Published:Updated:

`நெஞ்சுவலியல் துடித்த ஓட்டுநர்; கார்களில் மோதி நின்ற அரசுப் பேருந்து!’ - சென்னையில் நடந்த சோகம்

சென்னை வேளச்சேரியில் அரசுப் பேருந்து ஓட்டுநருக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் பயணிகள் அதிர்ச்சியடைந்தனர்.

அரசு பேருந்து
அரசு பேருந்து

சென்னை கேளம்பாக்கம் - கோயம்பேடு இடையே செல்லும் அரசுப் பேருந்து (எண் 570) இன்று மதியம் வேளச்சேரி 100 அடி சாலை வழியாகச் சென்றுகொண்டிருந்தது. அப்போது, அந்தப் பேருந்தை ஓட்டிக்கொண்டிருந்த ஓட்டுநர் ராஜேஷ் கண்ணாவுக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனால் நிலை தடுமாறிய ஓட்டுநர் ராஜேஷ் கண்ணா பேருந்தை நிறுத்த முயன்றார். நெஞ்சுவலி காரணமாக அவரால், பேருந்தை இயக்க முடியாமல் கடுமையாகப் போராடியுள்ளார்.

ராஜேஷ்கண்ணா
ராஜேஷ்கண்ணா

இதில் தாறு மாறாக ஓடிய பேருந்து சாலையோரம் நின்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதி நின்றது. அந்தப் பேருந்துக்குப் பின்னால் வந்த 10-க்கும் மேற்பட்ட கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்று மோதி சேதமடைந்தன. அதிர்ஷ்டவசமாகப் பேருந்தில் பயணித்த பயணிகள் எந்தவொரு காயமும் இன்றி தப்பினர். பயணத்தின்போது ஓட்டுநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து நெஞ்சு வலியால் துடித்த ஓட்டுநர் ராஜேஷ் கண்ணாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியிலேயே ஓட்டுநர் ராஜேஷ் கண்ணாவின் உயிர் பிரிந்தது.

கார் சேதம்
கார் சேதம்

அரசுப் பேருந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் நின்றுகொண்டிருந்த வாகனங்கள் மீது மோதி நின்ற சம்பவம் அப்பகுதில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக வேளச்சேரி போக்குவரத்து புலனாய்வு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து போக்குவரத்துத்துறை அதிகாரிகளிடம் பேசுகையில், ``தேனியைச் சேர்ந்தவர் ராஜேஷ் கண்ணா. 31 வயதான அவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. 4 வருடமாக ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். அவருக்கு நடந்தது துரதிர்ஷ்டவசமான சம்பவம்” என்றனர்.