக சுகாதாரத்துறையினர் கணக்கெடுத்துவருகின்றனர். சென்னையைப் பொறுத்தவரை ராயபுரம் மண்டலத்தில் மட்டும் 2,000 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அதற்கு அடுத்தபடியாகக் கோடம்பாக்கம் மண்டலத்தில் கொரோனா பாதிப்பு உள்ளது. சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை கொரோனா வார்டிலிருந்து நோயாளிகள் தப்பிச் செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடந்துவருகின்றன.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்தநிலையில், சென்னை அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 50 வயதுடைய நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதுகுறித்து தகவலறிந்ததும் போலீஸார் அந்த நபரின் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். தற்கொலை குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், `` சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 50 வயதுடைய நபர் நேற்று மதியம் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று அவர் அந்த வார்டில் இல்லை. மருத்துவமனையில் உள்ள கழிவறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். நீண்ட நேரமாகக் கழிவறையின் கதவு பூட்டப்பட்டிருந்ததால் அதை உடைத்து திறந்து பார்த்தபோது ஒருவர் தூக்கில் தொங்கியது தெரியவந்தது. தற்கொலைக்கு என்ன காரணம் என்று விசாரித்து வருகிறோம்" என்றனர்.
சென்னையில் அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.