Published:Updated:

“நன்மாறனைப் போல சாக, நன்மாறனைப் போல வாழ்ந்தாக வேண்டும்!”

நன்மாறன்
பிரீமியம் ஸ்டோரி
நன்மாறன்

- ஆதவன் தீட்சண்யா

“நன்மாறனைப் போல சாக, நன்மாறனைப் போல வாழ்ந்தாக வேண்டும்!”

- ஆதவன் தீட்சண்யா

Published:Updated:
நன்மாறன்
பிரீமியம் ஸ்டோரி
நன்மாறன்

வாழ்வின் தொடக்கத்திலிருந்து மரணம் வரையிலும்
எண்ணற்ற குறுக்குச்சாலைச் சந்திப்புகள்
எந்தப் பாதை வித்தியாசமானதாயிருக்குமோ
அந்தப் பாதையில் நடப்பதற்கு நான் முற்படக்கூடும்…


- பஞ்சாப்பின் புரட்சிகர தலித் கவிஞன் சாந்த் ராம் உதாசி எழுதிய ‘என் மரணத்தின்போது அழாதீர்கள்’ பாடலின் இந்த இறுதிவரிகள்தான் தோழர் நன்மாறனின் வாழ்வுக்கும் சாவுக்கும் மிகப்பொருத்தமானவை. சமூகத்தில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளையும் ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து சமரசமற்றுப் போராடுவதற்கு இட்டுச் செல்லும் பாதை எதுவோ, அதையே தேர்ந்துகொண்டவர் நன்மாறன்.

நாடு விடுதலையடைவதற்குச் சில மாதங்களுக்கு முன்பாக, குஞ்சரத்தம்மாள் – வே.நடராசன் தம்பதியரின் மகனாகப் பிறந்த இராமலிங்கம், பின்னாளில் நன்மாறனாக மதிப்பையும் புகழையும் பெற்றார். தந்தையின் வழியில் இளவயதிலேயே மார்க்சியத்தை ஏற்றுக்கொண்ட நன்மாறன், நடத்துநர் பணியை உதறிவிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியரானார். ‘சொந்த வாழ்வை வளப்படுத்திக்கொள்வதா, சமூகத்தின் மேம்பாட்டுக்கு உழைப்பதா?’ என்கிற கேள்விக்கு ‘சமூகநிலை மேம்படும்போது சொந்த வாழ்வும் வளப்படும்’ என்கிற பதிலை தனது அரசியல் தொலைநோக்கிலிருந்து அவர் கண்டடைந்தார். சோஷலிஸ்ட் வாலிபர் முன்னணி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், கட்சி ஆகியவற்றின் மூலம் பொதுவாழ்வில் தான் ஆற்றிவந்த களப்பணிகளின் நீட்சியாக பத்தாண்டுக் காலம் சட்டமன்ற உறுப்பினராகவும் செயலாற்றிய நன்மாறன், தனது 74-வது வயதில் 28.10.2021 அன்று காலமாகிவிட்டார்.

“நன்மாறனைப் போல சாக, நன்மாறனைப் போல வாழ்ந்தாக வேண்டும்!”

நன்மாறனின் இறப்புச் செய்தி வெளியானதிலிருந்து சோர்வறியாத ஓர் அமைப்பாளராக, அரசியல் செயல்பாட்டாளராக, எவரும் மனத்தடையின்றி எளிதில் அணுகவாய்த்த தோழராக, மேடைப்பேச்சாளராக, எழுத்தாளராக, சட்டமன்றவாதியாக அவர் ஆற்றிய பணிகளையும், அவரோடு பழகிய அபூர்வ தருணங்களையும் பலரும் ஊடகங்களில் பகிர்ந்துவருகிறார்கள். பகிரப்படும் அச்செய்திகளுக்குள்ளிருந்து மேலெழும் நன்மாறனின் சித்திரமானது, அரசியலை பிழைப்புக்கான தொழிலாக கீழ்ப்படுத்தாமல், தான் நம்பும் கொள்கையின் வழியே சமூகத்தை அழைத்துச் செல்வதற்காக திடசித்தத்துடன் பணியாற்றும் நன்மாறன்களுக்காக இச்சமூகம் காத்திருக்கும் ஏக்கத்தைக் காட்டுவதாயிருக்கிறது. எளிமையும், பொதுவாழ்வில் நேர்மையும் அதிசய குணங்களல்ல; அவை மனித சுபாவம், கம்யூனிஸ்ட்களின் அடிப்படை குணம். கம்யூனிஸ்ட் கட்சியில் இருப்பதானது, கம்யூனிஸ்டாக வாழ்வதற்காகத்தான் என்பதற்கான விளக்கத்தை தன் வாழ்வின் வழியே நிறுவிச்சென்றிருக்கிறார் நன்மாறன்.

நன்மாறன் எத்தகைய மதிப்புமிக்க, அப்பழுக்கற்ற வாழ்க்கையை வாழ்ந்தார் என்பதை அவரது இறப்பு உலகறியச் செய்திருக்கிறது. அவருக்கு இறுதி மரியாதை செலுத்த தமிழ்நாட்டின் முதல்வரும், அமைச்சர்களும், மாநிலம் முழுவதுமிருந்து இயக்கத் தோழர்களும், மதுரையின் பல்வேறு சமூக அடுக்குகளின் மக்களும் சாரி சாரியாக வந்து குவிந்ததைப் பார்த்த பலரும் ‘சாவதென்றால் நன்மாறனைப்போல சாக வேண்டும்’ என்று பேசிக்கொண்டார்கள். நன்மாறனைப்போல சாக, நன்மாறனைப்போல் வாழ்ந்தாக வேண்டும்!

ஒரே மூச்சில் உடனடியாகச் சாம்பலாகிவிட
நான் விரும்பவில்லை
எப்போதெல்லாம் சூரியன் அஸ்தமிக்கின்றானோ
அப்போது துண்டு துண்டாக எனதுடலைத் தீயிட்டுக் கொளுத்துங்கள்


- என்ற உதாசியைப்போல நன்மாறனும், கொளுத்தப்படும் தனது சடலத்திலிருந்தும் சமூகத்துக்கான ஒளியும் வெம்மையும் கிடைத்துவிட வேண்டுமென்கிற கனவோடுதான் எரிந்திருப்பார்!