புதுக்கோட்டை: பூச்சிமருந்து குடித்த தந்தை; சோகத்தில் மகளும் தற்கொலை! - குடியால் சோகம்

மகளின் கண்டிப்பால் ஆத்திரமடைந்த செல்லையா, பூச்சிமருந்தை ஆம்லெட்டில் கலந்து குடித்து மயங்கி விழுந்திருக்கிறார். இதையறிந்த சாந்தியும், `இனி நம்மைப் பராமரிக்க யாரும் இல்லை' என மீதமிருந்த பூச்சிமருந்தைக் குடித்து மயங்கி விழுந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், பனங்குளத்தைச் சேர்ந்தவர் செல்லையா (72). இவருக்கு இரு மகன்கள், ஒரு மாற்றுத்திறனாளி மகள் சாந்தி (46). சாந்திக்குத் திருமணமாகவில்லை. செல்லையாவின் மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட, செல்லையாதான் சாந்தியைப் பராமரித்துவந்திருக்கிறார். மகன்கள் இருவரும் சென்னையில் வேலை பார்த்துவருகின்றனர். செல்லையாவுக்குக் குடிப்பழக்கம் இருப்பதாகவும், செல்லையா தினமும் குடித்துவிட்டுத்தான் வீட்டுக்கு வருவார் என்றும் கூறப்படுகிறது.

தந்தை குடியால் பாதிக்கப்பட்டு இறந்துவிடுவாரோ என்ற அச்சத்தில், `இனிமேல் குடிக்கக் கூடாது. அப்படி இனிமேல் குடித்துவிட்டு வந்தால், நான் இறந்துவிடுவேன்' என்று சாந்தி தந்தை செல்லையாவைக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. `46 வயதாகியும் மகளுக்குத் திருமணம் செய்து கொடுக்க முடியவில்லையே...’ என்ற கவலையும் செல்லையாவுக்கு இருந்திருக்கிறது. மகளின் கண்டிப்பால் ஆத்திரமடைந்த செல்லையா, தோட்டத்தில் அடிப்பதற்காக வைத்திருந்த பூச்சிமருந்தை ஆம்லெட்டில் கலந்து குடித்து மயங்கி விழுந்திருக்கிறார்.
தந்தை பூச்சிமருந்து குடித்ததை அறிந்த சாந்தியும், `ஒரு வருடத்துக்கு முன்பு அம்மா இறந்துவிட்டார். அப்பாவும் மருந்தைக் குடித்துவிட்டார். தம்பிகள் இருவரும் சென்னையில் வசிக்கின்றனர். இனி நம்மைப் பராமரிக்க யாரும் இல்லை’ என்று நினைத்து மீதமிருந்த பூச்சிமருந்தைக் குடித்து மயங்கி விழுந்தார்.

இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு, அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தந்தை, மகள் என இருவரும் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். கீரமங்கலம் போலீஸார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர். தந்தை, மகள் இருவரும் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.