Published:Updated:

டெல்லி: `உறையவைக்கும் குளிர்; 10 நாள்கள் போராட்டம்!’- சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட விவசாயி

சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட விவசாயி அஜய் மோரே
சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட விவசாயி அஜய் மோரே ( NDTV )

டெல்லி எல்லையில் கடந்த 10 நாள்களாகப் போராட்டம் நடத்திவந்த ஹரியானாவைச் சேர்ந்த 32 வயதான விவசாயி சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாகத் தொடர் போராட்டம் நடத்திவருகின்றனர். `டெல்லி சலோ’ என்ற பெயரில் விவசாயிகள் டெல்லியை நோக்கிச் செல்லத் திட்டமிட்டிருந்தனர். ஆனால், டெல்லி எல்லைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அம்மாநிலத்தின் மூன்று எல்லைகளில் அவர்கள் முகாமிட்டுத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இது தொடர்பாக மத்திய அரசு நடத்திய பலகட்டப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. இதனால், போராட்டத்தை விவசாயிகள் தொடர்ந்துவருகிறார்கள்.

டெல்லி விவசாயிகள் போராட்டம்
டெல்லி விவசாயிகள் போராட்டம்
Manish Swarup

குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட விவசாயிகளின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மத்திய அரசு விவசாயிகளுக்கு எழுத்துபூர்வ உறுதிமொழி அளித்தது. ஆனால், வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது குறித்து அதில் எதுவும் குறிப்பிடாததால், விவசாயிகள் மத்திய அரசின் உறுதிமொழியை நிராகரிப்பதாக அறிவித்தனர். போராட்டத்தைத் தீவிரப்படுத்த இருப்பதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

டெல்லி விவசாயிகள் போராட்டம்: தோல்வியில் முடிந்த அமித் ஷா முயற்சி! -அடுத்தகட்ட நகர்வு என்ன?

இந்தநிலையில், டெல்லி - ஹரியானா எல்லையான ஷிங்கு பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த ஹரியானாவைச் சேர்ந்த அஜய் மோரே என்ற 32 வயது விவசாயி செவ்வாய்க்கிழமை காலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். ஹரியானா மாநிலம் சோனிபட் பகுதியைச் சேர்ந்த அவருக்கு மனைவியும் மூன்று குழந்தைகளும் இருக்கின்றனர்.

டெல்லி விவசாயிகள் போராட்டம்
டெல்லி விவசாயிகள் போராட்டம்

அவரது உடல் சோனிபட் கொண்டுசெல்லப்பட்ட நிலையில், முதற்கட்ட விசாரணையில் அவர் கடுங்குளிரில் பாதிக்கப்பட்டு இறந்திருக்கலாம் என்று சோனிபட் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் தெரிவித்திருக்கிறார். ஷிங்கு எல்லையில் கடந்த இரண்டு வாரங்களாக முகாமிட்டு அவர் விவசாயிகளுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டுவந்ததாகத் தெரியவந்திருக்கிறது. டெல்லியில் கடும் குளிர் நிலவிவரும் நிலையில், போராட்டம் தொடங்கிய பிறகு பதிவான ஆறாவது இறப்பு இது.

அடுத்த கட்டுரைக்கு