Published:Updated:

`பணிச்சுமைதான் காரணம்!' - விருதுநகர் ஏட்டு தற்கொலையால் கொதித்த உறவினர்கள்

சிவகாசி கிழக்கு காவல் நிலையம்
சிவகாசி கிழக்கு காவல் நிலையம்

தமிழகத்தில் கடந்த சில நாள்களில் 3 போலீஸார் தற்கொலை செய்துகொண்ட நிலையில், விருதுநகரிலும் தலைமைக் காவலர் அலெக்சாண்டர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுபோன்ற தொடர் தற்கொலைகளுக்குப் பணிச்சுமைதான் எனக் காரணம் சொல்லப்படுகிறது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகில் உள்ள செங்கமலநாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர் அலெக்சாண்டர். இவர் சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்தார். இவருக்குப் பாண்டீஸ்வரி என்ற மனைவியும் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் தாரணி, பத்தாம் வகுப்பு படித்து வரும் ரோஷினி ஆகிய இரு மகள்களும் உள்ளனர். வழக்கம்போல கடந்த 4-ம் தேதி இரவில் பணி முடித்து வீடு திரும்பியவர், மனைவி, மகள்களுடன் தூங்கச் சென்றாராம்.

தற்கொலை செய்துகொண்ட அலெக்சாண்டர்
தற்கொலை செய்துகொண்ட அலெக்சாண்டர்

காலையில் மனைவி கண்விழித்துப் பார்த்தபோது அலெக்சாண்டரைக் காணவில்லை. வீட்டின் மற்றொரு அறையில் மின் விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்நிலையில், அவரது வீட்டில் போலீஸார் சோதனை செய்ததில் விருதுநகர் மாவட்ட எஸ்.பி-க்கு நேற்றைய தேதியிட்டு எழுதிய கடிதம் சிக்கியது.

அக்கடிதத்தில், ``கடந்த 31.5.2019 அன்று என் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாமல்போனது. அதைத் தொடர்ந்து அருகிலுள்ள மருத்துவமனையில் காண்பித்தபோது, மருத்துவர்கள் அவரை மதுரையில் சென்று காண்பியுங்கள் என்று கூறினர். அதைத்தொடர்ந்து, என் பராமரிப்பிலுள்ள என் தாயாரை மதுரை அப்போலோ மருத்துவமனையில் பரிசோதித்ததில் தாயாரின் வயிற்றில் கட்டி இருப்பதாகவும் புற்றுநோய் என்றும் கூறினர்.

அந்தக் கடிதம்
அந்தக் கடிதம்

மேலும், என் தாயாரை உள்நோயாளியாக அனுமதித்து சீர் செய்து வந்தேன். என்னால் கடந்த 31.5.2019 காலை 7 மணிக்கு ஆஜர் அணிவகுப்புக்கு வர இயலவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த 26 ஆண்டுகளாக எவ்வித தண்டனையுமின்றி கண்ணியமிக்க காவல்துறையில் பணிபுரிந்து வந்தேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதனால், இந்தக் குற்றச்சாட்டிலிருந்து என்னுடைய இந்த விளக்கத்தை கருணையோடு பரிசீலித்து என்னை விடுவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்” எனக் கைப்பட எழுதி கையெழுத்திட்டுள்ளார்.

அதிகமான பணிச்சுமையால் ஏற்பட்ட மன உளைச்சலால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அலெக்சாண்டரின் தற்கொலைக்கான காரணம் குறித்து ஆர்.டி.ஓ விசாரணை செய்ய வேண்டும் என்கின்றனர் அவரின் உறவினர்கள். இதுகுறித்து திருத்தங்கல் காவல் நிலைய போலீஸாரிடம் பேசினோம், ``அவர் பணிச்சுமையால் தற்கொலை செய்துகொண்டாரா, குடும்ப பிரச்னையா, வேறு ஏதும் பிரச்னையா? என்பது குறித்து விசாரணை செய்து வருகிறோம்” என்றனர். கடந்த 6 நாள்களில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் ஆயுதப்படைக் காவலர் யோகேஸ்வரன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிழக்கு காவல் நிலையம்
கிழக்கு காவல் நிலையம்

சிவகங்கையில் இந்தோ - திபெத் எல்லைப் பாதுகாப்புப்படை மையத்தில் பணியிலிருந்த உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த காவலர் சங்கர்சிங்கும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். அதே நாளில் மதுராந்தகத்தைச் சேர்ந்த தலைமைக் காவலர் சேகர், விழுப்புரம் மாவட்டம் செஞ்சிமலையைச் சேர்ந்த காவலர் சரவணனும் தற்கொலை செய்துகொண்டனர். தமிழகத்தில் காவல்துறையில் பணிபுரிபவர்களின் தொடர் தற்கொலைகள் அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு