கூடலூர்: மூன்று நாள்களாகக் காட்டுக்குள் கிடந்த ஆண் சடலம்! - கண்டுபிடித்த வளர்ப்பு நாய்

`மூணு நாளா அவரைக் காணோம். சொந்தக்காரர் வீட்டுக்குப் போயிருப்பார்னு நினைச்சோம். நாய் காட்டிக்கொடுத்தாலதான் எங்களுக்கே தெரிஞ்சது'.
நீலகிரி மாவட்டம், கூடலூர் ஓவேலி, ஆத்தூரைச் சேர்ந்த சிவசங்கரன் என்பவர் நேற்று காலையில் தனது வளர்ப்பு நாய் ஜாக்கியை அழைத்துக்கொண்டு வழக்கம்போல வாக்கிங் சென்றிருக்கிறார். ஆனால், ஜாக்கி வழக்கத்துக்கு மாறாக நடந்துள்ளது. அமைதியின்றியும், குறிப்பிட்ட இடத்தைப் பார்த்து தொடர்ந்து குறைத்துக் கொண்டேயும் இருந்திருக்கிறது. நீண்டநேரமாகியும், அவரது நாய் இயல்படையாத நிலையில் சந்தேகமடைந்த சிவசங்கரன், ஜாக்கியை அவிழ்த்துவிட்டிருக்கிறார்.

சற்று தொலைவில் இருந்த புதரைச் சுற்றிக் குரைத்திருக்கிறது ஜாக்கி. அருகில் சென்று பார்த்தபோது அதனுள் சிதைந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடந்திருக்கிறது. அதிர்ச்சியடைந்த அவர், ஊர் மக்களை வரவழைத்து காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்திருக்கிறார்.
காவல்துறை மற்றும் வனத்துறையினர் நிகழ்விடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டதில், இறந்தது அதே ஊரைச் சேர்ந்த பழனியாண்டி என்பதும், யானை தாக்கியதில் இறந்திருப்பதும் தெரியவந்தது.

இந்தச் சோகம் குறித்து நம்மிடம் பேசிய ஆத்தூர் இளைஞர் ஒருவர், ``64 வசான பழனியாண்டி தனியாத்தான் சமைச்சு சாப்பிட்டுக்கிட்டு இருக்கார். கடந்த மூணு நாளா அவரைக் காணோம். சொந்தக்காரர் வீட்டுக்குப் போயிருப்பார்னு நினைச்சோம். நாய் காட்டிக் கொடுத்ததாலதான் எங்களுக்கே தெரிஞ்சுது. மூணு நாளைக்கு முன்னாடியே யானை அடிச்சதுல இறந்துட்டார். இந்த ஏரியால நைட்டு யானை நடமாட்டம் அதிகம். தெரியாம வெளியே வந்து யானைகிட்ட மாட்டியிருக்கார். சிதைந்து அழுகிய உடல்தான் கிடைச்சுது. போலீஸார் விசாரிச்சுக்கிட்டு இருக்காங்க’’ என்றார்.