Published:Updated:

`மோதிக்கொண்ட டிரைவர்கள்; தூக்கி வீசிய லாரி'- சமாதானம் பேசச் சென்ற எஸ்.ஐக்கு நேர்ந்த சோகம்!

டெம்போவின் முன்பு நின்று பேசிக்கொண்டிருந்த அருளப்பன் உள்ளிட்டவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயமடைந்த சி.ஆர்.பி.எஃப் பயிற்சி முகாம் எஸ்.ஐ.அருளப்பன் மரணமடைந்தார்.

விபத்தில் இறந்த சி.ஆர்.பி.எஃப் அதிகாரி அருளப்பன்
விபத்தில் இறந்த சி.ஆர்.பி.எஃப் அதிகாரி அருளப்பன்

கன்னியாகுமரி மாவட்டம் மேல்புறம் அருகே உள்ள பாகோடு பகுதியைச் சேர்ந்தவர் அருளப்பன் (49). இவர் கேரள மாநிலம் கண்ணூர் சி.ஆர்.பி.எஃப் பயிற்சி முகாமில் சப் இன்ஸ்பெக்டராகப் பணிபுரிந்து வந்தார். கிறிஸ்துமஸ் விழா கொண்டாடுவதற்காக விடுமுறை எடுத்து கேரள அரசு பஸ்ஸில் ஊருக்குத் திரும்பினார். பேருந்து நேற்று அதிகாலை கண்ணூரிலிருந்து திருவனந்தபுரம் நோக்கி வந்துகொண்டிருந்தது. வழியில் புதியகாவு பகுதியில் அருளப்பன் பயணித்த பேருந்தும், வைக்கோல் ஏற்றிவந்த டெம்போவும் லேசாக மோதின.

இதைத் தொடர்ந்து பேருந்து ஓட்டுநரும், டெம்போ ஓட்டுநரும் வாகனங்களை நிறுத்திவிட்டு மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பஸ் மற்றும் டெம்போ ஓட்டுநர்களுக்கும் பெரிய அளவில் பிரச்னை ஏற்பட்டது. ரோட்டில் பிரச்னை தொடர்ந்ததால் பஸ்சில் இருந்த பயணிகள் சிலர் கீழே இறங்கி கும்பலாக வேடிக்கைபார்த்தனர். அப்போது சப் இன்ஸ்பெக்டர் அருளப்பனும் கீழே இறங்கி இருதரப்பினரிடமும் சமாதானம் பேசினார். அருளப்பன் மற்றும் சிலர் வைக்கோல் ஏற்றி வந்த டெம்போ முன்பு நின்றபடி இரண்டு தரப்பினரையும் சமாதானம் செய்துகொண்டிருந்தனர்.

 அருளப்பன்
அருளப்பன்

அப்போது காய்கறி ஏற்றிவந்த மற்றொரு டெம்போ வைக்கோல் பாரத்துடன் நின்றுகொண்டிருந்த டெம்போவின் பின் பகுதியில் வேகமாக மோதி விபத்தை ஏற்படுத்தியது. இதனால் வைக்கோல் லோடுடன் நின்ற டெம்போ முன்பக்கமாக நகர்ந்தது. அதில் டெம்போவின் முன்பு நின்று பேசிக்கொண்டிருந்த அருளப்பன் உள்ளிட்டவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் படுகாயமடைந்த எஸ்.ஐ.அருளப்பன் மரணமடைந்தார். வேறு சிலர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சப் இன்ஸ்பெக்டர் அருளப்பனுக்கு விஜயராணி என்ற மனைவியும் ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கிறிஸ்துமஸ் கொண்டாட தந்தை வருகிறார் என மகிழ்ச்சியாக இருந்த பிள்ளைகள் சோகத்தில் மூழ்கினர். வாகன விபத்தில் ஏற்பட்ட பிரச்னையை முடித்துவைப்பதற்காக சமாதானம் பேசச் சென்ற ராணுவப் பயிற்சி முகாம் சப் இன்ஸ்பெக்டர் அருளப்பனின் மரணம் குமரி மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.