அலசல்
சமூகம்
Published:Updated:

அரசு மருத்துவமனையின் அலட்சியம்... உயிரிழந்த கால்பந்து வீராங்கனை! - என்ன செய்யப் போகிறது அரசு?

பிரியா
பிரீமியம் ஸ்டோரி
News
பிரியா

‘எதுக்காக இப்படி இறுக்கமா கட்டு போட்டிருக்கீங்க’ன்னு கேட்டோம். ‘இந்த ஆபரேஷனுக்கு இப்படித்தான் கட்டுப்போடணும்’னு சொன்னாங்க. அப்போ எங்களுக்கு எதுவும் புரியலை

‘‘மைதானத்துல என் மக கோல் அடிக்கும்போது, ஒவ்வொருத்தரும் கைதட்டுவாங்களே... அதைப் பார்க்கும்போது நானே ஜெயிச்ச மாதிரி ஒரு சந்தோஷம் வரும் எனக்கு. பிச்சை எடுத்தாவது எம்புள்ளைய பெரிய பிளேயர் ஆக்கிடணும்னு ராப்பகலா ஓடி ஓடி உழைச்சேன். ஆனா, இப்ப என் பொண்ணு வாழ்க்கையே முடிஞ்சு போச்சுன்னு நினைக்கும்போது என்னால தாங்க முடியலை சார்” கண்ணீர்ப் பெருக்கெடுக்கக் கதறுகிறார் கூலித் தொழிலாளியான ரவிக்குமார்.

சென்னை, வியாசா்பாடியைச் சோ்ந்த ரவிக்குமாரின் 17 வயது மகள் பிரியா. சென்னை இராணி மேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு உடற்கல்வியியல் படித்துவந்தார். கால்பந்து விளையாட்டைத் தனது கனவாக்கிக்கொண்ட பிரியா, மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று, பதக்கங்கள், கேடயங்கள், பாராட்டுச் சான்றிதழ்கள் என வீடு முழுவதும் குவித்துவைத்திருந்தார். ஓடி ஓடிப் பந்துகளை உதைத்த அவரின் கால்களில் ஒன்று தவறான சிகிச்சையால் எடுக்கப்பட்டு, தற்போது அவரின் உயிரையே பறித்திருக்கிறது. துள்ளத் துடிக்க மகளைப் பறிகொடுத்த வேதனையில் மொத்தக் குடும்பமும் செய்வதறியாமல் தவித்து நிற்கிறது.

பிரியா
பிரியா

என்ன நடந்தது என்று பிரியாவின் அண்ணன் வசந்திடம் விசாரித்தோம். “என் தங்கச்சிக்கு 5-வது படிக்கும்போதே ஃபுட்பால்னா உயிர். எந்த நேரமும் கிரவுண்டுலயேதான் இருப்பா. காலேஜ்லகூட ஸ்போர்ட்ஸ் கோட்டாவில்தான் சேர்ந்தா... நேஷனல் லெவல்ல ஃபுட்பால் ஆடணும்கிறது அவளோட லட்சியம். அதுக்கான பிராக்டீஸ்ல இருந்தப்போ, ஒருநாள் முட்டி வலிக்குதுன்னு சொன்னா. அதனால, கடந்த 29-ம் தேதி கொளத்தூா் பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்குக் கூட்டிட்டுப் போனோம். அங்க வலது கால் மூட்டுப் பகுதியில ஜவ்வு விலகியிருக்குனு சொல்லி ஆபரேஷன் பண்ணினாங்க. ஆனாலும் கால் வீக்கம் குறையலை. மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுவந்தப்போ தான் காலை எடுக்கலைன்னா உயிருக்கே ஆபத்துன்னு சொன்னாங்க. காலை எடுத்தும் இப்போ என் தங்கச்சி உயிர் அநியாயமா போய்டுச்சு. இதுக்கு யார் சார் பொறுப்பு” என்று வெடித்து அழுதார்.

பிரியாவின் உறவினர்கள் பேசும்போது, “கொளத்தூர் ஹாஸ்பிடல்ல, ‘லேபராஸ்கோபி ட்ரீட்மென்ட் செஞ்சா ரெண்டு நாள்ல பிரியாவின் கால்வலி சரியாகிடும்’னு சொன்னாங்க. 2-ம் தேதி ஆபரேஷன் முடிஞ்சதும் வலது கால்ல இறுக்கமா கட்டுப் போட்டிருந்தாங்க. ‘எதுக்காக இப்படி இறுக்கமா கட்டு போட்டிருக்கீங்க’ன்னு கேட்டோம். ‘இந்த ஆபரேஷனுக்கு இப்படித்தான் கட்டுப்போடணும்’னு சொன்னாங்க. அப்போ எங்களுக்கு எதுவும் புரியலை. அதுக்கப்புறம் பிரியாவுக்கு கால்வலி அதிகமாகி, துடிக்க ஆரம்பிச்சுட்டா. டாக்டர்கள் ஒரு மருந்தை எழுதிக் கொடுத்து வெளியே வாங்கிட்டுவரச் சொன்னாங்க. அதைக் கட்டுப்போட்ட இடம் முழுக்கத் தடவிவிட்டாங்க. அதுக்கப்புறம் வலி குறைஞ்சதா பிரியா சொன்னா. ஆனா, கொஞ்ச நேரத்துலயே வலி இன்னும் அதிகமாகி, பிள்ளை துடிதுடிக்க ஆரம்பிச்சுட்டா. டாக்டர்ங்க கட்டைப் பிரிச்சுப் பார்த்தப்போ பிரியாவோட கால்முட்டி வீங்கி கறுப்பா மாறியிருந்துச்சு. அதுக்கப்புறம் தான் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு கூட்டிட்டு வந்தோம். இங்க கொண்டுவந்து சேர்த்தப்போதான், ‘ரத்த ஓட்டம் இல்லாம செல்கள் செத்துப்போயிடுச்சு. கால் அழுக ஆரம்பிச்சிட்டதால, அதை எடுக்கலைன்னா உயிருக்கே ஆபத்தாகிடும்னு’ டாக்டருங்க சொன்னாங்க. ஆனா, காலை எடுத்தும் எங்க புள்ளைய காப்பாத்த முடியலையே...” என்று பேச முடியாமல் தடுமாறினர்.

அரசு மருத்துவமனையின் அலட்சியம்... உயிரிழந்த கால்பந்து வீராங்கனை! - என்ன செய்யப் போகிறது அரசு?

பிரியாவின் தந்தை ரவிக்குமாரிடம் ஆறுதல் சொல்லிப் பேசினோம். “பெரியார் நகர் மருத்துவமனையில தப்பா ட்ரீட்மென்ட் கொடுத்ததுதான் எல்லாப் பிரச்னைகளுக்கும் காரணம். என் பொண்ணோட உயிரையாச்சும் காப்பாத்தணும்னுதான் காலை எடுக்க ஒத்துக்கிட்டோம். ஆனா, என் புள்ளை உசிரே போயிருச்சே. ஃபுட்பால்ல பெரிய சாதனை படைக்க வேண்டிய புள்ளைய, பொணமா தூக்கிட்டு வந்திருக்கேனே...” என்று குலுங்கி அழுதார்.

பிரியாவின் ஃபுட்பால் கோச் ஜோயல், “ரொம்ப ஏழ்மையான குடும்பம். அதனால காசு ஏதும் வாங்காம நான் பிரியாவுக்குப் பயிற்சி கொடுத்துட்டு இருந்தேன். பிரியாவின் சிகிச்சையில் தவறு செய்த டாக்டர்களைக் கைது செய்யணும். அவளுக்கு என்ன நடந்துச்சுனு சரியா விசாரிச்சு உண்மையை வெளியே கொண்டுவரணும்” என்றார்.

பிரியாவின் மூத்த அண்ணன் லாரன்ஸ், “பிரியாவுக்கு செயற்கைக் கால் பொறுத்துறோம். தரமான சிகிச்சை அளிக்கிறோம்’னு அமைச்சர்கள் சொன்னாங்க! ஆனா, இனி எதை வச்சி சார் என் தங்கச்சி உயிரை ஈடு செய்யுறது” என்றார் சோகமாக.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் பேசினோம். “பிரியாவுக்குக் கால் மூட்டு ஜவ்வு பிரச்னைக்காக உள்நோக்கிக் கருவியின் மூலம் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர், ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்துவதற்குச் சுருக்குக் கட்டு (Compression Bandage) போடப்பட்டது. இந்தச் சுருக்குக் கட்டை மிக அழுத்தமாகப் போட்டதால் காலில் ரத்த ஓட்டம் தடைப்பட்டிருக்கிறது. இதனால், உயிருக்கே ஆபத்தான நிலையில் ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிரியாவின் காலை எடுக்கவேண்டிய சூழல் ஏற்பட்டது.

ரவிக்குமார், வசந்த், லாரன்ஸ்
ரவிக்குமார், வசந்த், லாரன்ஸ்

ஆனால், 14ம் தேதி நள்ளிரவு பிரியாவுக்கு ரத்த ஓட்டம் தடைபட்டதால் சிறுநீரகம், ஈரல் மற்றும் இதயத்தில் அடுத்தடுத்து பாதிப்புகள் ஏற்பட்டன. இதனால் 15ம் தேதி காலை 7.15 மணியளவில் அவர் உயிரிழந்தார். இது தவறான, கவனக்குறைவான சிகிச்சை அளித்த முதன்மை மருத்துவ அலுவலர் கே.சோமசுந்தர் மற்றும் மருத்துவர் பால்ராம் சங்கர் ஆகிய இரண்டு மருத்துவர்களும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை தொடரும். உயிரிழந்த பிரியாவின் குடும்பத்தினருக்கு ரூபாய் 10 லட்சம் இழப்பீடு மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க பரிந்துரை செய்திருக்கிறோம்” என்றார்.

காலை இழந்திருந்தாலும், ‘சீக்கிரமா கம்பேக் கொடுப்பேன். எதுக்கும் ஃபீல் பண்ணாதீங்க. என்னோட கேம் என்னைவிட்டுப் போகாது’ என்று தன் நண்பர்களுக்கு வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் மூலம் பதில் சொன்ன பிரியா, மருத்துவர்களின் அலட்சியத்தாலும் தவறான சிகிச்சையினாலும் கொல்லப்பட்டிருக்கிறார்.

முழுக்க முழுக்க அரசு மருத்துவமனையின் அலட்சியத்தால் நடந்த உயிர்ப்பலி இது. எதிர்க்கட்சிகள் ரூ.1 கோடி நிவாரணம் கேட்கின்றன. என்ன செய்யப் போகிறது அரசு?