Election bannerElection banner
Published:Updated:

`கொரோனாவால் உயிரிழந்த நாட்டின் முதல் எம்.எல்.ஏ' - ஜெ.அன்பழகன் மறைவால் கலங்கும் உடன்பிறப்புகள்

ஜெ.அன்பழகன்
ஜெ.அன்பழகன்

தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன் மறைவு அக்கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ-வான ஜெ.அன்பழகன், தி.மு.க முன்னணி நிர்வாகிகளில் ஒருவர். அக்கட்சியின் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்துவந்த அவர், கொரோனா தொற்று காரணமாக வேலையிழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வந்தார்.

ஜெ.அன்பழகன்- ஸ்டாலின்
ஜெ.அன்பழகன்- ஸ்டாலின்

இந்தநிலையில், கடந்த சில நாள்களுக்கு முன் திடீரென வயிற்றுவலி ஏற்படவே, குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் கடந்த 2-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்குக் கொரோனா அறிகுறிகள் இருக்கவே, அதற்கான பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அன்பழகனுக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. ஏற்கெனவே கல்லீரல் பாதிப்புக்காக அறுவைசிகிச்சை செய்துகொண்டவர் அன்பழகன். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சூழலில், அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்படவே தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

கல்லீரல் பாதிப்பு, கொரோனா தொற்று... இப்போது எப்படியிருக்கிறார் ஜெ.அன்பழகன்?

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தநிலையில், மூச்சுவிட தொடர்ந்து சிரமப்பட்டதால், வென்டிலேட்டரில் வைக்கப்பட்டார். திடீரென அவர் உடல்நிலை மோசமடைந்ததால், உடலுக்குத் தேவையான ஆக்சிஜனில் 80 சதவிகிதம் வென்டிலேட்டர் மூலமே அளிக்கப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது. இந்தநிலையில், இன்று காலை அவரது உடல்நிலை மோசமடைந்தது. சிகிச்சைப் பலனின்றி அவர் காலை 8.05 மணியளவில் உயிரிழந்ததாக ரேலா மருத்துவமனை அதிகாரபூர்வமாக அறிவித்தது.

ரேலா மருத்துவமனை
ரேலா மருத்துவமனை
வி.சதிஷ்குமார்

இன்று 62-வது பிறந்தநாள் காணும் அன்பழகன், பிறந்தநாளன்றே இயற்கை எய்தியிருக்கிறார். அவரது மறைவு தி.மு.கவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுதொடர்பாக தி.மு.க தலைவர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். ``என் அன்புச் சகோதரா அன்பழகா! இனி என்று காண்போம் உன்னை!’’ என்று தொடங்கும் அந்த அறிக்கையில், ``இதயத்தில், இடியும் மின்னலும் ஒருசேர இறங்கியது போன்ற செய்தியா காலை நேரத்தில் வரவேண்டும்? திராவிட இயக்கத்தின் தீரர் பழக்கடை ஜெயராமனின் செல்ல மகன், தலைவர் கலைஞரின் அன்பையும் ஆதரவையும் அளவின்றிப் பெற்ற உடன்பிறப்பு, பாசத்திற்குரிய சகோதரர், பம்பரமாய்ச் சுழன்று பணியாற்றிய ஆற்றல்மிகு தளகர்த்தர், சென்னை மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் அவர்கள் நம்மை விட்டுப் பிரிந்தே விட்டார் என்ற செய்தியை ஏற்க ஏனோ என் மனம் மறுக்கிறது’’ என்று கூறியிருக்கிறார்.

மேலும், ``ஜெ.அன்பழகனின் பொதுவாழ்வு – கழகப்பணி - தியாக உணர்வுக்குத் தலைவணங்கி, கண்ணீர் பெருக்குவதன்றி, வேறு வழி எனக்குத் தெரியவில்லை. கழகத்தின் தீரமிக்க உடன்பிறப்பு - மக்கள் பணியிலேயே தன்னுயிர் ஈந்த அன்புச்சகோதரர் ஜெ.அன்பழகனின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் கழகத்தின் சார்பில் 3 நாள்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது. கழகக் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடுவதுடன், கழகத்தின் சார்பில் திட்டமிடப்பட்டிருந்த அனைத்து நிகழ்ச்சிகளையும் ஒத்திவைத்து, ஜெ.அன்பழகனின் தியாக வாழ்வைப் போற்றுவோம்’’ என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டிருக்கிறார்.

ஜெ.அன்பழகன்
ஜெ.அன்பழகன்
`தீவிர சிகிச்சையில் தி.மு.க எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன்' - மருந்து அனுப்பி உதவிய ஆளுநர் தமிழிசை

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``தி.மு.க சட்டமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் முன்னோடி நிர்வாகிகளில் ஒருவருமான ஜெ.அன்பழகன் அவர்கள் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது. அன்னாரது குடும்பத்தினருக்கும் அவர் சார்ந்த இயக்கத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று இரங்கல் தெரிவித்திருக்கிறார். துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தி.மு.க தலைவர் ஸ்டாலினை போனில் தொடர்புகொண்டு அன்பழகன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ-வான ஜெ.அன்பழகன், ஏற்கெனவே 2001-2006, 2006-2011 என இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகப் பதவி வகித்துள்ளார். நாட்டிலேயே முதல்முறையாக கொரோனா தொற்றுக்கு எம்.எல்.ஏ ஒருவர் உயிரிழந்திருக்கிறார். இந்த விவகாரம் மத்திய உள்துறை அமைச்சகம், சுகாதாரத்துறையின் கவனத்துக்கும் சென்றிருக்கிறது. அவரது இறுதிச்சடங்கு இன்று மாலை நடைபெற இருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு