Published:Updated:

கடன் பெற நண்பனுக்கு உதவிய விவசாயி தற்கொலை... சோகத்தில் மூழ்கிய பேராவூரணி கிராமம்

பெரியசாமி
பெரியசாமி ( ம.அரவிந்த் )

தன்னுடன் பழகிய நண்பன் கேட்டுக் கொண்டான் என்பதற்காகத் தனக்கு இருந்த ஒரே சொத்தான அந்த வீட்டைக் காண்பித்து ஜாமீன் போட்டுக் கடன் பெற்றுத் தந்துள்ளார். ஆனால், கடன் பெற்றவரான மாரிமுத்து உண்மையாக நடந்துகொள்ளவில்லை.

பேராவூரணி அருகே உள்ள ருத்தர சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் பெரியசாமி விவசாயக் கூலியான இவருக்கு இரண்டு மகன்கள் ஒரு மகள் உள்ளனர். பெரியசாமியும் பொலக்குடி கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரும் நண்பர்கள். மாரிமுத்துவிற்குக் குறைந்த வயதுதான் என்றாலும் அவருடன் மிகுந்த நட்புடன் பழகி வந்துள்ளார் பெரியசாமி.

பேராவூரணி
பேராவூரணி

இந்த நிலையில் மாரிமுத்து தொழில் தொடங்குவதற்காக தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் கடன் கேட்டுள்ளார். அவர்கள் ஏதேனும் சொத்து இருந்தால் அதைக் காண்பித்து லோன் பெற்றுக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளனர். இதைத் தொடர்ந்து மாரிமுத்து பெரிசாமியிடம் விவரத்தைக் கூறி தனக்கு உதவுமாறு கேட்டுள்ளார்.

நண்பர் ஒருவர் தொழில் செய்யவதற்கு தம்மால் முடிந்த உதவியைச் செய்வோம் என நினைத்த பெரியசாமி, மாரிமுத்து கேட்டுக்கொண்டதன் பேரில் நிதி நிறுவனத்தில் தன்னுடைய ஒரே வீடான ஓட்டு வீட்டுடன் கூடிய சொத்தைக் காண்பித்து ஜாமீன் கையொப்பமும் போட்டிருக்கிறார். இதைத் தொடர்ந்து 2016-ம் ஆண்டு ரூ.8 லட்சம் கடன் தொகையை நிதி நிறுவனத்திலிருந்து மாரிமுத்து பெற்றிருக்கிறார்.

பெரியசாமி
பெரியசாமி

ஆனால், அதன் பிறகு மாத மாதம் கடன் தொகையை முறையாகச் செலுத்தவில்லை. இதனால் தனியார் நிதி நிறுவனத்திலிருந்து பெரியசாமிக்கு நோட்டீஸ் அனுப்பி வந்துள்ளனர். மேலும் கடன் தொகையைக் கட்டத் தவறினால் வீட்டை ஜப்தி செய்வோம் என்றும் கூறியுள்ளனர். இதனால் பெரியசாமி மனமுடைந்த நிலையில் இருந்துள்ளார். இது தொடர்பாக மாரிமுத்துவிடம் கேட்டதற்குச் சரியான பதில் சொல்லவில்லை எனத் தெரிகிறது. இதையடுத்து கடந்த 14ம் தேதி வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தைக் குடித்து விட்டார்.

உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று பெரியசாமி இறந்து விட்டார். இதனால் அந்தப் பகுதியே சோகத்தில் மூழ்கியுள்ளது. இது குறித்து போராவூரணி போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

ருத்தரசிந்தாமணி கிராமத்தில் சிலரிடம் பேசினோம், ``பெரியசாமி ரொம்பவும் இரக்க குணம் கொண்டவர். விவசாயக் கூலி வேலை செய்துதான் குடும்பத்தை நடத்தி வந்தார். இந்த நிலையில் தன்னுடன் பழகிய நண்பன் கேட்டுக் கொண்டான் என்பதற்காக தனக்கு இருந்த ஒரே சொத்தான அந்த வீட்டைக் காண்பித்து ஜாமீன் போட்டு கடன் பெற்றுத் தந்துள்ளார். ஆனால், கடன் பெற்றவரான மாரிமுத்து உண்மையாக நடந்து கொள்ளவில்லை. தனியார் நிதி நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் கடன் தொகைக்காக வீட்டை எடுத்துக்கொள்வோம் எனக் கூறிச் சென்றுள்ளனர்.

Suicide
Suicide

எனக்கு இருப்பது ஒரே வீடு இதுவும் போய்விட்டால் நான் என்ன செய்யப் போகிறேன். என் குடும்ப நிலைமை இனி என்னவாகும் எனப் புலம்பி வந்துள்ளார். நண்பனுக்கு உதவப் போய் பெரும் சிக்கலில் சிக்கிக்கொண்டேனே என வீட்டைச் சுற்றிச் சுற்றி வந்தவர் அதன் பிறகு மனம் வெறுத்து விஷயத்தைக் குடித்துவிட்டார். நல்ல மனுசனுக்கு நேர்ந்த நிலைமையைப் பார்த்து ஊரே சோகத்தில் மூழ்கிக் கிடக்கிறது" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு