Published:Updated:

தருமபுரி: நிலப் பிரச்னை; திடீர் ஆய்வு! - அதிகாரிகள் முன்னிலையில் தீ வைத்துக் கொண்ட விவசாயி

தருமபுரி
தருமபுரி

தருமபுரியில் விவசாய நிலத்தின் பாதை பிரச்னையால் விவசாயி ஒருவர், அதிகாரிகள் முன்னிலையில் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த தும்பலஅள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட கிட்டேசம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கணபதி. இவருடைய விவசாய நிலத்தை ஒட்டி அரசுக்கு சொந்தமான புறம்போக்கு மேய்ச்சல் நிலம் உள்ளது. இந்த நிலத்தை ஆக்கிரமித்து கணபதியின் மகன்கள் கோவிந்தசாமி, சின்னசாமி, மாயக்கண்ணன், தேவராஜ் ஆகியோர் விவசாயம் செய்து வந்தனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்றி சாலை அமைப்பது தொடர்பாக பிரச்னை இருந்து வந்துள்ளது.

சின்னசாமி
சின்னசாமி

இதுதொடர்பான வழக்கு பாலக்கோடு கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இந்த ஆக்கிரமிப்பு நிலத்தை அகற்ற முடிவு செய்த அதிகாரிகள், நேற்று அதற்கான வேலைகளில் ஈடுப்பட்டனர். காரிமங்கலம் தாசில்தார் கலைச்செல்வி, வருவாய் ஆய்வாளர் தாரணி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் போலீஸாருடன் ஜே.சி.பி, டிராக்டர் போன்ற வாகனங்களில் வந்து ஆக்கிரமிப்பை அகற்ற முயன்றனர். அப்போது, நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.

இந்நிலையில், சின்னசாமி (வயது 65), திடீரென அதிகாரிகள் முன்னிலையில் தனது உடல் மீது மண்ணெண்ணைய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனால், அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பிறகு அவரை மீட்டு தீக்காயத்துடன் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தருமபுரி மாவட்டத்தில் விவசாயி ஒருவர் அதிகாரிகள் முன்னிலையில் மண்ணெண்ணைய் ஊற்றி தீ வைத்துக் கொண்ட சம்பவம் மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தீ பற்றிய நிலையில் சின்னசாமி
தீ பற்றிய நிலையில் சின்னசாமி

இதுபற்றி சின்னுசாமியின் தம்பி மகன் வேலன் கூறுகையில், ``நாங்க எங்க தாத்தா காலத்தில் இருந்து 60 ஆண்டுகளாக இந்த நிலத்தில் விவசாயம் செய்து வருகிறோம். 15 ஆண்டுகளுக்கு முன்பு எங்க நிலத்துக்குப் பின்புறமாக கோவிந்தசாமி, மணி, முருகேசன் என்பவர்கள் நிலம் வாங்கினார்கள். அவர்களுடைய நிலத்துக்கான வழிப்பாதை அவர்கள் வாங்கிய நிலத்திற்கு பின்புறமாக இருக்கிறது.

தமிழகத்துல விவசாயி... டெல்லியில தீவிரவாதி! - விசாரணையில் வெற்றிமாறன்

ஆனால், எங்க நிலத்தின் வழியாக வழிப்பாதை விடச் சொல்லி 5 ஆண்டுகளுக்கு முன்பு பிரச்னை செய்தார்கள். அப்போது தாசில்தார், கிராம நிர்வாக அதிகாரி வந்தார்கள். `எங்க நிலத்தின் வழியாக பாதை விடுகிறோம். அதேபோல அவரும் பாதை விட வேண்டும். கீழே உள்ள 50-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கும் கிராம மக்களுக்கும் அந்த பாதையில் பயனடைவார்கள்’ என்று கூறினோம். அவர்கள், கிராம மக்களுக்கு பாதை விட மறுத்ததால், நாங்களும் பாதை விட மறுத்து விட்டோம். இதுசம்மந்தமான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

வேலன்
வேலன்

இந்நிலையில் முன்னறிவிப்பு எதுவும் இல்லாமல் கோவிந்தசாமியிடம் பணத்தை வாங்கிக் கொண்டு வருவாய் துறையினரும், காவல் துறையினரும் வந்து நிலத்தை அளந்துள்ளனர். எங்க பெரியப்பா கேட்டதற்கு காவல்துறையினர் மிரட்டி அடித்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான எங்க பெரியப்பா மண்ணெண்ணைய் ஊற்றி தற்கொலை செய்து கொண்டார்'' என்றார் கண்ணீரோடு.

அடுத்த கட்டுரைக்கு