Published:Updated:

`நாட்டின் கடைசி ராஜா முருகதாஸ் தீர்த்தபதி!’ - காலமான சிங்கம்பட்டி ஜமீனுக்கு மக்கள் அஞ்சலி

சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி
சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி

மணிமுத்தாறு, தாமிரபரணி ஆற்றில் கலக்கும் இடத்தின் அருகே இருக்கிறது சிங்கம்பட்டி ஜமீன். ஐந்து ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அரண்மனையும் தர்பார் மண்டபமும் இப்போதும் இருக்கிறது. அதன் கடைசி மன்னராக இருந்தார் முருகதாஸ் தீர்த்தபதி.

தமிழகத்தின் மிகப் பழைமையான ஜமீன்களில் ஒன்றாக சிங்கம்பட்டி ஜமீன் உள்ளது. கி.பி 1,100-ம் ஆண்டில் இந்த சமஸ்தானம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அதன் 31-வது ராஜாவாகப் பட்டம் சூட்டப்பட்டவர் டி.என்.எஸ்.முருகதாஸ் தீர்த்தபதி. 

முருகதாஸ் தீர்த்தபதி
முருகதாஸ் தீர்த்தபதி

நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரம் அருகே உள்ள சிங்கம்பட்டியில் உள்ள ஜமீன் அரண்மனையில் 1931-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி பிறந்தவரான முருகதாஸ் தீர்த்தபதி, தனது 3-வது வயதிலேயே தந்தையை இழந்தார். அதனால் அவர் ராஜாவாகப் பட்டம் சூட்டப்பட்டார்.

அந்தக் காலத்தில், ராஜாவாகப் பாட்டம் ஏற்பவர்கள் வாள்வீச்சு, குதிரையேற்றம், கத்திச் சண்டை போன்றவற்றைக் கற்க வேண்டும். ஆனால், முருகதாஸ் தீர்த்தபதியை அவரின் பெற்றோர் இலங்கைக்கு அனுப்பி கல்வி கற்க வைத்தார்கள். அதனால் அவருக்கு ஆங்கிலப் புலமை அதிகமாக இருந்தது. 

முருகதாஸ் தீர்த்தபதி
முருகதாஸ் தீர்த்தபதி

`முருகதாஸ் தீர்த்தபதிக்கு இலக்கிய ஆர்வம் அதிகம். சங்க காலம் முதல் சமகால இலக்கிய எழுத்தாளர்களின் நூல்கள் வரை தேடிப் படிப்பதோடு மட்டுமல்லாமல், அதன் கருத்துகள் குறித்து தீர்க்கமாக விவாதிக்கக்கூடியவர்’ என்கிறார்கள், அவரை நன்கு அறிந்த இலக்கியவாதிகள்.

மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை உட்பட 74,000 ஏக்கர் நிலம் இவரது குடும்பத்துக்குச் சொந்தமானதாக இருந்திருக்கிறது. 1952-ல் ஜமீன் ஒழிப்புச் சட்டம் கொண்டுவரப்பட்ட  பின்னர் பெரும்பாலான நிலங்களை அரசு கையகப்படுத்தியது. அதற்கு முன்பாகவே மாஞ்சோலை உள்ளிட்ட பல பகுதிகள் தனியார் நிறுவனத்துக்கு குத்தகைக்குக் கொடுக்கப்பட்டிருந்தது. 

மேற்குத் தொடர்ச்சி மலையில் 74,000 ஏக்கர் நிலம் ஜமீனுக்குச் சொந்தமானதாக இருந்தது. ஜமீன் ஒழிப்புச் சட்டம் மூலம் அதை அரசு கையகப்படுத்தியது.
பொதுமக்கள்

இப்போதும் கூட ஜமீன் பரம்பரைக்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருக்கின்றன. அதில் பழ மரங்கள், தேயிலை எஸ்டேட் போன்றவை உள்ளன. முருகதாஸ் தீர்த்தபதியின் உறவினர்கள் அதைப் பராமரிக்கிறார்கள்.

அம்பாசமுத்திரத்தில் உள்ள அரசு மருத்துவமனை, அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவை கட்டுவதற்கு முருகதாஸ் தீர்த்தபதி இடம் வழங்கினார். அதனால் அவரது பெயரிலேயே அவை செயல்படுகின்றன. அத்துடன், தாமிரபரணி ஆற்றின் அருகே தனக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கரில் உள்ள வயல்களில் வேலை செய்து வந்த தொழிலாளர்களுக்கு அந்த நிலங்களை உரிமையாக்கிவிட்டார். 

அரசரின் உடையில் பொதுமக்களுக்கு காட்சி
அரசரின் உடையில் பொதுமக்களுக்கு காட்சி

ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு கொண்ட முருகதாஸ் தீர்த்தபதி, எட்டுக் கோயில்களில் பரம்பரை அறங்காவலராக இருந்து வந்தார். மேற்குத் தொடர்ச்சி மலையின் புகழ்பெற்ற சொறிமுத்து அய்யனார் கோயிலின் அறங்காவலராக இருந்தார். இந்தக் கோயில் விழா நடைபெறும் ஆடி அமாவாசை விழாவில் ராஜா உடை அணிந்து மக்களுக்குக் காட்சி அளிப்பது வழக்கம்.

ஆங்கிலப் புலமை, இலக்கிய ஈடுபாடு மட்டும் அல்லாமல் டென்னிஸ், கால்பந்து, துப்பாக்கிச் சுடுதல், வாள்வீச்சு, சிலம்பம் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டிருந்தார். அத்துடன், பாலே நடனத்திலும் ஆர்வம் கொண்டவராகத் திகழ்ந்தவர். 

சிங்கம்பட்டி ஜமீன்
சிங்கம்பட்டி ஜமீன்

சிங்கம்பட்டி ஜமீன் முருகதாஸ் தீர்த்தபதி கடந்த சில மாதங்களாக முதுமை காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். அவர் நேற்று (24-ம் தேதி) மரணம் அடைந்தார். அவரது இறுதி நிகழ்ச்சிகள் சிங்கம்பட்டி ஜமீனில் இன்று நடக்கிறது. அவருக்கு இரு மகன்களும் மூன்று மகள்களும் உள்ளனர்.

அடுத்த கட்டுரைக்கு