Published:Updated:

`எம்.எல்.ஏ அராஜகம் தாங்க முடியல!' - 2 பக்கக் குறிப்பு எழுதிவைத்து விபரீத முடிவெடுத்த டாக்டர்

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பிரகாஷ் ஜார்வால்
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பிரகாஷ் ஜார்வால்

ராஜேந்திர சிங் அந்தப் பகுதியில் டெல்லி குடிநீர்வாரியத்துடன் 2007ம் ஆண்டு முதலே ஒப்பந்தம் செய்து வாட்டர் டேங்கர் தொழில் நடத்தி வந்துள்ளார்.

டெல்லி நேப்சராய் பகுதியைச் சேர்ந்த ராஜேந்திர சிங். 57 வயதான இவர் ஒரு மருத்துவர். மேலும் அந்தப் பகுதியில் வாட்டர் டேங்கர் பிசினஸ் செய்துவந்துள்ளார். இதற்கிடையே, நேற்று ராஜேந்திர சிங் அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்த நிலையில் பிணமாக மீட்கப்பட்டார். அவரின் சடலத்தைக் கைப்பற்றிய போலீஸார் தற்கொலைக்கான காரணங்கள் குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் வீட்டில் நடத்திய சோதனையில் இரண்டு பக்கக் குறிப்புகள் ராஜேந்திர சிங் கைப்பட எழுதியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதேபோல் ஒரு டைரியும் கண்டுபிடிக்கப்பட்டது. இரண்டிலும், ராஜேந்திர சிங், தனது தற்கொலைக்குக் காரணமாகக் குறிப்பிட்டிருந்தது ஆம் ஆத்மி எம்.எல்.ஏ பிரகாஷ் ஜார்வால் என்பவரைத்தான். ராஜேந்திர சிங் அந்தப் பகுதியில் டெல்லி குடிநீர்வாரியத்துடன் 2007ம் ஆண்டு முதலே ஒப்பந்தம் செய்து வாட்டர் டேங்கர் தொழில் நடத்தி வந்துள்ளார்.

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பிரகாஷ் ஜார்வால்
ஆம் ஆத்மி எம்.எல்.ஏ. பிரகாஷ் ஜார்வால்

இந்நிலையில்தான் இந்த ஒப்பந்தத்தை நீட்டிக்க வேண்டுமென்றால் பணம் வேண்டும் என்று எம்.எல்.ஏ பிரகாஷ் மீது புகார் கூறியவர், அதைத் தர மறுத்ததால் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அந்தக் குறிப்பில் கூறியுள்ளார். மேலும் பணம் கொடுக்க மறுத்ததால் டெல்லி குடிநீர் வாரிய சேவையிலிருந்து தனது லாரிகளை மட்டும் எம்.எல்.ஏ தன் செல்வாக்கினால் நிறுத்தியதாகவும் ராஜேந்திர சிங் கூறியுள்ளார்.

எம்.எல்.ஏ அராஜகம் தாங்க முடியாததால் தற்கொலை முடிவை எடுக்கிறேன் என்றும், பிரகாஷ் மீது மட்டுமல்லாமல் கபில் நாகர் என்பவர் மீதும் ராஜேந்திர சிங் புகார் எழுப்பியுள்ளார். இந்நிலையில் தற்கொலை செய்துகொண்ட ராஜேந்திர சிங் என்ற மருத்துவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ பிரகாஷ் ஜார்வால் மீது வழக்குப் பதிவு செய்தனர் டெல்லி போலீஸார். கொரோனா தொற்று விவகாரத்தில் ஆம் ஆத்மியின் டெல்லி அரசு கடும் சிரமங்களைச் சந்தித்து வரும் நிலையில் இந்தத் தற்கொலை விவகாரம் அம்மாநில அரசுக்குப் புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு