Published:Updated:

`உள்பக்கம் பூட்டிய வீடு; தாயின் முரணான தகவல்!’ - `ஜாகீ'ஸ் குக்புக்’ புகழ் ஜாகீ ஜான் மர்ம மரணம்

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வீட்டின் சமையலறையில் மாடல் ஜாகீ ஜான் மர்மமாக இறந்துகிடப்பதைப் பார்த்துள்ளனர்.

மாடல்  ஜாகீ ஜான்
மாடல் ஜாகீ ஜான் ( facebook )

கேரளாவில், தொலைக்காட்சி பிரபலமாகவும் மாடலாகவும் பரவலாக அறியப்படுபவர் ஜாகீ ஜான். இவர், திருவனந்தபுரத்தில் உள்ள தன்னுடைய வீட்டின் சமையலறையில் மர்மமான முறையில் இறந்துகிடந்துள்ளார். இச்சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

represent photo
represent photo

கேரளா மாநிலம் கொச்சியிலுள்ள ஜாகீயின் நண்பர் கடந்த திங்கள்கிழமையன்று அவரை அலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். நீண்ட நேரமாக அழைப்பை எடுக்காததால் சந்தேகமடைந்த நண்பர், ஜாகீயின் வீட்டின் அருகிலுள்ள மருத்துவரான நண்பர் ஒருவரைத் தொடர்புகொண்டு சம்பவம் குறித்துக் கூறியுள்ளார். இவர், ஜாகீயின் வீட்டிற்கு திங்கள்கிழமை மாலை சென்று பார்த்துள்ளார்.

கதவு உள்பக்கமாகப் பூட்டப்பட்டிருந்ததைப் பார்த்த நண்பர், பெரூர்கடா காவல்நிலையத்துக்குத் தகவல் கொடுத்துள்ளார். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், வீட்டின் சமையலறையில் ஜாகீ இறந்துகிடப்பதைப் பார்த்துள்ளனர். உடனடியாக தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதுதொடர்பாக ஊடகங்களிடம் பேசிய காவல்துறையினர், ``இந்த வழக்கை விசாரித்து வருகிறோம். பிரேத பரிசோதனைக்குப் பின்னரே எதைப் பற்றியும் உறுதியாகச் சொல்ல முடியும்” என்று கூறியுள்ளனர். மேலும், ``ஜாகீயின் தாய் முன்னுக்குப் பின் முரணான தகவல்களைக் கூறிவருகிறார். தற்கொலைக்காக வாய்ப்பு இருக்கிறதா என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது” என்று தெரிவித்துள்ளனர்.

ஜாகீ
ஜாகீ
facebook

கேரளாவிலுள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ’ஜாகீ'ஸ் குக்புக்’ என்ற சமையல் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர், ஜாகீ ஜான். காக்டெய்ல் மற்றும் லிட்டில் குக்ஸ் ஆகிய நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்குகிறார். மோட்டிவேஷனல் பேச்சாளராகவும் பாடகராகவும் இருக்கிறார். அழகுப் போட்டிகள் தொடர்பான நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்துள்ளார். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்ற ஜாகி, தனது தாயுடன் வசித்து வந்தது குறிப்பிடத்தக்கது.