Published:Updated:

மருத்துவர் லட்சுமி நரசிம்மன் மரணம்... அரசின் பழிவாங்கல் காரணமா?

லட்சுமி நரசிம்மன்
பிரீமியம் ஸ்டோரி
News
லட்சுமி நரசிம்மன்

ஊதிய உயர்வு போராட்டத்துக்குப் பிறகு தர்மபுரியிலிருந்து அவரை ராமநாதபுரத்துக்கு மாற்றியது அரசு. ‘என்னை டிஸ்மிஸ் செய்தாலும் பரவாயில்லை.

லட்சுமி நரசிம்மன்... தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவராக இருந்தவர். தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றிவந்தவர், பிப்ரவரி 7-ம் தேதி காலை மாரடைப்பால் இறந்தார். ‘`அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வுப் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தியதால், அரசின் பழிவாங்கும் நடவடிக்கையால்தான் இந்த மரணம் ஏற்பட்டது’’ என்று குமுறு கின்றனர் சக மருத்துவர்கள்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சேலம் மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி, ‘‘ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியை தனியார்மயமாக்க முயற்சி நடந்தது. தமிழ்நாடு முழுவதும் மருத்துவ மாணவர்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபட்டார் லட்சுமி நரசிம்மன். அப்போது குண்டர்களால் தாக்கப்பட்டு, 15 நாள்கள் சிறையில் இருந்தார்.

அனுராதா
அனுராதா

மேட்டூர் ராமன் நகரில் அவருடைய வீட்டில் சிறிய கிளினிக் மூலம் குறைந்த கட்டணத்தில் மருத்துவ சிகிச்சை அளித்தார். ஏழைகளுக்கு இலவச சிகிச்சை செய்தார். மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவராக நியாயமான போராட்டங்களை முன்னெடுத்தார். அதற்கு செவிசாய்க்காத அரசு, பல வழிகளிலும் அவருக்கு நெருக்கடி கொடுத்தது. அதனாலேயே மன உளைச்சல் ஏற்பட்டு அவர் மரணம் அடைந்தார்’’ என்றார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் சாமிநாதன், ‘‘ஊதிய உயர்வு போராட்டத்துக்குப் பிறகு தர்மபுரியிலிருந்து அவரை ராமநாதபுரத்துக்கு மாற்றியது அரசு. ‘என்னை டிஸ்மிஸ் செய்தாலும் பரவாயில்லை. சக மருத்துவர்களின் பணியிட மாற்றத்தைத் திரும்பப் பெற வேண்டும்’ என்று போராடிவந்தார். அதனால் ஏற்பட்ட மனஉளைச்சலால்தான் இறந்துவிட்டார்’’ என்றார்.

லட்சுமி நரசிம்மனின் மனைவி அனுராதா, ‘‘இதய நோயாளியாக இருந்தும் அதை பொருட்படுத்தாமல் அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வுக்காகப் போராடினார். சேலத்துக்கும் சென்னைக்கும் 200 முறை சென்றிருப்பார். 43 முறை அமைச்சரையும் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசினார். சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை மூன்று முறை மேற்கொண்டார். ‘வெளிநாடு சென்று திரும்பிய பிறகு சம்பளத்தை உயர்த்துகிறேன்’ என்று சொல்லி அமைச்சர் விஜயபாஸ்கர் ஏமாற்றினார். மருத்துவர்கள் கேட்ட ஊதிய உயர்வு, அரசுக்கு ஒரு சோற்றுப் பருக்கையைப் போன்றது. அதைத் தராமல் பணியிட மாற்றம் செய்தார்கள். போதும்... என் கணவரின் மரணமே இறுதியாக இருக்க வேண்டும். இனியாவது மருத்துவர்களின் கோரிக்கையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்’’ என்றார்.

ராமமூர்த்தி - சாமிநாதன்
ராமமூர்த்தி - சாமிநாதன்

இதுபற்றி சுகாதாரத் துறை அமைச்சர் தரப்பில் கேட்டபோது, ‘‘லட்சுமி நரசிம்மன் சிறந்த மனிதர், நல்ல மருத்துவர். மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்றப்போகிறோம். அதுகுறித்து சட்டசபையில் ஆளுநர் முன்னிலையில் முதல்வர் அறிவித்துவிட்டார். அரசுப் பணியாளர்கள் அனைவருக்கும் பணி மாறுதல் இயல்பானது. நல்ல மனிதரின் மரணத்தை அரசியலாக்கக் கூடாது’’ என்றனர்.