Published:Updated:

அலையோசையில் வாழ்வார் அருளானந்தம்!

தீவுப்பகுதி மீனவக் குழந்தைகளின் கல்விக்காகத் தொடங்கப்பட்ட பள்ளியின் வளர்ச்சிக்குப் பாடுபட்டார்.

பிரீமியம் ஸ்டோரி

தண்ணீரில் பயணிக்கும் மீனவர்கள் இப்போது கண்ணீரில் தத்தளிக்கின்றனர். காரணம், செயற்பாட்டாளர் அருளானந்தத்தின் மறைவு. தொடர்ச்சியாக மீனவர்களின் உரிமைகளுக்காகவும் வாழ்வாதாரத்துக்காகவும் செயற்பட்டுவந்த அருளானந்தத்தின் மரணம், மீனவர்களுக்குப் பேரிழப்பு.

“இலங்கையில் உள்நாட்டு யுத்தம் தொடங்கிய காலகட்டத்தில் அங்குள்ள தமிழர்களைப் போலவே ராமேஸ்வரம் பகுதி மீனவர்களும் பாதிக்கப்பட்டார்கள். 1984-ல் கடலுக்குச் சென்ற 4 மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்ட முதல் துயரச் சம்பவம் தொடங்கியதிலிருந்து மீனவர்கள் கடலுக்குச் செல்வது பெரும் துயரமாக மாறியது. அதைத் தொடர்ந்து 500-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் சுட்டுக்கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் மீனவர்கள் கைது செய்யப்படுவதும் தொடர்கதையாகிப்போனது.

இதை எதிர்த்து மீனவர்களும் அரசியல் கட்சிகளும் போராட்டங்களை நடத்திய காலகட்டத்தில், அதுமட்டும் போதாது என்று முடிவு செய்து இலங்கையிலுள்ள மீனவர் அமைப்புகள், மனித உரிமை அமைப்புகளுடன் தொடர்பு ஏற்படுத்தி ராமேஸ்வரத்துக்கும் இலங்கைக்கும் இடையே மிகக் குறுகிய கடல் பரப்பில் மீனவர்கள் நிம்மதியாக மீன்பிடிக்கும் முயற்சிக்கான பேச்சுவார்த்தையில் இறங்கியவர் அருளானந்தம்.

அருளானந்தம்
அருளானந்தம்

எல்லை கடந்ததாகக் கைது செய்யப்படும் இரண்டு நாட்டு மீனவர்களை சட்டரீதியாக விடுவிக்க ‘நிரபராதி மீனவர் விடுதலைக் கூட்டமைப்பை’ ஏற்படுத்தி இரு நாட்டு அரசுகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவது, நீதிமன்ற நடைமுறைகளைச் செய்து விடுவிப்பது எனச் செயல்பட ஆரம்பித்தார்.

2014-ல் மீன்பிடிக்கச் சென்ற ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் 5 பேரை போதைப்பொருள் கடத்தியதாகக் கைது செய்தது இலங்கை ராணுவம். வழக்கின் முடிவில் ஐவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ஒரு பக்கம் போராட்டங்கள் நடந்தாலும், இந்திய-இலங்கை வெளியுறவுத்துறை அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டே அவர்களின் விடுதலைக்காக இலங்கை நீதிமன்றத்தில் சட்டப்போராட்டம் நடத்த முக்கிய காரணமாக இருந்தார். அதன் விளைவாக அப்போதைய அதிபர் ராஜபக்ஷே 5 மீனவர்களையும் விடுதலை செய்து தமிழகம் அனுப்பினார். பல்வேறு அமைப்புகள் போராடினாலும், அதில் அருளானந்தத்தின் பணி முக்கியமானது.

தீவுப்பகுதி மீனவக் குழந்தைகளின் கல்விக்காகத் தொடங்கப்பட்ட பள்ளியின் வளர்ச்சிக்குப் பாடுபட்டார். குறுகிய வட்டத்துக்குள் மீனவர்கள் செயல்படக்கூடாது என்று கருதி, தேசிய மீனவர் பேரவையுடன் இணைந்து பல்வேறு மாநில பாரம்பரிய மீனவர்களுடன் கைகோத்தார். பாரம்பரிய மீன்பிடித் தொழிலை அழிக்கும் கார்ப்பரேட் முயற்சிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தார்” என்று அவர் பணிகளைப் பட்டியலிடுகிறார்கள்.

கடல் அலையின் ஓசையில், உப்புக்காற்றில், மீனவர்களின் வியர்வையில் வாழ்வார் அருளானந்தம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு