Published:Updated:

அரசியல் செல்வாக்கு... அதிகாரிகளின் அலட்சியம்... அப்பாவி உயிர்கள் பறிபோன சோகம்!

கல்குவாரி விபத்து
பிரீமியம் ஸ்டோரி
கல்குவாரி விபத்து

இந்த குவாரியில் இரவு பகலாக வெடி வைப்பதால் எங்கள் வீடுகளில் அதிர்வு ஏற்படும்.

அரசியல் செல்வாக்கு... அதிகாரிகளின் அலட்சியம்... அப்பாவி உயிர்கள் பறிபோன சோகம்!

இந்த குவாரியில் இரவு பகலாக வெடி வைப்பதால் எங்கள் வீடுகளில் அதிர்வு ஏற்படும்.

Published:Updated:
கல்குவாரி விபத்து
பிரீமியம் ஸ்டோரி
கல்குவாரி விபத்து

நெல்லையில் விதிகளை மீறிச் செயல்பட்ட கல்குவாரியில் நடந்த கோர விபத்தில், அப்பாவித் தொழிலாளர்கள் நான்கு பேர் துடிதுடித்து இறந்திருப்பது மாநிலத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

நெல்லையை அடுத்த அடைமிதிப்பான்குளம் பகுதியில் உள்ளது ‘வெங்கடேஸ்வரா கல்குவாரி.’ காங்கிரஸ் கட்சியின் மாநில துணைத் தலைவர் ‘சேம்பர்’ செல்வராஜுக்குச் சொந்தமான இந்த ஆறு ஏக்கர் கல்குவாரியில், மே 14-ம் தேதி நள்ளிரவில் திடீரென பாறைகள் சரிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

சுமார் 40,000 டன் எடைகொண்ட பாறைகள் சரிந்து விழுந்தபோது, அங்கு பணியில் இருந்த ஆறு பேர் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டார்கள். விரைந்துவந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் முருகன், விஜயன் ஆகிய இருவரை உயிரோடு மீட்டனர். வெடிவைத்து 350 அடி ஆழத்துக்குப் பாறைகள் உடைக்கப்பட்டிருந்ததால், மீட்புப் பணியின் போதும் பாறைகள் சரிந்து விழுந்தன. எனவே அரக்கோணத்திலிருந்து 30 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்புப்படையினர் வரவழைக்கப்பட்டு, மீட்புப் பணி தொடரப்பட்டது. பாறைகளுக்கு மத்தியில், சுமார் 15 மணி நேரமாகப் படுகாயங்களோடு உயிருக்குப் போராடிய செல்வம் என்பவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் மீட்புப் படையினர். ஆனால், அவர் வழியிலேயே உயிரிழந்துவிட்டார்.

அரசியல் செல்வாக்கு... அதிகாரிகளின் அலட்சியம்... அப்பாவி உயிர்கள் பறிபோன சோகம்!
அரசியல் செல்வாக்கு... அதிகாரிகளின் அலட்சியம்... அப்பாவி உயிர்கள் பறிபோன சோகம்!

செல்வத்தின் உறவினர்கள் பேசுகையில், “குடும்ப வறுமை காரணமாக, தினசரி 800 ரூபாய் சம்பளத்துக்காக இந்த ஆபத்தான வேலையைச் செய்தார். கடந்த வாரம் அவருக்கு தலையாரி வேலை கிடைத்துவிட்டது. அரசு வேலை கிடைத்த மகிழ்ச்சியில் இருந்த அவர், ‘கடைசி நாள் வேலைக்குப் போயிட்டு வந்துடுறேன்’னு சொல்லிவிட்டுவந்தார். ஆனால், அதுவே வாழ்வின் கடைசி நாளாகிவிட்டதே...” என்று கதறினார்கள்.

ஆயர்குளம் கிராமத்தைச் சேர்ந்த லாரி கிளீனர் முருகன் என்பவரது உடலை, மீட்புப் படையினர் 17-ம் தேதி மீட்டனர். “முருகனின் பெரியப்பா மகனுக்கு 17-ம் தேதி கல்யாணம் இருந்தது. அதற்கு முன்பாக ஒரு நாள் வேலைக்குப் போய்விட்டு கல்யாணத்துக்கு லீவு எடுக்க நினைத்திருந்தார். ஆனால் இப்படி நடந்துவிட்டது” என்று குமுறினார்கள் முருகனின் உறவினர்கள்.

இன்னும் கல்குவாரி பாறைகளுக்குள் சிக்கிக்கிடக்கும் ராஜேந்திரன் உடலை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. கல்குவாரி வளாகத்திலேயே கண்ணீருடன் அமர்ந்திருக்கும் ராஜேந்திரனின் மனைவி மணிமேகலை, “எங்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள். எங்க வீட்டுக்காரர், டிரைவர் வேலைக்குப் போவது தெரியும். ஆனால், இவ்வளவு ஆழத்திலிருந்து லாரியில் கற்களை ஏற்றிக்கொண்டு வரும் ஆபத்தான வேலை என்பது இங்கே வந்து பார்த்த பிறகுதான் தெரிந்தது. முன்பே இது தெரிந்திருந்தால், அவரை இந்த வேலைக்கு அனுப்பியிருக்கவே மாட்டேன்” என்று கதறியது நம்மையும் கண்கலங்கச் செய்தது!

அரசியல் செல்வாக்கு... அதிகாரிகளின் அலட்சியம்... அப்பாவி உயிர்கள் பறிபோன சோகம்!

“இந்த குவாரியில் இரவு பகலாக வெடி வைப்பதால் எங்கள் வீடுகளில் அதிர்வு ஏற்படும். அதனால், நாங்கள் பலமுறை அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்போதே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திருந்தால், இந்த விபத்தே நடந்திருக்காது” என்றனர் குவாரி அமைந்துள்ள அடைமிதிப்பான்குளம் கிராம மக்கள் கொந்தளிப்புடன்.

கனிமக் கடத்தல்களுக்கு எதிராகத் தொடர் போராட்டங்களை முன்னெடுத்துவரும் முன்னாள் எம்.எல்.ஏ ரவி அருணன் நம்மிடம் பேசும்போது, “நெல்லை, தென்காசி மாவட்டங்களில் விதிமுறைகளை மீறி நிறைய குவாரிகள் செயல்படுகின்றன. இதைத் தடுக்கக் கோரி முதல்வர் வரை மனு அனுப்பியும் எந்த நடவடிக்கையும் இல்லை. தென்காசி மாவட்டம், செங்கோட்டை வழியாக தினமும் 900 லாரிகள் மூலம், அளவுக்கு அதிகமாக கனிமங்கள் கேரளாவுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன. அதைக் கண்டுகொள்ளாத அதிகாரிகள், திடீரென ஒருநாள் நாலைந்து லாரிகளை மட்டும் பிடித்து அபராதம் விதிக்கிறார்கள். எனவே முறைகேடாக நடந்துவரும் கனிமவளக் கொள்ளையை அரசுதான் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்” என்று படபடத்தார். குமரி மாவட்ட கல்குவாரி பிரச்னை சட்டமன்றம் வரையில் எதிரொலித்தும் தீர்வு கிடைக்காததையும் இங்கே சொல்லியாக வேண்டும்!

சேம்பர் செல்வராஜ்
சேம்பர் செல்வராஜ்
செல்வம்
செல்வம்

நெல்லை அடைமிதிப்பான்குளம் விபத்து தொடர்பாக குவாரி ஒப்பந்ததாரரான சங்கரநாராயணன், மேலாளர் செபஸ்டின் ஆகியோர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள். குவாரியின் உரிமையாளரும், மாநில காங்கிரஸ் துணைத் தலைவருமான சேம்பர் செல்வராஜ், அவருடைய மகன் குமார் ஆகியோர் தலைமறைவாகிவிட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதன் பின்னணியில் ஆளுங்கட்சி இருப்பதாக அ.தி.மு.க குற்றம்சாட்டியுள்ளது. ராதாபுரம் தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ-வான இன்பதுரை, “விபத்து நடந்த குவாரியில் விதிமுறை மீறல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டதால்தான், கடந்த ஆட்சியில் அனுமதி ரத்து செய்யப்பட்டது. ஆனால், தி.மு.க ஆட்சிக்குவந்ததும் இந்த குவாரிக்கு மீண்டும் அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. அனுமதி கொடுக்கப்பட்டதன் பின்னணியில் இருந்த ஆளுங்கட்சிப் பிரமுகர் யார்... குவாரி உரிமையாளரான சேம்பர் செல்வராஜுக்கு நெருக்கமான தி.மு.க முக்கியப் பிரமுகர் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா... விதிமுறையை மீறி அதிக ஆழத்துக்கு கனிமங்களைத் தோண்டி எடுத்ததை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்தது எப்படி..?” என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்புகிறார்.

தமிழ்நாடு முழுவதும் செயல்படும் குவாரிகளைக் கண்காணிக்கவேண்டியதன் அவசியத்தை இந்த விபத்து உருவாக்கியிருக்கிறது!