Published:Updated:

`இது பொதுப் பாதையல்ல; பட்டா நிலம்'- பக்கத்து வீட்டுக்காரரால் இரவில் பிணத்துடன் போராட்டம் செய்த குடும்பம்!

இவர்களது வீட்டுக்கும் கோயிலுக்கும் நான்கரை அடிதான் இடைவெளி. சோமசுந்தரத்தின் வீடு மட்டும் நடுவில் அமைந்ததால், பக்கத்து வீட்டுக்காரர்கள் அனுமதிக்க மறுக்கிறார்கள்.

வீட்டுக்குள் பிணத்துடன் போராட்டம்
வீட்டுக்குள் பிணத்துடன் போராட்டம்

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகில் உள்ள நரசிம்மப்புரம் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ஒருவர் நேற்று மரணம் அடைந்தார். அவரது பிணத்தை எடுத்துச்செல்ல, பக்கத்து வீட்டுக்காரர்கள் பாதை மறுத்ததால், அந்த முதியவரின் குடும்பத்தினர், வீட்டுக்குள்ளேயே பிணத்துடன் பலமணி நேரம் காத்திருப்புப் போராட்டம் நடத்திய பரிதாப சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிணத்துடன் போராட்டம்
பிணத்துடன் போராட்டம்

இங்குள்ள தண்டு மாரியம்மன் கோயிலின் அருகில் உள்ள குடியிருப்பில், விவசாய கூலித்தொழிலாளி சோமசுந்தரம் மற்றும் சிலரின் வீடுகள் அமைந்துள்ளன. 1996-ம் ஆண்டு இங்குள்ள குடும்பங்களுக்கு, ஏழைகளுக்கான இலவச வீட்டுமனைப் பட்டாவை வருவாய்த்துறையினர் வழங்கியுள்ளார்கள். இவர்களது வீட்டுக்கும் கோயிலுக்கும் நான்கரை அடிதான் இடைவெளி. சோமசுந்தரத்தின் வீடு மட்டும் நடுவில் அமைந்ததால், இருபக்கமும் உள்ள வீடுகளின் முன்பக்க பாதை வழியாகத்தான் சோமசுந்தரத்தின் குடும்பத்தினர் வெளியில் சென்று வர முடியும் என்ற நிலை இருக்கிறது.

இந்நிலையில்தான், 6 மாதங்களுக்கு முன்பு சோமசுந்தரத்தின் குடும்பத்தினர், தங்கள் வீட்டின் வழியாக செல்லக்கூடாது என இரு பக்கமும் உள்ள குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். இதற்கு அவர்கள் கூறிய காரணம், இது பொதுப் பாதையல்ல. தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பட்டா நிலத்துக்குள்தான் இந்த இடம் வருகிறது. இப்போதுதான் தெரியவந்தது என அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

பட்டா வழங்கியபோதே வருவாய்த்துறையினர், இந்த வழியை பொதுப் பாதையாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும். வருவாய்த்துறையினரின் கவனக்குறைவால், பல ஆண்டுகளுக்குப் பிறகு சோமசுந்தரத்தின் குடும்பத்தினர், பலவிதமான சோதனைகளைச் சந்திக்கத் தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பாக, 95 வயது முதியவரான சோமசுந்தரம், கடந்த சில மாதங்களாக உடல்நிலை மோசமான நிலையில் இருந்ததை அறிந்து, இவர் இறந்துபோனால், பிணத்தைத் தங்களது வீட்டின் வழியாக எடுத்துச் செல்லக்கூடாது என பக்கத்துவீட்டுக்காரர்கள் முன்கூட்டியே எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். சோமசுந்தரத்தின் மனைவி மனோன்மணி, மகள் சுபா உள்ளிட்டவர்கள், இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் பலமுறை முறையீட்டும் தீர்வு கிடைக்கவில்லை.

பிணத்துடன் போராட்டம்
பிணத்துடன் போராட்டம்

இந்நிலையில்தான், நேற்று இரவு சோமசுந்தரம் மரணமடையவே, ஏற்கெனவே சொன்னதுபோல், பிணத்தை எடுத்துச்செல்ல, பக்கத்து வீட்டுக்காரர் பாதை மறுத்திருக்கிறார். இதனால், என்ன செய்வதென்று தெரியாமல், நேற்றிலிருந்து இன்று மதியம் வரை சோமசுந்தரம் குடும்பத்தினர், அவரது பிணத்துடன் வீட்டுக்குள்ளேயே காத்திருப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்திருயிருக்கிறார்கள்.

இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், இப்பிரச்னையை முதலமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டவர்களின் கவனத்துக் கொண்டுசென்ற பிறகே, வருவாய்த்துறை அதிகாரிகள் இங்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி, பிணத்தை எடுத்துச்செல்ல பாதை அனுமதிக்க, பக்கத்துவீட்டுக்காரரை சம்மதிக்கவைத்துள்ளார்கள். வருவாய்த்துறையினரின் பதிவேட்டில், இக்குடியிருப்பின் முன்புறம் உள்ள இடம், பொதுப்பாதை என அறிவித்தால்தான், நாங்கள் நிம்மதியாக சுதந்திரமாக நடமாட முடியும் என்கிறார்கள், சோமசுந்தரத்தின் குடும்பத்தினர்.