இந்தியாவின் முதல் காஃபி டே என்ற மிகப் பெரிய ஒரு சாம்ராஜ்ஜியத்தைக் கட்டி எழுப்பிய வி.ஜி.சித்தார்த்தா கடந்த மாதம் 29ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். அவரின் மறைவுதந்த அதிர்ச்சி, கர்நாடகா மட்டுமல்ல... இந்தியாவில் உள்ள அனைத்து தொழிலதிபர்கள் மத்தியிலும் நீங்காமல் இருக்கிறது. சித்தார்த்தா மறைந்து இன்னும் ஒருமாதம்கூட ஆகாத நிலையில் தற்போது அவரின் தந்தை கங்கையாவும் உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். தனது மகனின் இறப்பு விஷயம் தெரியாமலேயே கங்கையாவும் உயிரிழந்த சம்பவம் அந்தக் குடும்பத்தில் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 96 வயதான கங்கையா, முதுமையின் காரணமாக கோமா நிலையில் இருந்துவந்தார்.

இதற்காக தற்கொலை செய்துகொள்ளும் 15 நாள்களுக்கு முன்புதான், தந்தை கங்கையாவை மைசூருவில் உள்ள உறவினர் மருத்துவமனையில் தந்தையை அனுமதித்தார், சித்தார்த்தா. அதேபோல் காணாமல்போவதற்கு மூன்று நாள்கள் முன்புகூட மருத்துவமனைக்குச் சென்ற சித்தார்த்தா, தனது தந்தையின் உடல்நிலை மோசமடைவதைக் கண்டு மருத்துவமனையிலேயே கண்ணீர்விட்டு அழுததுடன் மீண்டும் வந்து தந்தையை பார்ப்பதாக கூறிவிட்டுச் சென்றவர்தான் தற்கொலை செய்துகொண்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சிக்மகளூருவைச் சேர்ந்த கங்கையா- வசந்திக்கு குழந்தை இல்லாமல் இருந்து, பல வருடங்களுக்குப் பிறகு பிறந்தவர்தான் சித்தார்த்தா. அவரின் குடும்பத்தினர் பரம்பரையாக காபி தோட்ட விவசாயம் செய்துவந்தவர்கள். அந்தப் பரம்பரையின் முதல் தலைமுறை தொழிலதிபர்தான் சித்தார்த்தா. தனது திறமையாலும் கடுமையான உழைப்பினாலும் காஃபி டே ஷாப்பை உலகம் முழுக்க நிறுவினார். அதற்காக, இளம் வயது முதல் உழைத்தார். தந்தைக்குப் பிறகு காஃபி உற்பத்தித் தொழிலை கவனிக்க சித்தார்த்தாவுக்கு விருப்பமில்லை. அதனால், அவர்களிடம் அனுமதிபெற்று, பெங்களூருவுக்குச் சென்று காஃபி டேவை ஆரம்பித்துள்ளார்.

``சித்தார்த்தாவுக்கு தந்தையின் அளவு கடந்த பாசமும், மரியாதையும் இருந்துள்ளது. அவரிடம் இருந்துதான் தொழிலுக்கான நேர்மை உள்ளிட்டவற்றை கற்றுதெரிந்துள்ளார். கடைநிலை ஊழியர்கள் முதல் அனைவரிடமும் சித்தார்த்தா அன்பாகப் பழகுகிறார் என்றால் அதற்குக் காரணம், அவரது தந்தை கங்கையாதான். குழந்தையாக இருந்தது முதல் ஒவ்வொரு நல்ல விஷயத்தையும் தனது தந்தையிடம் இருந்தே கற்றுக்கொண்டார். அதற்கேற்றாற் போலவே நிறைய சாதனைகளைச் செய்து, தனது தந்தையை பெருமைப்படுத்தியுள்ளார். இப்படி பாசமாக வளர்த்த தனது மகனின் இறப்புக்கூட தெரியாத நிலையில் கங்கையா உயிரிழந்தது கூடுதல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது'' என அவரது குடும்பத்தினர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.