Published:Updated:

“திருட்டை ஒப்புக்க சொல்லி பைப்பாலேயே அடிச்சாங்க!” - மாற்றுத்திறனாளியை கொலை செய்ததா போலீஸ்?

பிரபாகரன்
பிரீமியம் ஸ்டோரி
பிரபாகரன்

‘ஜட்ஜ்கிட்ட ஏதாவது சொன்னா, உங்க கேஸை 10 வருஷத்துக்கு இழுத்தடிச்சுடுவோம்’னு போலீஸ் மிரட்டவும், நாங்க எதுவும் சொல்லலை

“திருட்டை ஒப்புக்க சொல்லி பைப்பாலேயே அடிச்சாங்க!” - மாற்றுத்திறனாளியை கொலை செய்ததா போலீஸ்?

‘ஜட்ஜ்கிட்ட ஏதாவது சொன்னா, உங்க கேஸை 10 வருஷத்துக்கு இழுத்தடிச்சுடுவோம்’னு போலீஸ் மிரட்டவும், நாங்க எதுவும் சொல்லலை

Published:Updated:
பிரபாகரன்
பிரீமியம் ஸ்டோரி
பிரபாகரன்

தமிழகத்தில் மீண்டும் ஒருமுறை போலீஸாரின் கொடூரத் தாக்குதலுக்கு ஓர் உயிர் பலியாகியிருக்கிறது. இரண்டு கால்களும் செயல்படாத, செவித்திறன் குறைபாடுடைய ஒரு மாற்றுத்திறனாளி மீதுதான் இம்முறை தாக்குதலைத் தொடுத்திருக்கிறார்கள் காவலர்கள். நகைத் திருட்டு விசாரணைக்காக, காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றவரை பிணமாக்கி அனுப்பியிருக்கிறது காவல்துறை!

நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவரின் வீட்டில், கடந்த நவம்பர் மாதம் 20 பவுன் தங்க நகை திருடு போயிருக்கிறது. இதையடுத்து, சேலம் கருப்பூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான பிரபாகரன் (45), அவரின் மனைவி ஹம்சலா (32) ஆகியோரை சேந்தமங்கலம் போலீஸார் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். பின்னர், போலீஸ் குவாட்டர்ஸில் வைத்து சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது. ஜனவரி 11-ம் தேதி பிரபாகரனை நாமக்கல் கிளைச் சிறையிலும், ஹம்சலாவை சேலம் சிறையிலும் அடைத்துள்ளார்கள். இந்த நிலையில்தான், பிரபாகரனுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் உயிரிழந்திருக்கிறார்.

 “திருட்டை ஒப்புக்க சொல்லி பைப்பாலேயே அடிச்சாங்க!” - மாற்றுத்திறனாளியை கொலை செய்ததா போலீஸ்?

இதையடுத்து பிரபாகரனின் குடும்பத்தினரும், வி.சி.க., சி.பி.எம் கட்சி நிர்வாகிகளும் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் இறங்கினார்கள். அதன் பிறகே சேந்தமங்கலம் எஸ்.ஐ-க்கள் சந்திரன், பூங்கொடி, ஏட்டு குழந்தைவேலு ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரபாகரனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்ததுடன், அவரது குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கவும், இந்த விவகாரம் குறித்து சி.பி.சி.ஐ.டி விசாரிக்கவும் உத்தரவிட்டிருக்கிறார்.

பிரபாகரனின் வீட்டுக்குச் சென்றோம். ஹம்சலா நம்மிடம் அழுதுகொண்டே பேசினார்... ‘‘ஜனவரி 8-ம் தேதி மதியானம் மூன்றரை மணிக்கு மூணு ஆம்பளை போலீஸ், ஒரு பொம்பளை போலீஸ்னு நாலு பேர் வீட்டுக்கு வந்தவங்க, எடுத்த எடுப்புலயே என் புருஷனை அடிக்க ஆரம்பிச்சாங்க. எங்களை ஒரு கார்ல ஏத்திக்கிட்டு சேந்தமங்கலம் ஸ்டேஷனுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. அங்க கொஞ்ச நேரம் வெச்சிருந்துட்டு, ஒரு போலீஸ் குவாட்டர்ஸுக்கு எங்களைக் கூட்டிட்டுப் போனாங்க. அங்க ஏழெட்டு போலீஸ்காரங்க வந்து, 125 பவுன் நகையை நாங்க திருடிட்டோம்னு ஒப்புக்கச் சொல்லி எங்களை பைப்பாலேயே அடிச்சாங்க.

