Published:Updated:

செவிலியர்கள் புடைசூழ இறுதி ஊர்வலம் - அரசு மரியாதையுடன் மருத்துவர் சாந்தாவின் உடல் தகனம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மருத்துவர் சாந்தாவின் இறுதி ஊர்வலம்
மருத்துவர் சாந்தாவின் இறுதி ஊர்வலம்

தன்னலமற்று மக்கள் சேவையாற்றிய புற்றுநோய் மருத்துவர் சாந்தாவின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சியில் உலகப் புகழ்பெற்ற மருத்துவரான சாந்தா, சென்னையில் உள்ள அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவராக இருந்து வந்தார். உடல் நலக்குறைபாடு காரணமாகத் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று அதிகாலை உயிரிழந்தார். ஏழை எளிய மக்களுக்கும் புற்றுநோய் சிகிச்சை கிடைக்கத் தனது கடைசிக் காலம்வரை அயராது உழைத்தவர்.

சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர் அஞ்சலி
சுகாதாரத்துறை அமைச்சர், செயலாளர் அஞ்சலி

இவரின் இறப்புக்குப் பிரதமர் மோடி உட்பட பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரமுகர்களும், பொது மக்களும் இரங்கல் தெரிவித்தனர். இவரின் இறப்புக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ``மருத்துவர் சாந்தாவின் தன்னலமற்ற சேவையைக் கௌரவிக்கும் விதமாக அவரது இறுதிச்சடங்கு காவல்துறை மரியாதையுடன் நடைபெறும்’' என்று தெரிவித்திருந்தார்.

`அடையாற்றின் மற்றோர் ஆலமரம்’... மருத்துவர் சாந்தா காலமானார்!

இன்று காலை முதலே அவரின் உடலுக்கு ஏராளமான அரசியல் கட்சித் தலைவர்களும், சகபணியாளர்களும், பொதுமக்களும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். மருத்துவர் சாந்தாவிடம் சிகிச்சைபெற்று குணமடைந்தவர்கள், அவர்களது உறவினர்கள் என நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சென்னை வந்து பொதுமக்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.

அவரின் உடல் பெசன்ட்நகர் மின்மயானத்தில் தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. அரசு மரியாதையுடன் அவரின் இறுதி ஊர்வலம் நடந்தது. நூற்றுக்கணக்கான செவிலியர்கள் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டனர். அவரின் இறுதி ஊர்வலத்தில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவர்கள்,சுகாதார ஊழியர்கள், நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டனர். பெசன்ட் நகர் மின் மயானத்தில் காவல்துறையினரின் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் மருத்துவர் சாந்தாவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

``மருத்துவர் சாந்தாவின் இழப்பு, மருத்துவத் துறையில் ஈடுசெய்ய முடியாத ஒன்று" என தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு