ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த ஹேமாவதி என்ற 23 வயது பெண், அதே பகுதியில் உள்ள கேசவலு என்ற 27 வயது இளைஞரைக் கடந்த சில ஆண்டுகளாக காதலித்துவந்துள்ளார். இவர்களின் காதலுக்கு பெண் வீட்டினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துவந்துள்ளனர். ஹேமாவதி, நாயுடு பிரிவைச் சேர்ந்தவர். கேசவலு, பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதே எதிர்ப்புக்கு முக்கியக் காரணமாக இருந்துள்ளது.

இந்நிலையில், பட்டியலினத்தைச் சேர்ந்த ஒருவரைத் திருமணம் செய்து பிள்ளை பெற்றதால், தன் மகளைக் கொன்று கிணற்றில் வீசியுள்ளார், ஹேமாவதியின் தந்தை பாஸ்கர் நாயுடு. ஹேமாவதி, குழந்தை பெற்று ஒரு வாரமே ஆன நிலையில் இந்த ஆணவக் கொலை நடந்துள்ளது. ஹேமாவதியின் தந்தைமீது பலமுறை புகார் அளித்தும் காவல்துறை, அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கேசவலு மற்றும் மனித உரிமைகள் ஆணையத்தைச் சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதுபற்றி பேசிய ஹேமாவதியின் கணவர் கேசவலு, “நானும் ஹேமாவும் சில வருடங்களாக காதலித்துவந்தோம். அது, ஹேமாவின் வீட்டுக்குத் தெரிந்து, எங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், நாங்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினோம். இதனால் ஆத்திரமடைந்த ஹேமாவின் தந்தை, பலமநேர் (Palamaner ) காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர், காவலர்கள் எங்களைக் காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்றனர்.

அங்கு ஹேமாவின் தந்தை மற்றும் உறவினர்கள், என் வீட்டினர் மற்றும் உறவினர்களும் இருந்தனர். ஹேமாவின் உறவினர்கள் என்னிடம், 'இப்போது அவளுக்குத் திருமணம் செய்தால் அவளின் படிப்பு பாழாகிவிடும். எனவே, அவள் படிப்பை முடிக்கும் வரை நீ காத்திருக்க வேண்டும்’ எனக் கூறினர். நாங்களும் அவர்களின் வார்த்தையை நம்பி வீட்டுக்குச் சென்றுவிட்டோம். வீட்டுக்குச் சென்றதும் ஹேமாவின் தந்தை அவளை சரமாரியாகத் தாக்கி கொலை செய்ய முயன்றுள்ளார்.
அன்று இரவு, ஹேமா எப்படியே அவளின் வீட்டிலிருந்து தப்பித்து வெளியில் வந்துவிட்டாள். பின்னர், 2017-ம் ஆண்டு நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டோம். அப்போதும் ஹேமாவின் தந்தை எங்களை விடவில்லை. தொடர்ந்து நாங்கள் இருக்கும் பகுதிக்கு வந்து தொல்லை செய்தார். அவருக்குப் பயந்து நாங்கள் சித்தூர், அனந்தபூர், பெங்களூரு போன்ற பல நகரங்களுக்கு இடம் பெயர்ந்துவிட்டோம். அப்போதும் அவர் எங்களை விடவில்லை.

ஒரு வருடத்துக்குப் பிறகு, திடீரென ஒருநாள் என் மனைவிக்கு அவளின் சகோதரி போன் செய்து பேசினாள். ஹேமா தன் கல்லூரி படிப்பு பாதியிலேயே முடிந்ததால் அவளின் சான்றிதழ்களை அளிப்பதாகவும் அதனால், ஹேமா மேற்கொண்டு தன் படிப்பைத் தொடரமுடியும் என்றும் கூறி, எங்களை கல்லூரிக்கு வரச் சொன்னாள். நாங்களும் அவளின் பேச்சைக் கேட்டு கல்லூரிக்குச் சென்றோம். அப்போது, துணைக்கு என் நண்பனும் எங்களுடன் வந்தான். அன்றைய தினம் ஹேமாவின் தந்தையும் கல்லூரிக்கு வந்திருந்தார். அவர் என்னையும் என் நண்பனையும் விலகி இருக்கச் சொல்லிவிட்டு, ஹேமாவை மட்டும் வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றுவிட்டார்
பின்னர், அங்கிருந்து நேராக கங்காவரம் காவல் நிலையம் சென்று புகார் அளித்தோம். ஆனால் காவலர்கள், ‘எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்ய வேண்டும் என்றால், கம்மா (ஹேமாவின் கிராமம்) கிராமத் தலைவரின் அனுமதி வேண்டும் எனக் கூறிவிட்டனர். தொடர்ந்து நாங்கள் வற்புறுத்தியதற்கு,’ நீங்கள் பலமநேர் பகுதியைச் சேர்ந்தவர்கள். அதனால், அந்தப் பகுதி காவல் நிலையத்தில் புகார் அளியுங்கள் எனத் தெரிவித்தனர். அதனால், நாங்கள் பலமநேர் சென்றோம்.

அந்தக் காவல் நிலையத்தில் உள்ளவர்களும் புகார் எடுக்காமல், ‘ சம்பவம் நடந்தது கங்காவரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதி. எனவே, அங்கு செல்லுங்கள்’ எனக் கூறிவிட்டனர். காவலர்களின் செயலால் நாங்கள் மனத்தளவில் அதிகமாகப் பாதிக்கப்பட்டோம். என் மனைவியை அவளின் தந்தை வலுக்கட்டாயமாக அழைத்துச்சென்ற பின், மூன்று நாள்கள் கழித்து, அவள் யாருக்கும் தெரியாமல் வீட்டை விட்டு வெளியேறி என்னிடம் வந்து சேர்ந்தாள்” என்று கூறியுள்ள கேசவலு தொடர்ந்து, இரண்டு முறை ஹேமாவதியின் தந்தைமீது புகார் அளித்தும் காவலர்கள் அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளார்.
“என் தந்தை, சாலை போடும் தொழிலாளர். கடந்த ஜனவரி மாதம் ஹேமாவின் வீட்டுக்கு அருகில் சாலைபோடும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது ஹேமாவின் உறவினர் பெண் ஒருவர், என் தந்தையைத் தாக்கியுள்ளார். பின்னர், சாதி ரீதியாகவும் திட்டியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட நாங்கள், மீண்டும் காவல்நிலையத்தில் புகார் அளித்தோம். அப்போதும் அவர்கள் எங்கள் புகாரை ஏற்காமல், ஹேமாவின் தந்தைக்கே ஆதரவு அளித்துவந்தனர்.
இந்த நிலையில்தான், ஒரு வாரத்துக்கு முன்னர் எங்களுக்கு குழந்தை பிறந்த தகவல் தெரிந்ததும் கோபமடைந்த ஹேமாவின் தந்தை, அவளை கடத்திச் சென்று கொலைசெய்து கிணற்றில் வீசிவிட்டார். குழந்தை பெற்று ஒரு வாரம்கூட முழுமையாக நிறைவடையாத நிலையில், எங்கள் வாழ்வு இப்படி முடிந்துவிட்டது” எனக் கண்ணீர் மல்கத் தெரிவித்துள்ளார் கேசவலு.

ஹேமாவதியின் கொலையில் முக்கிய நபரான அவரின் தந்தை பாஸ்கர் நாயுடு, கொலையில் தொடர்புடைய ஹேமாவின் தாய் வரலக்ஷ்மி, சகோதர, சகோதரிகள் மூன்று பேர் மற்றும் ஹேமாவின் தாத்தா ஆகிய ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் குறைந்த வயதுடையவர்கள் என்பதால், இருவரும் சிறார் சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். மற்ற நான்கு பேரும் பதினைந்து நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.