சரோஜ் குமார் டாகுர்
சரோஜ் குமார் டாகுர்

ஒரு போலீஸ்காரரு பூட்ஸ் கால்ல என் வீட்டுக்காரர் வயித்துலேயே ஓங்கி மிதிச்சாரு... மூணு நாளு அங்கேயே எங்களை அடைச்சு வெச்சு, சித்ரவதை செஞ்சுட்டு 11-ம் தேதி மதியானம் அவரை நாமக்கல் ஜெயில்லயும், என்னை சேலம் ஜெயில்லயும் அடைச்சுட்டாங்க. ‘ஜட்ஜ்கிட்ட ஏதாவது சொன்னா, உங்க கேஸை 10 வருஷத்துக்கு இழுத்தடிச்சுடுவோம்’னு போலீஸ் மிரட்டவும், நாங்க எதுவும் சொல்லலை’’ என்றவரிடம், “எப்படி சம்பந்தமே இல்லாமல் போலீஸ் உங்களைத் தேடி வந்தது?’ என்று கேட்டபோது இன்னொரு தகவலையும் சொன்னார். “நாமக்கல்ல இருக்குற எங்க அக்கா வீட்டுக்காரரு நடராஜன், போன டிசம்பர் மாசம் நாலு பவுன் நகையை எங்ககிட்ட கொடுத்து, அடகுவெச்சுத் தரச் சொன்னார். நாங்களும் அடகுவெச்சு பணத்தைக் கொடுத்தோம். அடுத்த வாரமே அதை அவர் காசு கொடுத்து மீட்டுட்டு போயிட்டாரு. அது திருட்டு நகையாங்கிறதெல்லாம் எங்களுக்குத் தெரியாது” என்றார்.

 “திருட்டை ஒப்புக்க சொல்லி பைப்பாலேயே அடிச்சாங்க!” - மாற்றுத்திறனாளியை கொலை செய்ததா போலீஸ்?

பிரபாகரனின் 15 வயது மூத்த மகன் ஜோயல் நம்மிடம், ‘‘ஜனவரி 12 அன்னைக்கு காலையில 9 மணிக்கு எங்க பெரியம்மா பொண்ணுக்கு போலீஸ்காரங்க போன் பண்ணி ‘பிரபாகரனுக்கு உடம்பு சரியில்லை. நாமக்கல் ஜி.ஹெச்ல சேர்த்துருக்கோம்’னு சொன்னாங்க. கொஞ்ச நேரத்துலயே ‘அவருக்கு ரொம்ப க்ரிட்டிக்கலா இருக்கு. சேலம் ஜி.ஹெச் கொண்டுட்டு வர்றோம். உடனே வாங்க’னு சொல்லியிருக்காங்க. நான் ஜி.ஹெச்-க்கு போய் என்னன்னு போலீஸ்காரங்ககிட்ட கேட்டதுக்கு ‘சின்ன மயக்கம்’னு சொன்னாங்க. அங்கே இருந்த டாக்டர்கிட்ட கேட்டப்ப ‘வர்றப்பவே நினைவு இல்லை. பல்ஸ் கம்மியாத்தான் இருந்துச்சு’னு சொன்னாங்க. கொஞ்ச நேரத்துலேயே அப்பாவோட மூக்குல இருந்து ரத்தம் வந்துச்சு. ராத்திரி 11:40 வாக்குல அப்பா செத்துட்டாருன்னு சொல்லிட்டாங்க’’ என்று தேம்பினார்.

ஹம்சலா
ஹம்சலா

பிரபாகரன் மரணத்துக்கு நீதி கேட்டுப் போராடிவரும் சி.பி.எம் கட்சியின் சேலம் மாவட்டச் செயலாளர் மேவை.சண்முகராஜா நம்மிடம், ‘‘ஒருவேளை அவங்க ரெண்டு பேரும் குற்றவாளிகளாகவே இருந்தாலும் அடிக்கிறது, சித்ரவதை செய்யறது எந்தவிதத்துலங்க நியாயம்... அவங்களை ஸ்டேஷன்ல வெச்சு விசாரிக்காம குவாட்டர்ஸ்ல வெச்சு விசாரிச்சது ஏன்? பிரேத பரிசோதனை செஞ்சப்ப பிரபாகரனோட ஆணுறுப்பைச் சுத்தி காயங்கள் இருந்துச்சு. இந்த விவகாரத்துல சம்பந்தப்பட்ட போலீஸ்காரங்க மேல கொலை வழக்கு பதிவுசெஞ்சு கடும் நடவடிக்கை எடுக்கணும்’’ என்றார்.

மேவை.சண்முகராஜா
மேவை.சண்முகராஜா

நாமக்கல் மாவட்ட எஸ்.பி சரோஜ் குமார் டாகுரிடம் பேசுவதற்காக அவருக்கு போன் செய்தும், மெசேஜ் மற்றும் வாய்ஸ் நோட் அனுப்பியும் அவரிடமிருந்து ரெஸ்பான்ஸ் இல்லை. நாமக்கல் மாவட்ட தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாக்கியலட்சுமியிடம் பேசியபோது, ‘‘இது விஷயமாகத்தான் சார் ஒரு வீடியோ கான்ஃபரன்ஸ்ல இருக்காங்க. அது முடிஞ்சதும் நான் சார்கிட்ட பேசிட்டுச் சொல்றேன்’’ என்றார். ஆனால், இதழ் அச்சுக்குச் செல்லும் வரை எஸ்.பி தரப்பிலிருந்து எந்த பதிலும் கிடைக்கவில்லை.

பூட்ஸ் கால்களின் அதிகார வெறிக்கு இன்னும் எத்தனை உயிர்கள்தான் பறிபோகுமோ?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism