Published:Updated:

`50 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த தம்பதி!' - இறப்பிலும் இணைபிரியாத கணவன் - மனைவி

புதுக்கோட்டை ஆலங்குடி அருகே குப்பக்குடியில் தனது கணவர் இறந்ததை எண்ணி மனைவி துக்கம்தாங்க முடியாமல் மாரடைப்பு வந்து உயிரிழந்தார்.

வெற்றிவேல் - பிச்சாயி
வெற்றிவேல் - பிச்சாயி

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள குப்பகுடியைச் சேர்ந்தவர் வெற்றிவேல் (82). இவருடைய மனைவி பிச்சாயி (71). இருவருக்கும் திருமணமாகி 50 ஆண்டுகள் ஆகின்றன. இவர்களுக்கு 5 மகன்கள், ஒரு மகள். பிள்ளைகள் அனைவரும் அருகருகேதான் வசித்து வருகின்றனர். வெற்றிவேல் நீண்ட காலமாக விவசாயம் செய்துதான் மனைவி, பிள்ளைகள் எனக் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். வயதாகி உடல் நிலை சரியில்லாமல் போகவே, கடந்த சில வருடங்களாகவே வீட்டிலேயே முடங்கினார். வெற்றிவேலுக்கு துணையாகவே பிச்சாயி தன் உடல்நிலை சரியில்லாத போதும் அருகிலேயே இருந்து பணிவிடைகள் செய்து வந்துள்ளார். இருவரும் ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்துள்ளனர்.

கணவன் - மனைவி
கணவன் - மனைவி

இந்தநிலையில்தான் உடல்நிலை சரியில்லாமல் இருந்த வெற்றிவேல் திடீரென இறந்துவிட்டார். குடும்பத்தினர் அனைவரும் வெற்றிவேலுக்கு இறுதிச்சடங்கு ஏற்பாடுகளை செய்து வந்தனர். அப்போது, கணவர் இறந்த துக்கத்திலேயே இருந்த பிச்சாயி திடீரென மாரடைப்பு வந்து உயிரிழந்தார். பல ஆண்டுகள் இணைபிரியாமல் வாழ்ந்து வந்த தம்பதி இறப்பிலும் இணைபிரியாமல் இறந்துள்ளனர் என்று கூறி ஊர் மக்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதுபற்றி உறவினர்களிம் கேட்டபோது, ``முதிய தம்பதிக்கு 5 மகன், ஒரு மகள், 23 பேரன், பேத்திகள், கொள்ளுப்பேரன்களும் இருக்கின்றனர். பல வருட திருமண வாழ்க்கையில் இருவரும் ஒருத்தரை விட்டு ஒருத்தர் பிரிந்து இருக்க மாட்டார்கள்.

கணவன் - மனைவி
கணவன் - மனைவி

`எங்களுக்குள் சண்டை வந்து கோபப்பட்டு அம்மா வீட்டுக்குப் போனதில்லை' என்று பிச்சாயி பாட்டி அடிக்கடி சொல்வாங்க. அந்தளவுக்கு இருவருக்கும் இடையே புரிதல் இருந்துள்ளது. வெற்றிவேல் ஐயா இறந்ததால் என்னவோ, தனக்கு துணையாக பிச்சாயி பாட்டியையும் கூட்டிக்கொண்டு சென்றுவிட்டார்" என்றனர்.

`தன்னுடன் வரும்படி வற்புறுத்திய கணவன்; மறுத்த மனைவி!’ - சேலத்தில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்