Published:Updated:

ஹரியானாவில் பெண்ணின் உடலை அடக்கம்செய்ய எதிர்ப்பு - போலீஸாருடன் பொதுமக்கள் மோதல்!

இந்தியா -  கொரோனா வைரஸ்
இந்தியா - கொரோனா வைரஸ்

144 தடை உத்தரவு அமலில் இருக்கும்போது, இப்படி கும்பலாகச் சேர்ந்து வன்முறையில் ஈடுபட்ட கிராம மக்கள்மீது வழக்குப்பதிவு.

கொரோனாவால், உயிரிழந்த சென்னை டாக்டர் சைமனின் உடலை அடக்கம் செய்வதற்கு, எதிர்ப்பு கிளம்பியதைப் போன்று, ஹரியானாவிலும் பெண் ஒருவரின் உடலை அடக்கம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியானாவில், அம்பாலா அருகே உள்ள சந்திப்புரா கிராமத்தில், 60 வயதுடைய பெண்மணி, அங்குள்ள நகர்ப்புற அரசு மருத்துவமனையில் ஆஸ்துமா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் . கடந்த சில நாள்களாக சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துவிட்டார். இந்த நிலையில், அவருடைய உடலை அடக்கம் செய்வதற்காக போலீஸார் மற்றும் மருத்துவர்கள் அவரை கிராமத்திற்கு எடுத்துச்சென்றுள்ளனர்.

அப்போது அங்கு வந்த கிராம மக்கள், உடலை அடக்கம் செய்ய விடாமல் எதிர்ப்பு தெரிவித்து மோதலில் ஈடுபட்டுள்ளனர். பெண்கள் உட்பட ஒரு கும்பல் போலீஸாரைத் தாக்க முயன்றுள்ளது. கற்களை வீசியும் போலீசாரின் வாகனங்களை சேதப்படுத்தியும் வன்முறையில் ஈடுபட்ட நிலையில், கும்பலைக் கலைக்க போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

 பெண் உடலை அடககம் செய்ய வந்த போலீசார்
பெண் உடலை அடககம் செய்ய வந்த போலீசார்

இதில் யாருக்கும் எந்தப் பாதிப்பு இல்லை. இது தொடர்பாகப் பேசிய டாக்டர் குல்தீப் சிங், "ஆஸ்துமா காரணமாக அனுமதிக்கப்பட்ட பெண் காலமானார். அவருக்கு கொரோனா தொற்றுப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அந்த சோதனை முடிவு இன்னும் வரவில்லை. குறிப்பாக, கொரோனா தொற்று உள்ளவர்களாக சந்தேகிக்கப்படும் நபரின் உடலைத் தகனம் செய்யும் நடைமுறையிலும், தொற்று உறுதி செய்யப்பட்டவரின் உடலைத் தகனம் செய்யும் நடைமுறையிலும் உள்ள விதிகளைப் பின்பற்றியே உடலை அடக்கம் செய்துவருகிறோம். அந்த வகையிலேயே இவரின் உடலைத் தகனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், கிராம மக்கள் இதற்கு சம்மதிக்கவில்லை" என்றார்.

கொரோனா பரிசோதனை
கொரோனா பரிசோதனை

இது தொடர்பாகப் பேசிய அம்பாலா கண்டோன்மென்ட் டிஎஸ்பி ராம் குமார், "நாங்கள் அவர்களை சமரசம் செய்ய முயன்றோம். ஆனால் அவர்கள், எங்களுடைய பேச்சைக் கேட்காமல், இங்கு குழுமியிருந்த மருத்துவர்கள் மற்றும் போலீஸார் மீது தாக்குதல் நடத்தினர். அதனால் அவர்களை அப்புறப்படுத்த எங்களுக்கு வேறு வழி தெரியவில்லை. 144 தடை உத்தரவு அமலில் இருக்கும்போது இவ்வாறு கும்பலாகச் சேர்ந்து வன்முறையில் ஈடுபட்ட கிராம மக்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் " என்றார் .

இதுவரை ஹரியானாவில் 289 பேரும் அம்பலாவில் 12 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை நோய் பாதிப்புக்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், உயிரிழந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்தவர்களின் மூளையை எதைக்கொண்டு சலவை செய்வதென்று தெரியவில்லை என்று கொதிக்கிறார்கள், சமூக ஆர்வலர்கள்.

அடுத்த கட்டுரைக்கு