Published:Updated:

`நான் ஒரே மகன்.. இறுதிச் சடங்கு செய்ய வேண்டும்' -தந்தை மரணத்தால் துபாயில் தவிக்கும் கடலூர் இளைஞர்

பயணம்
பயணம் ( மாதிரி படம் )

``விமானத்தில் சீட் கிடைக்க தமிழக தலைவர்கள் ஏற்பாடு செய்து கொடுத்தால் உயிர் உள்ளவரை அவர்களை மறக்க மாட்டேன்'' எனக் கலங்குகிறார் துபாயில் வசிக்கும் சலீம் என்பவர்.

`என் அப்பாவுக்கு நான் ஒரே மகன். அவருடைய இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள வேண்டும். ஆனால், விமானத்தில் சீட் இல்லாததால் தமிழகம் வர முடியாமல் தவித்து வருகிறேன். விமானத்தில் சீட் கிடைக்க தமிழக தலைவர்கள் ஏற்பாடு செய்து கொடுத்தால் உயிர் உள்ளவரை அவர்களை மறக்க மாட்டேன்'' எனக் கலங்குகிறார் துபாயில் வசிக்கும் சலீம் என்பவர்.

அப்துல் சலீம்
அப்துல் சலீம்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்தவர் அப்துல் அஜித். இவர் உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை திடீரென இறந்துவிட்டார். அவருடைய மகனும் மகளும் துபாயில் இருக்கிறார்கள். தந்தையின் இறுதிச் சடங்குக்கு வர முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.

துபாயில் உள்ள அப்துல் சலீமிடம் பேசினோம். ``எங்களுக்குக் கடலூர் மாவட்டம், சிதம்பரம் சொந்த ஊர். எங்க அப்பா பெயர் அப்துல் அஜித். வயது 65. அம்மா பெயர் தாஜுநிஷா. என்கூட பிறந்தவர்கள் அக்கா நசரத், தங்கை நஷ்ரேன். எங்க அப்பா விவசாயம் செய்து எங்களைப் படிக்க வைத்து ஆளாக்கினார். அக்காவுக்குத் திருமணமாகி குடும்பத்தோடு துபாயில் இருக்கிறார். நான் கல்லூரி முடித்து விட்டு துபாய்க்கு வந்து தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன்.

`வெளிநாட்டுல இருந்து போராடி ஊர் வந்தோம். ஆனா?'- திருச்சி கட்டணக் கொள்ளையால் மிரண்ட பயணிகள்

அப்பா, அம்மா, தங்கை மூன்று பேரும் சொந்த ஊரான சிதம்பரத்தில் வசித்து வருகிறார்கள். அப்பா வயது முதிர்ச்சியின் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை திடீரென இறந்துவிட்டார். அப்பாவுக்கு நான் ஒரே மகன். அவருடைய இறுதிச் சடங்கில் கலந்துகொண்டு அவருக்கு இறுதி மரியாதைகளைச் செய்ய வேண்டும்.

ஆனால், விமானத்தில் சீட் இல்லாததால் தமிழகம் வர முடியாமல் தவித்து வருகிறேன். தமிழக தலைவர்கள் உதவி செய்து எனக்கு விமானத்தில் சீட் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். என் உயிர் உள்ளவரை அவர்களை மறக்க மாட்டேன்" என்றார் கலங்கியவாறு.

அடுத்த கட்டுரைக்கு