`வேலையை முடித்துவிட்டு வருகிறேன் என்ற மாந்திரீகர்!’ - ஆசிரமத்தில் அழுகிய நிலையில் சடலமாக மீட்பு
திருவள்ளூரில் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் இருந்த ஆசிரமத்தில் அழுகிய நிலையில் சடலமாகக் கிடந்த மாந்திரீகர் பனிக்கரின் மரணம் பல்வேறு சந்தேங்களை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, வில்லிவாக்கம் தெற்கு மாடவீதியில் வசித்து வந்தவர் பனிக்கர் (65). இவரது பூர்வீகம் கேரள மாநிலம். திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூரில் ஆசிரமம் ஒன்று கட்டி அங்கு மாந்திரீகம், ஜோதிடம் ஆகியவற்றைப் பார்த்துவந்தார். குறிப்பாக பௌர்ணமி, அமாவாசை நாள்களில் மாந்திரீகம் செய்வது மற்றும் ஜோதிடம் பார்ப்பது வழக்கம். கடந்த வாரம் அமாவாசையை முன்னிட்டு பனிக்கர், திருப்பாச்சூரில் உள்ள தனது ஆசிரமத்துக்குச் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து ஆசிரமத்துக்கு உறவினர்கள் வந்தனர். அப்போது பனிக்கர் இறந்துகிடந்தார். அவரின் சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டது. இதுகுறித்து திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், பனிக்கரின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பனிக்கர் எப்படி இறந்தார் என்று விசாரணை நடந்துவருகிறது.
பனிக்கரின் குடும்பத்தினர் கூறிய தகவல்கள் அடிப்படையில் போலீஸார் விசாரித்துவருகின்றனர். பனிக்கர், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன் ஊருக்கு ஒதுக்குப்புறமான இடத்தில் ஆசிரமம் கட்டியிருந்தார். அவரது உதவிக்கு என்று அங்கு யாரும் இல்லை. இதனால்தான் பனிக்கர் ஆசிரமத்தில் இறந்து கிடந்த தகவல் உடனடியாக யாருக்கும் தெரியவில்லை. அவரின் சடலம் அழுகிய நிலையில் காணப்படுவதால் அவர் இறந்து சில நாள்களாகியிருக்கும் என்று போலீஸார் கருதுகின்றனர்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், பனிக்கருக்கு 2 மகன்கள். ஒருவர் கோயம்புத்தூரிலும் இன்னொருவர் சென்னையிலும் வசித்துவருகின்றனர். சென்னையில் உள்ள மகனிடம் போனில் பனிக்கர் பேசியுள்ளார். அப்போது அவர் ஆசிரமத்தில் வேலை இருக்கிறது முடித்துவிட்டு வீட்டுக்கு வருகிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் அவர் வரவில்லை. இதனால்தான் சந்தேகமடைந்த பனிக்கரின் மகன் ஆசிரமத்துக்கு வந்துள்ளார். அப்போதுதான் அவர் இறந்த தகவல் வெளியில் தெரிந்துள்ளது.
பனிக்கர் இறப்பு குறித்து விசாரித்துவருகிறோம். குறிப்பாக பிரேத பரிசோதனை ரிப்போர்ட்டுக்காகக் காத்திருக்கிறோம். பனிக்கர் ஆசிரமத்தில் இருந்த சமயத்தில் யார், யார் வந்தார்கள் என்ற விவரங்களைச் சேகரித்துவருகிறோம் என்றனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆசிரமம், பண்ணை வீடுகள் ஊருக் ஒதுக்குப்புறத்தில் உள்ளன. கடந்த சில மாதங்களுக்கு முன், எறையாமங்கலத்தில் சாமியார் ஒருவர் தீயில் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். அவரின் இறப்பு குறித்து போலீஸார் விசாரித்து வரும் நேரத்தில் பனிக்கரும் சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் இறந்துள்ளார். எனவே, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆசிரமம், பண்ணை வீடுகளை போலீஸார் கண்காணிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.