Published:Updated:

கோவையில் வங்கியில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட விவசாயி!

கலிலுல்லா.ச
குருபிரசாத்
தி.விஜய்

பணத்தைக் கொடுத்தாக வேண்டும் என்று கண்டிப்புடன் வங்கி அதிகாரிகள் கூறிவிட்டனர். இதைக் கேட்ட பூபதி மன உளைச்சலுடனே இருந்துள்ளார்.

வங்கி
வங்கி

சேலம் மாவட்டம் சங்ககிரி கொங்கணாபுரத்தைச் சேர்ந்தவர் பூபதி. இவர் ஒரு விவசாயி. இவருக்கு ஒரு பெண் மற்றும் பையன் உள்ளனர். இவரின் நண்பர்கள் சிலர் கொங்கணாபுரத்தில் பால்பண்ணை நடத்தியுள்ளனர். இடையில் இவரும் பால்பண்ணையில் தன்னை ஒரு பாட்னராக இணைத்துக் கொண்டார். இதையடுத்து, கோவை வெரைட்டி ஹால் பகுதியில் உள்ள இந்தியன் வங்கியில் நண்பர்கள் வாங்கிய கடனில் இவர் பெயரும் இணைக்கப்பட்டது.

பூபதி
பூபதி

அடுத்தகட்டமாக தொழிலை மேம்படுத்த பூபதியின் சொத்தை வங்கியில் அடமானம் வைத்து நண்பர்கள் பணம் வாங்கியுள்ளனர். இறுதியில் 5 பேரும் இணைந்து ரூ.2.40 கோடி கொடுக்க வேண்டும் என்று வங்கி தரப்பில் கூறப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். ஆளுக்கு குறிப்பிட்ட தொகை பணமாக கொடுக்க வேண்டும் என்று வங்கி அதிகாரிகள் கறாராக தெரிவித்துவிட்டனர்.

இதில் பூபதி ஏற்கெனவே 30 லட்ச ரூபாய் கட்டியுள்ளார். அதில் மீதி 55 லட்ச ரூபாய் கட்ட வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தினர். ஆகஸ்ட் 5-ம் தேதிக்குள் இந்தப் பணத்தை கொடுத்தாக வேண்டும், இல்லையென்றால் சொத்துகள் ஜப்தி செய்யப்படும் என்று கண்டிப்புடன் வங்கி அதிகாரிகள் கூறிவிட்டனர். இதைக்கேட்ட பூபதி மன உளைச்சலுடனே இருந்துள்ளார். காரணம், அடமானம் வைத்த சொத்துகளிலே இவருடைய சொத்துதான் அதிக மதிப்புடையது. நண்பர்கள் பலரும் உதவுவதாக நம்பிக்கையளித்துள்ளனர்.

விவசாயி
விவசாயி

இருந்தபோதிலும், மீண்டும் அதிகாரிகளுடன் பேச இன்று வங்கிக்கு வந்துள்ளார் பூபதி. ஆனால், தன்னுடைய கோரிக்கை நடக்காததால் பூச்சிமருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து காவல்துறை தரப்பில் `பிரேதப் பரிசோதனை அறிக்கையில்தான் விவரம் தெரியவரும்' என்று தெரிவித்துவிட்டனர். பிரேதப் பரிசோதனை முடிந்து உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது.