Published:Updated:

மனங்களில் வாழ்வார் மருத்துவர் சாரதா!

மருத்துவர் சாரதா மேனன்
பிரீமியம் ஸ்டோரி
News
மருத்துவர் சாரதா மேனன்

மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட மருத்துவ மனைகளிலும் வெளி நோயாளி களுக்கான வசதியைத் திறந்து, அந்தந்தப் பகுதிகளுக்கான மனநல மையங்களை சாரதா நிறுவினார்.

இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் சாரதா மேனன் வயதுமூப்பு காரணமாக, நவம்பர் 5 அன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 98.

கர்நாடக மாநிலம் மங்களூரில் நீதிபதி கே. சங்கர மேனன் - நாராயணி தம்பதியின் எட்டுப் பிள்ளைகளில் கடைசிப் பிள்ளையாக, 1923 ஏப்ரல் 5-ம் தேதி பிறந்தார் சாரதா. 1951-ல் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் படிப்பை முடித்தார்.

1957-ல் மருத்துவப் பட்ட மேற்படிப்பை தில்லியில் முடித்த சாரதா, தொடர்ந்து பெங்களூரில் நிம்ஹன்ஸ் (NIMHANS) நிறுவனத்தில் ஈராண்டு மனநல சிகிச்சைப் படிப்பில் டிப்ளோமா முடித்தார். அதைத் தொடர்ந்து, 1959-ல் கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையின் கண்காணிப்பாளராக, தமிழ்நாடு அரசு சாரதாவை நியமித்தது. சாரதா இந்தியாவின் முதல் பெண் மனநல மருத்துவர் ஆனார்.

1961-ல் பதவியுயர்வு பெற்ற சாரதா, 1978-ல் பணிக்காலம் முடியும்வரை கீழ்ப்பாக்கம் அரசு மனநல மருத்துவ மனையில் பணியாற்றினார். மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட மருத்துவ மனைகளிலும் வெளி நோயாளி களுக்கான வசதியைத் திறந்து, அந்தந்தப் பகுதிகளுக்கான மனநல மையங்களை சாரதா நிறுவினார்.

மனங்களில் வாழ்வார் மருத்துவர் சாரதா!

மனநலம் குன்றியவர்களின் குடும்பங்களை ஒன்றிணைக்கும் ‘ஆஷா’, மனச்சிதைவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும், அத்துறையில் ஆய்வுகள் மேற்கொள்ளவும் ‘Schizophrenia Research Foundation (SCARF)’ ஆகிய அமைப்புகளை நிறுவி, மனநலத் துறைக்குத் தன்னுடைய தொடர் பங்களிப்புகளை வழங்கிவந்தார் சாரதா.

இப்படிப் பணிக் காலத்திலும், பணி நிறைவுக்குப் பிறகும் மனநலத் துறையில் அவர் கொண்டுவந்த பல சீர்திருத்தங்கள், தமிழ்நாட்டில் அத்துறையின் மேம்பாட்டுக்கு வலுவான அடித்தளமிட்டன. சாரதாவின் சேவையைப் பாராட்டி, 1992-ல் மத்திய அரசு அவருக்கு ‘பத்மபூஷண் விருது’ வழங்கிச் சிறப்பித்தது; 2016-ல் தமிழ்நாடு அரசு அவருக்கு ‘ஔவையார் விருது’ வழங்கி கௌரவித்தது.

“இன்று தமிழ்நாட்டின் முக்கிய மனநல மருத்துவர்கள் எல்லோருக்கும் அவர்தான் ஆசிரியர். ஒரு நோயாளியைப் பார்த்துப் பேசிய ஐந்து நிமிடங்களில் அவருடைய பிரச்னை என்ன என்பதைக் கண்டறிவது எப்படி என்பது தொடங்கி, துறை சார்ந்த ஆழமான விஷயங்கள் வரை அவர் எங்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார். மனநல நோயாளிகள் என்பதற்காக அவர்களைப் போட்டு அடைத்து வைக்காமல், அவர்களும் மரியாதையும் மாண்பும் கொண்ட மனிதர்களாக நடத்தப்பட வேண்டும் என்பதை உறுதிசெய்தவர் அவர். இந்த வயதிலும் கற்றலில் தீவிர ஆர்வம் கொண்டிருந்தார். மனநலன் என்றால் என்னவென்று தமிழ் நாட்டுக்குப் புரிய வைத்தவர் அவர்” என்று உணர்ச்சி தளும்பப் பேசுகிறார் மனநல மருத்துவர் லஷ்மி விஜயகுமார்.