சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

இழப்பிலும் உயிர்த்தது மானுடம்!

செல்வராஜ்
பிரீமியம் ஸ்டோரி
News
செல்வராஜ்

எங்க அப்பா காலத்துலேருந்து இந்த ஏரியாலதான் இருக்கோம்.

ழப்பின் சுவடுகள் ஆழப்பதிந்திருக்கும் நேரத்திலும் அடுத்தவர் நலனுக்காக நீளும் கைகள் அற்புதமானவை. அப்படி ஓர் அற்புத மனிதர்தான் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த செல்வராஜ்.

பல ஆண்டுகளுக்கு முன்பே மனைவியை இழந்து, தன் குழந்தைகளைத் தனியாளாக வளர்த்துவந்தார் இவர். சமீபத்தில் ‘தீண்டாமைச்சுவர்’ என்று குற்றம் சாட்டப்படும் சுவர் இடிந்து விழுந்து பலியான 17 பேரில் இருவர், செல்வராஜின் இரு குழந்தைகளான மகள் நிவேதா, மகன் ராமநாதன். தன் உயிருக்கு உயிரான உறவுகளை இழந்துநிற்கும் நேரத்திலும், தன் குழந்தைகளின் கண்களை தானம் செய்ததன் மூலம் தமிழகத்தையே நெகிழ வைத்திருக்கிறார் மேட்டுப்பாளையம் செல்வராஜ்.

“எங்க அப்பா காலத்துலேருந்து இந்த ஏரியாலதான் இருக்கோம். 25 வருஷத்துக்கு முன்னாடி கல்யாணம் ஆச்சு. சம்சாரம் கட்டட வேலைக்குப் போகும். நான் மணல் லோடு வேலைக்குப் போவேன். ரொம்ப வருஷத்துக்கு அப்புறம்தான் நிவேதா பொறந்தா. அதுக்கப்புறம் ராமநாதன் பொறந்தான். ஒருநாள் என் சம்சாரம் வேலை செய்யறப்ப, கட்டடத்துல இருந்து கீழே விழந்து அடிபட்டுருச்சு. உசுருக்கே ஆபத்தான நிலை... எப்படியோ கஷ்டப்பட்டு அவளைக் காப்பாத்தினேன். பசங்கள நல்லா வளர்க்கணுங்கறதால, திரும்பவும் வேலைக்குப் போக ஆரம்பிச்சா. ரெண்டு பேரும் கஷ்டப்பட்டு சம்பாதிச்சதுல சின்னதா ஒரு ரூம் அளவுல கான்கிரீட் வீடு கட்டினோம். ஆனா, அதுக்குள்ள அவ உடல்நிலை ரொம்ப மோசமாகிடுச்சு. பிளட் பிரஷர் அதிகமாகி மருத்துவ மனைக்குப் போனோம். வாந்தி வருதுன்னு ஓடினா. வாந்தி எடுக்க எடுக்க உசுரு போயிடுச்சு...” - செல்வராஜுக்குக் கண்கள் குளமாகின்றன.

இழப்பிலும் உயிர்த்தது மானுடம்!
இழப்பிலும் உயிர்த்தது மானுடம்!

“எங்க வீடு இந்தத் தெருவுக்கு முன்னாடியே இருக்கு. ஆனா, பசங்கள ஒருத்தனா வளக்க முடியாதுங்கறதால, தம்பி பழனிசாமி வீட்லதான் அவங்க வளர்ந்தாங்க. நான் டீக்கடைக்கு வேலைக்குப் போக ஆரம்பிச்சேன். காலைல நாலரை மணிக்கு வேலைக்குப் போனா, சாயங்காலம் ஏழு மணிக்கு மேலதான் திரும்பி வருவேன். ராத்திரி பசங்களை சாப்பிட வெச்சுட்டு, பழனிசாமியும், நானும் எங்க வீட்டுக்குப் போய்த் தூங்கிடுவோம். கொழுந்தியாவும், பசங்களும் இங்க தூங்குவாங்க.

ஞாயிற்றுக்கிழமை நைட் நான் டீக்கடைலயே தூங்கிட்டேன். திங்கக்கிழமை காலைல அஞ்சரை மணிக்கு டீக்கடைக்கு வந்து ஆளுங்க சொன்னப்பதான் எனக்கு விஷயமே தெரிஞ்சுது. அடிச்சுப்பிடிச்சு ஓடிவந்து பார்த்தேன். அப்பவே எல்லாம் முடிஞ்சிடுச்சு. ‘நாமதான் அநாதை ஆகிட்டோம். யாருக்கும் எந்தப் பயனும் இல்ல. பசங்களுக்குச் சின்ன வயசு. உடல்தானம் பண்ணுங்க’ன்னு சிலர் சொன்னாங்க.

பசங்களோட கண் மட்டும்தான் எடுக்க முடியும்னு டாக்டர் சொன்னாரு. மண்ணுக்கும், தீக்கும் கொடுக்கறதுக்கு, யாருக்காவது உதவியா இருக்கட்டுமேன்னு எடுத்துக்கச் சொல்லி கையெழுத்து போட்டுக் கொடுத்துட்டேன். எப்பவாச்சும் ஒருநாள், அந்தக் கண்ணு நம்மள பார்க்கறப்ப இது நம்ம அப்பான்னு தெரியும்ல. அப்படியாவது நம்மள பார்த்துக்கட்டுமேங்கற எண்ணம்தான்.

செல்வராஜ்
செல்வராஜ்

என் பையன் பத்தாவது முடிச்சுட்டு, ப்ளஸ் ஒன் படிச்சுக்கிட்டிருந்தான். அவனுக்கு போலீஸ் ஆகணும்னு ஆசை. நிவேதா நர்சிங் படிச்சுட்டிருந்தா. யாருக்காவது உதவுற மாதிரியான வேலைல இருக்கணும்னு சொல்லித்தான் அந்தப் படிப்புல சேர்ந்தா. ஆனா, இப்ப அவள யாராலயும் காப்பாத்த முடியல” முகத்தைமூடி அழுதவரை ஆசுவாசப்படுத்தினேன்.

“என் புள்ள நல்லாப் படிப்பா. இங்கிலீஷ்ல வெளுத்துக்கட்டுவா. புள்ளங்களை நல்லபடியா படிக்க வெச்சு ஆளாக்கிடணும். நாம பட்ட கஷ்டங்கள அவங்க படக்கூடாதுன்னுதான் இத்தன நாள் வாழ்ந்துட்டிருந்தேன். இப்ப என்ன பண்றதுனே தெரியல. நான் உசுரோட இருந்து யாருக்கு என்ன பிரயோஜனம்? எங்கயாவது ஆத்துல குளத்துல விழுந்து செத்துரலாம்னு தோணுது. எப்படா சாவு வரும்னு காத்துட்டு இருக்கேன். நான் செத்தா தூக்கிப் போடக்கூட ஆள் இருக்குமான்னு தெரியல. இந்த சுவரால ஆபத்து வரப்போகுதுன்னு பலமுறை போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்திருக்கோம். அப்ப எல்லாம் யாரும் இத கண்டுக்கல.

ஆத்து வெள்ளம் வந்தாகூட, ஒருத்தர், ரெண்டு பேரத்தான் அடிச்சுட்டுப்போகும். ஆனா, இந்தச் சுவரு விழுந்து 17 பேர் உசுரு போயிடுச்சு. சுவரால போன கடைசி உசுரு எங்களோடதா இருக்கட்டும். இனி ஒரு உசுருகூடப் போகக் கூடாது” என்று தேம்பி அழுகிறார் செல்வராஜ்.

‘தீண்டத்தகாதவர்கள் தங்கள் வீட்டுப்பக்கம் வந்துவிடக்கூடாது’ என்பதற்காகத்தான் அந்தத் தீண்டாமைச் சுவர் எழுப்பப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அது உண்மையானால், இந்த இரு குழந்தைகளின் கண்கள் சாதி, மதம் பார்த்துப் பொருத்தப்படப்போவதில்லையே. இந்த இரு குழந்தைகளின் கண்கள் யாருக்குப் பொருத்தப்பட்டாலும் அது சமத்துவத்தை நோக்கிய பார்வையாக இருக்கட்டும்!