Published:Updated:

`மகன் இறந்த துக்கம்; தந்தைக்கு மாரடைப்பு!’ - புதுக்கோட்டையில் அடுத்தடுத்த மரணத்தால் சோகம்

உயிரிழந்த தந்தை, மகன்
உயிரிழந்த தந்தை, மகன்

புதுக்கோட்டை அருகே மகன் இறந்த துக்கம் தாங்கமுடியாமல், தந்தை மாரடைப்பால் இறந்தார். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும், மகனும் அடுத்தடுத்து இறந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே அரையப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(75)விவசாயி. இவரது மகன் ராஜாங்கம்(46). ராஜாங்கத்திற்குத் திருமணமாகி மனைவி, 5 மகள்கள் மற்றும் 1மகன் உள்ளனர். வாரச் சந்தையில் காய்கறி விற்பனை செய்து வந்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். ராஜாங்கத்திற்கு நீண்ட நாள்களாகவே வயிற்று வலிப் பிரச்னை இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில்தான், திடீரென ராஜாங்கத்துக்கு வயிற்று வலி ஏற்பட்டதால், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், ராஜாங்கத்திற்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இறந்துவிட்டார்.

உயிரிழந்த தந்தை
உயிரிழந்த தந்தை

இதையடுத்து, அவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு அடக்கம் செய்வதற்காக, சொந்த ஊரான அரையப்பட்டிக்குக் கொண்டு செல்லப்பட்டது. அப்போது, மகன் இறந்துவிட்டான் என்ற செய்தி கேட்ட அதிர்ச்சியில் இருந்த ஆறுமுகத்திற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார். ஆனால், பாதி வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து, இருவருக்கும் அருகருகே இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. இறந்து போன ராஜாங்கத்திற்கு 5 மகள்களில் 3 மகள்களுக்குத் திருமணமாகி உள்ளது. மற்ற இரு மகள்களுக்கும் திருமணம் ஆகவில்லை. இந்த நிலையில்தான் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் அடுத்தடுத்து இறந்த சம்பவம் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு