Published:Updated:

தேவகோட்டை: கடன் தொல்லை; மாமியார் கொடுமை!- 3 குழந்தைகளுடன் விபரீத முடிவெடுத்த தாய்

கடன் தொல்லையால் இறந்த பிரியதர்ஷினி
கடன் தொல்லையால் இறந்த பிரியதர்ஷினி

``மூன்று குழந்தைகளில் 2 பேர் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்தனர். சிகிச்சை பெற்றுவரும் ஹரிகிருஷ்னனும் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார்’’

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ். தனது அம்மாவின் சகோதரியும் வளர்ப்பு தாயுமான வசந்தா வீட்டில் ராமதாஸ் வளர்ந்தார். தனது திருமணத்துக்குப் பின்பும் குடும்பத்துடன் வளர்ப்புத் தாய் வசந்தாவுடன் ஒன்றாகவே வசித்து வந்திருக்கிறார்கள். மூன்று மாதங்களுக்கு முன் உடல் நலக்குறைவால் ராமதாஸ் இறந்தநிலையில், அவரது மனைவி பிரியதர்ஷனி தனது மகன் மற்றும் மகள்களுடன் அதே வீட்டில் வசித்து வந்திருக்கிறார்.

குழந்தைகள்
குழந்தைகள்

ராமதாஸ், பல்வேறு தொழில்களில் ஈடுபட்டபோது நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதற்காக நிறைய கடன் வாங்கியிருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால், ராமதாஸ் இறப்புக்குப் பின் பிரியதர்ஷினியின் பொறுப்பில் கடன் விழுந்துள்ளது. அதே சமயத்தில் கணவரின் வளர்ப்புத் தாய் வசந்தாவும், வீட்டைக் காலி செய்யுமாறு பிரியதர்ஷனியைத் தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். வசந்தாவுக்கு ஆதரவாக அவரது தம்பி ராஜேந்திரனும் பிரியதர்ஷினியை மிரட்டி வந்ததாகச் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 4-ம் தேதி இரவு ராஜேந்திரன் மிரட்டியதோடு பிரியதர்ஷினி மகளின் கையை முறுக்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பிரியதர்ஷனி, தனது பிள்ளைகள் பர்வதவர்த்தினி (16), திருநீலகண்டன் (14), ஹரிகிருஷ்ணன் (12), மூவருக்கும் எலி மருந்து கொடுத்துவிட்டு அவரும் எலி மருந்து சாப்பிட்டிருக்கிறார். இதில், பிர்யதர்ஷனி இறந்த நிலையில், அவரது குழந்தைகள் மூவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

கடன் தொல்லையால் இறந்த பிரியதர்ஷினி
கடன் தொல்லையால் இறந்த பிரியதர்ஷினி

இந்நிலையில், மகள் பர்வதவர்த்தினி மற்றும் மகன் திருநீலகண்டன் இருவரும் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தனர். ஹரிகிருஷ்ணன் மட்டும் மருத்துவமனையில் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையில், சிகிச்சை பெற்று வருகிறார். தாய் இறந்த சூழலில் இரண்டு பிள்ளைகளும் இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை: `குடும்ப வாழ்க்கை; உடல் ஆரோக்கியமின்மை' - திருமணமான 2 மாதத்தில் பட்டதாரிப் பெண் தற்கொலை

இதுகுறித்து போலீஸார் தரப்பில் விசாரித்தபோது, ``கடன் தொல்லை, மாமியார் கொடுமையால் பிரியதர்ஷினி கடுமையான மன் உளைச்சலில் இருந்திருக்கிறார். அதே போல் வசந்தாவின் தம்பி ராஜேந்திரன், மொத்த சொத்தையும் அபகரிக்கத் திட்டம் தீட்டியிருக்கிறார். இதனால், சந்தேக மரணமாக வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகிறோம். மூன்று குழந்தைகளில் 2 பேர் சிகிச்சை பலனின்றி இன்று மாலை உயிரிழந்தனர். சிகிச்சை பெற்றுவரும் ஹரிகிருஷ்னனும் கவலைக்கிடமான நிலையில் இருக்கிறார்’’ என்று தெரிவித்தனர்

அடுத்த கட்டுரைக்கு