Published:Updated:

புற்றுநோயுடன் போராட்டம்! துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை பூர்ணிமா மறைவால் கலங்கும் வீரர்கள்

துப்பாக்கிச் சுடும் வீரர் பூர்ணிமா சனானே
துப்பாக்கிச் சுடும் வீரர் பூர்ணிமா சனானே

``10 மீட்டர் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தேசிய அளவில் சாதனை படைத்துள்ளார். தொடர்ந்து பயிற்சியாளராகவும் இருந்துள்ளார். மகாராஷ்டிரா அரசால் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் `ஷிவ் சத்ரபதி’ எனும் விருது இவருக்கு வழங்கப்பட்டது.

உலகின் பல நாடுகளும் 2020-ம் ஆண்டு தொடங்கியதில் இருந்தே கடுமையான கஷ்டங்களை அனுபவித்து வருகிறது. குறிப்பாக, இந்தியா கொரோனா, நிலநடுக்கம், புயல், வெட்டுக்கிளி ஆகிய பிரச்னைகளில் சிக்கித் தவித்து வருகிறது. இயற்கை பிரச்னைகள் மட்டுமல்லாது பிரபலங்களின் மரணமும் இந்திய மக்கள் பலரையும் கவலைக்கு ஆளாக்கி வருகிறது. இந்த நிலையில், தற்போது இந்தியாவின் முன்னாள் துப்பாக்கிச் சுடும் வீராங்கனை பூர்ணிமா சனானே தன்னுடைய 42வது வயதில் மரணமடைந்துள்ளார். துப்பாக்கிச் சுடும் வீரர்கள் உட்பட பலரும் இதனால் சோகத்தில் மூழ்கியுள்ளனர். பூர்ணிமா சனானே மறைவுக்கு ஒலிம்பிக் சாம்பியன் அபிநவ் பிந்த்ரா உட்பட பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

துப்பாக்கிச் சுடும் போட்டியின் சர்வதேச கூட்டமைப்பில் உரிமம் பெற்ற பயிற்சியாளரும் வீரருமான பூர்ணிமா சனானே கடந்த இரண்டு ஆண்டுகளாகப் புற்றுநோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். அதற்கான சிகிச்சைகளையும் எடுத்து வந்தார். தொடர் சிகிச்சையால் உடல்நிலையும் அவருக்கு சீராகி வந்துள்ளது. கிட்டத்தட்ட புற்றுநோய் குணமான நிலையில் அவர் மரணமடைந்ததாக இந்தியாவின் முன்னாள் துப்பாக்கிச் சுடும் வீரர்களில் ஒருவரான ஜாய்தீப் கர்மகார் கூறியுள்ளார்.

மகாராஷ்டிராவில் உள்ள நாந்தேட் எனும் பகுதியில் பிறந்த பூர்ணிமா, சர்வதேச அளவில் நடைபெற்ற பல துப்பாக்கிச் சுடும் போட்டிகளிலும் இந்தியாவின் சார்பாகப் பங்கேற்றுள்ளார். ஆசிய அளவிலான போட்டிகள் மற்றும் காமன்வெல்த் போட்டிகளிலும் இந்தியாவின் சார்பாகப் பங்கேற்றுள்ளார். 10 மீட்டர் துப்பாக்கிச் சுடும் போட்டியில் தேசிய அளவில் சாதனை படைத்துள்ளார். தொடர்ந்து சர்வதேச அளவில் பயிற்சியாளராகவும் இருந்து வந்துள்ளார். மகாராஷ்டிரா அரசால் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் `ஷிவ் சத்ரபதி’ எனும் விருது இவருக்கு வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Vikatan

தேசிய துப்பாக்கிச் சுடும் வீரர்கள் சங்கம் இவரது மறைவுக்கு தங்களது இரங்கலைத் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அச்சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``பூர்ணிமா சனானே, ஒரு துப்பாக்கிச் சுடும் வீரர். சர்வதேசப் போட்டிகள் பலவற்றிலும் இந்தியா சார்பாகப் பங்கேற்றுள்ளார். பின்னர், ஒரு கட்டத்தில் துப்பாக்கிச் சுடும் வீரர்களுக்கு பயிற்சிகளை அளிக்கத் தொடங்கினார். இலங்கை அணிக்கும் பயிற்சி அளித்து வந்தார். அவருக்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறோம்” என்று கூறியுள்ளனர். பெய்ஜிங்கில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற அபிநவ் பிந்த்ரா, ``பூர்ணிமாவுக்கு ஆழ்ந்த இரங்கல். உங்களுடைய பிரிவால் நாங்கள் மிகவும் வேதனையடைகிறோம்” என்று கூறியுள்ளார்.

துப்பாக்கிச் சுடும் வீரர் அபிநவ் பிந்த்ரா
துப்பாக்கிச் சுடும் வீரர் அபிநவ் பிந்த்ரா

பூர்ணிமாவின் நண்பர் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், ``பூர்ணிமாவின் மரணம் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது. இவர் சர்வதேச அளவில் துப்பாக்கி சுடும் போட்டிகளில் பங்கேற்றவர் மற்றும் சர்வதேச பயிற்சியாளர். எங்களுடைய நட்பு ஜூனியர் அணியில் நாங்கள் இருந்ததில் இருந்து தொடங்கியது. ஆனால், நாம் மீண்டும் ஒருநாள் எங்கேயாவது சந்திப்போம்” என்று கூறியுள்ளார். பூர்ணிமாவின் மறைவுக்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது வருத்தத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு