Published:Updated:

`கொரோனாவால் மாமா; அதிர்ச்சியில் அக்கா!’ - அடுத்தடுத்த மரணங்களால் சென்னைக் குடும்ப சோகம்

கொரோனா
கொரோனா

திடீரென அக்காள் கணவர், கொரோனாவால் உயிரிழந்ததார். அந்த அதிர்ச்சியில் அக்காவும் இறந்தார். இதனால் ஒரே நேரத்தில் அப்பா, அம்மாவை இழந்து குழந்தைகள் தவித்துவருகின்றனர்.

சென்னை கானத்தூர் ரெட்டி குப்பம், ஜீவரத்தினம் தெருவைச் சேர்ந்தவர் விஜயகாந்த் (29). இவர் எண்ணூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது, ``நான் மேற்படி முகவரியில் குடியிருந்துவருகிறேன். எனக்கு வள்ளி (31) என்ற அக்காவும் விஜயலட்சுமி (27) என்ற தங்கையும் உள்ளனர். இருவருக்கும் திருமணம் நடந்து குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். எனது அக்கா வள்ளிக்கு 2009-ம் ஆண்டு ராஜா (பெயர் மாற்றம்) என்பவருடன் திருமணம் நடந்தது.

திருமணம்
திருமணம்
`அரசாணையை மீறிய அதிகாரிகள்... கொரோனா மரணம்!' -சர்ச்சையில் கல்வியியல் ஆராய்ச்சி நிறுவனம்

இவர்களுக்கு 11 வயதில் மகனும் 8 வயதில் மகளும் உள்ளனர். இவர்கள் எண்ணூரில் குடியிருந்து வந்தனர். மாமா ராஜா மீன்பிடி வேலை செய்து வந்தார். கடந்த 11.6.2020-ல் மாமாவுக்குத் திடீரென உடல் நலம் சரியில்லை. அதனால் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவருக்குக் கொரோனா தொற்று உறுதியானது. சிகிச்சை பலனின்றி மாமா 12.6.2020- ல் இறந்தார். இதைப் பார்த்த எனது அக்கா அதிர்ச்சியிலும் மிகுந்த மனஉளைச்சலில் யாரிடமும் பேசாமல் அழாமல் இருந்தார்.

அக்காவும் இறந்தார்

கணவர் ராஜா இறந்த சோகத்தைத் தாங்க முடியாமல் மனஅழுத்ததில் இருந்த எனது அக்காவுக்கு அன்றைய தினமே மாரடைப்பு ஏற்பட்டதால் நாங்கள் உடனே அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு ஆட்டோ மூலம் அழைத்துச் சென்றோம். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அக்கா வள்ளி இறந்துவிட்டார் என்று தெரிவித்தனர். எனது அக்காவுக்கு இறுதிச் சடங்கு செய்ய வேண்டி பிரேதப் பரிசோதனைக்குப்பிறகு சடலத்தை ஒப்படைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

`மனைவிமீது சந்தேகம்; விடிய விடிய டார்ச்சர்' -குழந்தைகள் கண்முன்னால் தாய்க்கு நேர்ந்த கொடூரம்
எப்ஐஆர்
எப்ஐஆர்

இதுகுறித்து வள்ளியின் வீட்டின் அருகே குடியிருப்பவர்கள் கூறுகையில் `` ராஜாவும், வள்ளியும் மகன், மகளுடன் சந்தோஷமாக வாழ்ந்துவந்தனர். கொரோனா ஊரடங்கு காரணமாக அனைவரும் வீட்டிலேயே முடங்கியிருந்தனர். வேலை இல்லாமல் வருமானமின்றி அந்தக் குடும்பம் தவித்தது. இருப்பினும் தன்னம்பிக்கையை விடவில்லை. இந்தச் சமயத்தில்தான் ராஜா கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவருக்குக் கொரோனா தொற்று இருந்த அறிகுறி எதுவும் தெரியவில்லை.

2 குழந்தைகள்

இதையடுத்து சுகாதாரத்துறையினர் அந்தக் குடும்பத்தை தனிமைப்படுத்தினர். ராஜாவின் சடலத்தைக்கூட அந்தக்குடும்பத்தினர் பார்க்கவில்லை. ராஜா இறந்த தகவலைக் கேட்ட பிறகு வள்ளி, பித்துபிடித்துபோலவே இருந்தார். உறவினர்களும் அவருக்குத் தெரிந்தவர்களும் ஆறுதல் கூறிவந்தனர். இந்தச் சமயத்தில்தான் வள்ளிக்கு நெஞ்சு வலிக்கிறது என்று கூறினார். உடனே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்குள் வள்ளி இறந்துவிட்டார். ஒரே நேரத்தில் அப்பாவையும் அம்மாவையும் இழந்த அந்த 2 குழந்தைகளுக்கு ஆறுதல்கூட சொல்ல முடியவில்லை. இந்தநிலைமை மற்ற எந்தக் குடும்பத்துக்கும் ஏற்படக்கூடாது"என்றனர் கண்ணீருடன்.

ராஜீவ்காந்தி மருத்துவமனை
ராஜீவ்காந்தி மருத்துவமனை

எண்ணூர் போலீஸார் கூறுகையில், ``வள்ளியின் மரணம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளோம். பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைத்துள்ளோம். வள்ளியின் மரணத்தை விசாரித்தபோதுதான் அவரின் கணவர் கொரோனாவால் இறந்த தகவல் தெரியவந்தது" என்றனர்.

வள்ளி இறந்த பிறகு அவரின் மகன், மகள் ஆகியோருக்குக் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதனால் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். வள்ளியின் குடும்பத்தினரும் ராஜாவின் குடும்பத்தினரும் இருவரையும் கவனித்துவருகின்றனர்.

இந்தச் சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு