Published:Updated:

கொரோனாவால் உயிரிழந்த நாட்டின் முதல் எம்.பி! - வசந்தகுமார் மறைவால் கலங்கும் ஆதரவாளர்கள்

ஹெச்.வசந்தகுமார் எம்.பி
ஹெச்.வசந்தகுமார் எம்.பி ( தே.அசோக்குமார் )

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரபல தொழிலதிபருமான ஹெச்.வசந்தகுமார், கொரோனா தொற்றுக்குச் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் இன்று மாலை 6:56 மணிக்குக் காலமானார்.

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியின் எம்.பி-யும், தமிழக காங்கிரஸ் கட்சி காரிய கமிட்டி செயல் தலைவராக பதவி வகித்துவந்தவருமான ஹெச்.வசந்தகுமார் (70), ஊரடங்கு காலகட்டத்தில், சென்னை மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிவாரணப் பொருள்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

ஹெச்.வசந்தகுமார்
ஹெச்.வசந்தகுமார்
தே.அசோக்குமார்

அவரின் உதவியாளர் போத்திராஜுக்கு கொரோனா உறுதியானதைத் தொடர்ந்து, வசந்தகுமாருக்கும் டெஸ்ட் எடுக்கப்பட்டது. கடந்த 10-ம் தேதி அன்று அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர், ஆயிரம் விளக்குப் பகுதியிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆகஸ்ட் 10-ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அவருக்கும் அவர் மனைவிக்கும் மேற்கொண்ட கொரோனா பரிசோதனையில் இருவருக்கும் கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டிருந்தது.

தொடர்ந்து அவர், வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும். அவரின் உடல்நிலை மோசமடைந்திருப்பதாகவும், உடலில் ஆக்சிஜன் அளவு அதிக அளவில் குறைந்திருப்பதாகவும் தகவல்கள் தொடர்ந்து வெளியாகின.

மருத்துவமனை அறிக்கை
மருத்துவமனை அறிக்கை

கடுமையான COVID நிமோனியால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு மருத்துவர்கள்குழு சிகிச்சை அளித்துவருவதாகவும், அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமாக இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், `அவர் இன்று மாலை உடல்நிலை குறைபாட்டால் காலமானார்’ என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஹெச்.வசந்தகுமாரின் வாழ்க்கை வரலாறு:

ஹெச்.வசந்தகுமார் 1950 ஆண்டு, ஏப்ரல் 14-ம் தேதி ஹரிகிருஷ்ண பெருமாள் மற்றும் தங்கம்மை தம்பதியருக்கு மகனாக கன்னியாகுமரி மாவட்டம் அகத்தீஸ்வரத்தில் பிறந்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குமரி அனந்தனின் தம்பி இவர். மேலும், தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு சித்தப்பா ஆவார். இவருக்கு தமிழ்செல்வி என்ற மனைவியும், வினோத்குமார், விஜயகுமார் என இரண்டு மகன்களும், தங்கமலர் என்ற ஒரு மகளும் உள்ளனர்.

ஹெச்.வசந்தகுமார்
ஹெச்.வசந்தகுமார்
தே.அசோக்குமார்

தொடக்கத்தில் சொந்தமாக மளிகைக்கடை வைத்திருந்த வசந்தகுமார், 1978-ம் ஆண்டு வசந்த் & கோ என்ற வீட்டு உபயோக விற்பனை நிறுவனத்தைத் தொடங்கினர். தற்போது இந்த நிறுவனம் தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் 86 கிளைகளுடன் செயல்பட்டுவருகிறது. இந்த நிறுவனத்தில் சுமார் 3,000 ஊழியர்கள் பணியாற்றிவருகின்றனர்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான இவர், 2006 மற்றும் 2016-ம் ஆண்டு நாங்குநேரி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். தற்போது கன்னியாகுமரி தொகுதியின் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துவந்தார். வர்த்தக காங்கிரஸ் தலைவர் பொறுப்பும் வகித்தவர் இவர். கடந்த 2014-ம் ஆண்டு, கன்னியாகுமரி நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2016-ம் ஆண்டு நாங்குநேரி சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு எம்.எல்.ஏ ஆனார். கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் வெற்றி பெற்று முதன்முறையாக மக்களவை எம்.பி ஆனார்.

வசந்தகுமார் எம்.பி மறைவுக்கு 0பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி உட்பட இந்தியா முழுவதிலுமிருந்தும் பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இந்தச் செய்தி காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கொரோனா: 19 நாள்கள் சிகிச்சை! - கன்னியாகுமரி எம்.பி வசந்தகுமார் காலமானார்
எம்.பி அலுவலகத்தில் மரியாதை
எம்.பி அலுவலகத்தில் மரியாதை

கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் வசந்தகுமார் காலமானதைத் தொடர்ந்து, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலிலுள்ள நாடாளுமன்றத் தொகுதி கட்சி அலுவலகத்தில் அவரது படத்துக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சியினரும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். மேலும், கட்சி அலுவலகத்தில் கட்சிக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு