சினிமா
Published:Updated:

அவர் எளிமையானவர் அல்ல... அதுவே இயல்பானவர்!

நன்மாறன்
பிரீமியம் ஸ்டோரி
News
நன்மாறன்

உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் பிரச்னை பற்றி 2008-ல் சட்டமன்றத்தில் விளக்கமாகப் பேசி அரசின் கவனத்திற்குக் கொண்டுசென்றவர்.

நிகழ்வு 1:

2006 சட்டமன்றத் தேர்தலில் மதுரை கிழக்குத் தொகுதி வேட்பாளர் நன்மாறன். வாக்கு எண்ணிக்கையில் அவரை எதிர்த்துப் போட்டியிட்டவர் 150 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டதும், அவருக்கு வாழ்த்து கூறிவிட்டுக் கிளம்பிய நன்மாறனை திடீரென்று தேர்தல் அலுவலர் நிறுத்தி, ‘‘தபால் வாக்குகள் சேர்க்கப்படவில்லை’’ என்று சொல்லி மீண்டும் உள்ளே அழைத்துச் சென்றார். தபால் வாக்குகளை எண்ணி முடித்து, ‘52 வாக்குகள் வித்தியாசத்தில் நன்மாறன் வெற்றிபெற்றதாக’ அறிவித்தார். ஆனால், நன்மாறன் மகிழ்ச்சி அடையவில்லை. ‘‘அவசரம் வேண்டாம். மீண்டும் ஒருமுறை வாக்குகளை எண்ணி சரியாக அறிவியுங்கள், காத்திருக்கிறோம்’’ எனக் கூறுகிறார். பின், வெற்றிபெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவித்தவுடன் கூட்டணிக் கட்சியினர் அவரைத் தூக்கிக் கொண்டாடியபோது, ‘‘இங்கே வேண்டாம். அது தோற்றவர்களுக்கு வருத்தம் தரும்” எனக் கூறி அனைவரையும் வெளியில் அனுப்புகிறார். இதுதான் தோழர் நன்மாறன்!

நிகழ்வு: 2

‘‘மற்ற ஊர்களுக்குள் நுழையும்போது தொழிற்சாலைகள் இயங்குகிற சத்தம் கேட்கிறது. ஆனால், மதுரைக்குள் நுழையும்போது கொத்து புரோட்டா போடும் சத்தம் மட்டும்தான் கேட்கிறது. இங்கு தொழில் வளர்ச்சியடைய நடவடிக்கை எடுங்கள்’’ என்று மதுரையில் நடந்த விழாவில் நன்மாறன் பேச, ‘‘தோழர் நன்மாறன் கவலைப்படக்கூடாது என்பதற்காக இங்கு வருவதற்கு முன் மதுரையில் ஒருங்கிணைந்த டைடல் பார்க் அமைந்திடக் கையெழுத்திட்டு வந்துள்ளேன்’’ என அப்போதைய முதல்வர் கருணாநிதி உடனே அறிவிக்கும் அளவுக்குக் காரணமாக இருந்தவர்.

நிகழ்வு: 3

உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் பிரச்னை பற்றி 2008-ல் சட்டமன்றத்தில் விளக்கமாகப் பேசி அரசின் கவனத்திற்குக் கொண்டுசென்றவர். ‘என்ன நன்மாறன், பெர்லின் சுவர் மாதிரி இப்பிரச்னை பெருசா இருக்கும்போல’ என்று வருத்தப்பட்ட முதல்வர் கருணாநிதி, உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் காரணமானார்.

நிகழ்வு: 4

கடந்த ஆண்டு அரசு மருத்துவமனை அருகே பேருந்தில் ஏறியபோது, தவறவிட்ட ஒற்றைச் செருப்பை எடுக்கக் கீழே இறங்கித் தேடுவதைப் பார்த்து வருத்தப்பட்ட ஆட்டோக்காரர் பாண்டி, `ஆட்டோவுல வாரீங்களா?’ என்று கேட்க, `என்னிடம் 20 ரூபாய்தான் இருக்கு’ என்று அவர் சொல்ல, ‘பரவாயில்லை’ என்று ஏற்றியபோதுதான், அவர் முன்னாள் எம்.எல்.ஏ நன்மாறன் என்பதை அறிந்து அதிர்ச்சியாகி, அவருடன் ஒரு போட்டோ எடுத்துக்கொண்டு வீட்டில் இறக்கிவிட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.

நிகழ்வு: 5

வழக்கமாக, பாதிக்கப்பட்ட மக்களை அழைத்துக்கொண்டு குறைதீர்க்கும் நாளில் கலெக்டர் அலுவலகம் வருவார் நன்மாறன். ஒருநாள் மனைவியுடன் மனு கொடுக்க நிற்பதைப் பார்த்துச் செய்தியாளர்கள் விசாரிக்க, ‘ஒண்ணுமில்லை, வீட்டு வாடகை அதிகமாகிக்கிட்டே போகுது. அதான் அரசு வழங்கும் இலவச வீட்டுக்கு மனு கொடுக்க வந்தேன்’ என்று சாதாரணமாகச் சொல்ல, செய்தியாளர்கள் அதிர்ச்சி ஆனார்கள்.

கடந்த 28-ம் தேதி மரணமடைந்த தோழர் நன்மாறனைப் பற்றிச் சொல்ல, மதுரையிலுள்ள ஒவ்வொருவருக்கும் ஒரு கதை உள்ளது. சமகால ஆடம்பரமான அரசியல்வாதிகள், மக்கள் பிரதிநிதிகளைப் பார்த்துப் பழகிய மக்களுக்கு, நன்மாறன் ஓர் ஆச்சரிய மனிதர்; அல்லது, பிழைக்கத் தெரியாதவர். அதேநேரம், அனைத்துக் கட்சியினராலும் மதிக்கப்படும் நபர். அவர் பெயர் தெரியாதவர்கள் மதுரையில் மிகக் குறைவு. அதனால்தான் அவர் மறைவுச் செய்தி கேட்டதும் அஞ்சலி செலுத்த அனைத்துக் கட்சியினரும், மக்களும் சாரைசாரையாக வந்துகொண்டே இருந்தார்கள்.

இருமுறை சட்டமன்ற உறுப்பினராக இருந்திருந்தாலும் தனக்கென்று எந்தக் கோரிக்கையும் அரசிடம் வைக்காதவர். நாற்பது வருடங்களுக்கு மேலாக ஆரப்பாளையம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து, கட்சி தரும் ஊதியத்தில் வாழ்ந்து வந்த நன்மாறன் முழுமையான கம்யூனிஸ்டாக வாழ்ந்தவர். அவர் இயல்பே எளிய வாழ்க்கைதான்.

மதுரை அழகரடியில் 1947-ல் பிறந்த ராமலிங்கம் என்ற நன்மாறன், கல்லூரியில் இளங்கலை முடித்தபின் காமராஜர் பல்கலைக்கழகத்தில் அஞ்சல் வழியில் தமிழில் முதுகலை பட்டம் பெற்றார். தந்தை பஞ்சாலைத் தொழிலாளி என்பதால், கம்யூனிஸ்ட் கட்சிமீது இயல்பிலேயே ஈர்ப்பு ஏற்பட்டது. தனியார் பேருந்து ஓட்டுநர் உட்பட பல வேலைகளைச் செய்தவருக்கு வாசிப்பிலும் எழுதுவதிலும் ஆர்வம் ஏற்பட்டது. சோசலிஸ்ட் வாலிபர் முன்னணியைத் தொடங்கியவர், பின்பு தமிழகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கமாக அது மாறியபோது, மாநிலத் தலைவராகவும், அகில இந்தியத் துணைத் தலைவராகவும் பணியாற்றினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாகப் பங்காற்றி, அதன் மாநிலத் துணைத் தலைவராகவும், சி.பி.எம் மாநிலக்குழு உறுப்பினராகவும் நீண்டகாலம் செயல்பட்டார்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி, ‘‘திண்டுக்கல்லில் `கருத்தம்மா’ படத்துக்கு த.மு.எ.க.ச நடத்திய பாராட்டு விழாவில் நன்மாறன் பேசிய பேச்சைக் கேட்டு பாரதிராஜா அசந்துவிட்டார். அந்த அளவுக்கு அவருடைய ஒவ்வொரு படத்தைப் பற்றியும் நுணுக்கமாகப் பேசினார். அவர் கொறடாவாக இருந்தபோதுதான் நானும் சட்டமன்ற உறுப்பினராக இருந்தேன். ஒருமுறை மேலவை கொண்டுவர தி.மு.க அரசு தீர்மானம் கொண்டுவந்தபோது, அதை எதிர்த்துப் பேசினார். அப்போது ஓர் அமைச்சர், ‘நீங்கள் எதிர்த்தாலும் மேலவை கொண்டு வந்தால், அதில் உங்கள் கட்சி பங்கு பெறுமா?’ என்று மடக்கினார். உடனே, `விலைவாசி உயர்கிறது என்பதால், சாப்பிடாமலேயே இருக்க முடியுமா?’ என்று டக்கென்று இவர் பதில் சொல்ல... அனைவரும் ரசித்துச் சிரித்தனர்.

அவர் எளிமையானவர் அல்ல... அதுவே இயல்பானவர்!

எம்.எல்.ஏ-க்கள் சம்பள உயர்வுக்கும், வீட்டுமனைக்கும் கோரிக்கை வைத்தபோது, அதைச் சட்டசபையில் எதிர்த்துப் பேசினார். எல்லா எம்.எல்.ஏ-க்களும் இதுகுறித்து ஆதங்கப்பட்டபோதும் அவர் கண்டுகொள்ளவில்லை. `எனக்கும் வீடு இல்லைதான். நமக்கு வீடு கேட்கவா மக்கள் தேர்ந்தெடுத்து அனுப்புனாங்க’ என்று மற்றவர்களைச் சமாதானப்படுத்தினார். அவர் ஓர் உண்மையான கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்தார்’’ என்றார்.

த.மு.எ.க.ச ஆதவன் தீட்சண்யா, “ஓசூர் கலை இரவு பட்டிமன்றத்துக்கு நன்மாறனும் லியோனியும் வந்திருந்தார்கள். நிகழ்ச்சிக்கு செலவு செய்ததுபோக மிகச் சிறிய தொகைதான் மிச்சமிருந்தது. அதை வெளியூரிலிருந்து வந்திருக்கும் இவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தோம். ‘அதான் பஸ் செலவுக்குக் கொடுத்துட்டீங்களே, அப்புறம் எதுக்கு’ என்று வாங்க மறுத்துவிட்டார். அரசியல் என்பது மக்கள் பணி செய்வதற்கான வழி என்பதை உணர்ந்ததால்தான் அவரால் மக்களுக்காக உழைக்க முடிந்தது” என்றார்.

சி.பி.எம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ‘`கம்யூனிஸ்ட் என்றாலே இறுக்கமாக இருப்பார்கள், தீவிரமாக அரசியல் பேசுவார்கள் என்ற அடையாளத்தை உடைத்து, எதையும் நகைச்சுவை கலந்து எளிமையாக அவர் பேசியது எல்லோருக்கும் பிடித்தது. மார்க்சிய இலக்கியம், மார்க்சிய பொருளாதாரம், தமிழ்ப் பண்பாடு, வரலாறு எல்லாம் உள்வாங்கியவர். கட்சி வேலை நேரம் போக படித்துக்கொண்டேதான் இருப்பார்’’ என்றார்.

ஒரு நல்ல அரசியல்வாதிக்கான இலக்கணமாக வாழ்ந்த நன்மாறன் எப்போதும் வரலாற்றில் நிலைத்திருப்பார்.