Published:Updated:

வயிற்றில் இருந்த சிசுவுடன் கர்ப்பிணிக்கு நேர்ந்த பரிதாபம்! - கொரோனாவால் சோகம்

வேலூர்
வேலூர்

கொரோனா பாதிப்புக்குள்ளான கர்ப்பிணிப் பெண்ணும் அவரின் வயிற்றில் இருந்த சிசுவும் உயிரிழந்த சம்பவம், வேலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

வேலூர் மாவட்டத்தில், கொரோனா பெருந்தொற்றுக்குப் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடுகிறது. நேற்று முன்தினம் மட்டும் 21 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது. அதேபோல், நேற்று ஒரே நாளில் 29 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டது. இதுவரை, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை மாவட்டம் முழுவதும் 100-ஐ கடந்துள்ளது.

கொரோனா
கொரோனா

இந்த நிலையில், கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பேரணாம்பட்டுப் பகுதியைச் சேர்ந்த 20 வயதுடைய கர்ப்பிணிப் பெண் பிரசவத்தின்போது உயிரிழந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பேரணாம்பட்டு பாலாஜி நகரைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளியின் மனைவியான அந்த கர்ப்பிணிப் பெண்ணுக்குச் சமீபத்தில் திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது.

குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்குக் கொரோனா அறிகுறி இருந்ததால், உடனடியாக வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். மருத்துவப் பரிசோதனையில், அந்தக் கர்ப்பிணிக்குக் கொரோனா உறுதிசெய்யப்பட்டது. வயிற்றிலிருந்த 8 மாத சிசுவின் நிலையையும் மருத்துவர்கள் பரிசோதனை செய்தனர்.

வேலூர் அரசு மருத்துவமனை
வேலூர் அரசு மருத்துவமனை

அப்போதுதான், தொற்று பாதிப்பால் சிசு உயிரிழந்த நிலையில் இருப்பதைக் கண்டறிந்தனர். உடனடியாக அறுவை சிகிச்சை மூலம் சிசுவை வெளியில் எடுத்தனர். அதைத்தொடர்ந்து, தீவிரக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த அந்தப் பெண்ணும் திடீரென உயிரிழந்தார். இதையடுத்து, அவர் வசித்துவந்த பகுதியில் சுகாதார நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு