Published:Updated:

தூத்துக்குடி: செப்டிக் டேங்கில் தாக்கிய விஷவாயு! - அலட்சியத்தால் உயிரிழந்த 4 பேர்

இறந்தவர்களின் உடல்கள்
இறந்தவர்களின் உடல்கள்

``மூன்று பேரும் மூச்சுத் திணறலில் குரல் எழுப்ப நான்காவது நபர் தொட்டிக்குள் குனிந்து பார்த்தபோது மூன்று பேரும் தத்தளித்த நிலையில் கைகளை உயர்த்தியுள்ளனர்.”

தூத்துக்குடி மாவட்டம் கீழச்செக்காரகுடியைச் சேர்ந்தவர், ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் சோமசுந்தரம். இவரது வீட்டில் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் பணிக்காக நெல்லை மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்த இசக்கிராஜா, ஆலங்குளத்தைச் சேர்ந்த பாண்டி, தினேஷ், பாலா ஆகிய 4 பேர் தங்களது டாட்டா ஏஸ் வாகனத்தில் சென்றுள்ளனர். அவர்களில் ஒருவர் மட்டும் கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்வதற்காக உள்ளே இறங்கியுள்ளார்.

10 நிமிடங்களுக்கு மேல் நேரமாகியும் அவர் வெளியே வராததால், வெளியே நின்றிருந்த இரண்டு பேர் தொட்டிக்குள் இறங்கினர். இதில், மூன்று பேரும் மூச்சுத் திணறலில் குரல் எழுப்ப நான்காவது நபர் தொட்டிக்குள் குனிந்து பார்த்தபோது மூன்று பேரும் தத்தளித்த நிலையில் கைகளை உயர்த்தியுள்ளனர். இவர்களைக் காப்பாற்றும் நோக்கில் கைகளை நீட்ட அவரும் உள்ளே விழுந்து விஷவாயு தாக்கி, மூச்சுத்திணறலால் தவித்துள்ளார்.

போலீஸ் விசாரணை
போலீஸ் விசாரணை

செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும்போது அதிக துர்நாற்றம் வீசும் என்பதால் சோமசுந்தரத்தின் வீட்டினுள் இருந்து யாரும் வெளியே வரவில்லை. சுமார் ஒரு மணிநேரம் கழித்து, சோமசுந்தரம் வெளியில் வந்து பார்த்தபோது அவர்கள் நான்கு பேரையும் காணவில்லை. அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்தும் காணவில்லை. ஆனால், செப்டிக் டேங்க்கில் கழிவுநீர் மிகவும் கலங்கிய நிலையில் காணப்பட்டதாம். அத்துடன், டேங்க் அருகில் நான்கு பேரின் செருப்புகள் மட்டும் கிடந்தன.

இதனால், சந்தேகமடைந்த சோமசுந்தரம், புதுக்கோட்டை தீயணைப்பு மீட்புப்பணியிருக்குத் தகவல் கூறினார். அதன்பேரில் உடனடியாக வந்த மீட்புப் படையினர், கழிவு நீர்த் தொட்டிக்குள் இறங்கி விஷவாயு தாக்கி, மூச்சுத் திணறி உயிரிழந்த நிலையில் கிடந்த 4 பேரின் உடல்களையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இது குறித்து தட்டப்பாறை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செப்டிக் டேங்க்
செப்டிக் டேங்க்

செப்டிக் டேங்க் கழிவுகளை அகற்ற நவீன முறையில் கம்ப்ரஸர் லாரி மூலம் கழிவுகளை பம்பிங் செய்து அகற்றப்பட்டு வரும் நிலையில், இதுபோன்ற கிராமங்களில் தற்போதும் மனிதக் கழிவுகளை மனிதர்களே அள்ளும் அவலநிலை இன்னும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. சம்பவ இடத்தை எஸ்.பி ஜெயகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கழிவுநீர்த் தொட்டிக்குள் ஒரே நேரத்தில் நான்கு பேர் அடுத்தடுத்து உள்ளே விழுந்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Vikatan
அடுத்த கட்டுரைக்கு