Published:Updated:

``என் சாவுக்கு அந்த 3 பேர் தான் காரணம்!" - கடிதம் எழுதி வைத்துவிட்டு விபரீத முடிவெடுத்த பள்ளி மாணவி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மன உளைச்சலில் தற்கொலை
மன உளைச்சலில் தற்கொலை ( சித்தரிப்புப் படம் )

மாணவி தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பு, தன் சாவுக்கு இளைஞர்கள் மூன்றுபேர்தான் காரணம் எனக் கடிதம் எழுதியிருக்கிறார்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகிலிருக்கும் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ரமேஷ் - லட்சுமி தம்பதியர் (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது). ரமேஷ் அந்தியூர் பகுதியிலிருக்கும் ஹோட்டல் ஒன்றில் சமையல் மாஸ்டராக வேலை பார்த்துவருகிறார். லட்சுமி ஈரோடு மார்க்கெட்டில் காய்கறி வியாபாரம் செய்துவருகிறார். இந்தத் தம்பதிக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். மூத்த மகள் ரேகா (17) (பெயர் மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது) அந்தியூர் அரசுப் பள்ளியில் ப்ளஸ் ஒன் வகுப்பு படித்துவந்தார். இந்த நிலையில், நேற்றிரவு சுமார் 8 மணியளவில் மார்க்கெட் வியாபாரத்துக்குச் சென்றிருந்த தாய் லட்சுமிக்கு போன் செய்த ரேகா, ``என் ஃப்ரெண்ட் கவிதாவோட (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) அம்மா செல்வி என்னைக் கண்டபடி கெட்ட வார்த்தையால பேசிட்டாங்க. என்னால தாங்கிக்கவே முடியலை. நான் எந்தத் தப்பும் செய்யலை" எனக் கண்ணீர்விட்டு அழுதிருக்கிறார். இதைக் கேட்ட தாய் லட்சுமியோ, ``நீ அழுகாதம்மா. நான் காலையில வீட்டுக்கு வந்ததும் அவங்ககிட்ட என்ன பிரச்னைன்னு விசாரிக்கிறேன்" என ஆறுதல் சொல்லி அமைதிப்படுத்திவிட்டு போனை வைத்திருக்கிறார்.

போனை வைத்த சில நிமிடங்களிலேயே, ரேகா தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக லட்சுமிக்கு அவர் உறவினர்கள் போன் அடித்து விஷயத்தைச் சொல்லியிருக்கின்றனர். அதைக் கேட்டு அதிர்ந்துபோன லட்சுமி உடனடியாக வீட்டுக்கு விரைந்திருக்கிறார். தகவலறிந்து வெள்ளித்திருப்பூர் போலீஸாரும் சம்பவ இடத்துக்கு வந்து தற்கொலை செய்துகொண்ட ரேகாவின் சடலத்தைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், ரேகாவின் தற்கொலைக்குக் காரணம் என்ன என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணையில் இறங்கினர்.

மன உளைச்சல்
மன உளைச்சல்
சித்தரிப்புப் படம்

விசாரணையில், தற்கொலை செய்துகொண்ட ரேகாவும், கவிதா என்ற பெண்ணும் பள்ளித்தோழிகள். உறவினர்களும்கூட. கடந்த சில நாள்களாகவே கவிதாவின் செல்போனுக்கு இளைஞர்கள் சிலர் தொடர்ச்சியாக போன் செய்து தொந்தரவு கொடுத்திருக்கின்றனர். இது தெரிந்து சம்பந்தப்பட்ட இளைஞர்களுக்கு போன் செய்த கவிதாவின் தாயார் செல்வி, ``என் மகளோட நம்பர் உங்களுக்கு எப்படிக் கிடைச்சுது?" எனக் கடுமையாகப் பேசியிருக்கிறார். அதற்கு அந்த இளைஞர்களோ, ``ரேகாதான் எங்களுக்கு உங்க பொண்ணோட நம்பரைக் கொடுத்தா!" என்றிருக்கின்றனர். இதைக் கேட்டு ஆத்திரமடைந்த செல்வி, ``எதுக்காக என் பொண்ணோட நம்பரைப் பசங்ககிட்ட தேவையில்லாம கொடுத்தே" என ரேகாவைக் கண்டபடி திட்டியிருக்கிறார். இதில் மனமுடைந்த ரேகா என்ன செய்வதெனத் தெரியாமல் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார் என்பது தெரியவந்தது.

பள்ளி மாணவி தற்கொலை
பள்ளி மாணவி தற்கொலை
சித்தரிப்புப் படம்

இதற்கிடையே மாணவி ரேகா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு, `தஞ்சாவூரைச் சேர்ந்த ரஞ்சித், அருண், தினேஷ் ஆகிய மூவரும்தான் என் இறப்புக்குக் காரணம்’ எனக் கடிதம் ஒன்றையும் எழுதிவைத்திருக்கிறார். அதைக் கைப்பற்றியிருக்கும் போலீஸார் அந்த நபர்கள் யார் என்பது குறித்தும், ரேகாவின் தற்கொலைக்கு வேறு யாரெல்லாம் காரணம் என்பது குறித்தும் விசாரித்துவருகின்றனர்.

ஈரோடு: மாயமான 2-வது மகள்: 9 வயது குழந்தையுடன் தற்கொலை செய்துகொண்ட குடும்பத்தினர்!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு