Published:Updated:

`இதுதான் உனக்கு நல்லதுனு சொன்னேல...!’- காதலன் செயலால் விபரீத முடிவெடுத்த டி.வி தொகுப்பாளினி

டி.வி தொகுப்பாளினி சந்தனா
டி.வி தொகுப்பாளினி சந்தனா

காதலன் திருமணம் செய்ய மறுத்ததால் 29 வயதான டி.வி தொகுப்பாளினி ஒருவர் விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டார்.

கர்நாடகாவின் ஹஸன் மாவட்டத்தின் பெலூர் பகுதியைச் சேர்ந்தவர் சந்தனா வி.கே. இவர் பல்வேறு ரியல் எஸ்டேட் விளம்பரப் படங்களில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், சில லோக்கல் டி.வி சேனல்களிலும் தொகுப்பாளினியாக இருந்திருக்கிறார். பெங்களூருவில் டவராகிரே (Tavarekere) பகுதியின் கிருஷ்ணமூர்த்தி லேஅவுட் ஏரியாவில் இவர் வசித்து வந்திருக்கிறார்.

Representational Image
Representational Image

இவரது காதலர் தினேஷ் என்பவர் திருமணம் செய்ய மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து, செல்ஃபி வீடியோ ஒன்றை எடுத்து காதலர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அனுப்பி வைத்துவிட்டு விஷமருந்தி தற்கொலை செய்துகொண்டிருக்கிறார். அந்த வீடியோவைப் பார்த்த சந்தனாவின் தந்தை, பக்கத்து வீட்டில் வசிப்பவர்களுக்கு போன் செய்து தகவலைக் கூறியிருக்கிறார். இதையடுத்து, அவர்கள் சந்தனாவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.

சந்தனா காதலன் தினேஷுக்கு அனுப்பிய வீடியோவில்,``நான் இறந்துவிட்டால், அது உனக்கு நல்லது என்று சொன்னாய். அதனால், எனது வாழ்வை முடித்துக் கொள்கிறேன். இந்த முடிவுக்கு நீதான் காரணம்’’என்று பேசியிருக்கிறார். வீடியோவைக் கடந்த மே 28ம் தேதி மதியம் 2.30 மணியளவில் காதலன் தினேஷ் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சந்தனா அனுப்பியிருக்கிறார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சந்தனா, மே 30ம் தேதி நள்ளிரவு 12.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

சந்தனா - தினேஷ்
சந்தனா - தினேஷ்

இதையடுத்து, சந்தனாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் தினேஷ், அவரது தந்தை லோகப்பா கௌடா, தாய் காயத்ரி, சகோதரி ஷைலா மற்றும் அவரது உறவினர் தயானந்தா உள்ளிட்டோர் மீது தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளில் பெங்களூரு போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். சந்தனாவின் தந்தை கொடுத்த புகாரில், ``தினேஷும் எனது மகளும் கடந்த 5 ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். எனது மகளைத் திருமணம் செய்துகொள்வதாக அவர் உறுதியளித்திருந்தார். இது இரண்டு குடும்பத்தினருக்குமே தெரியும்.

சந்தனாவிடமிருந்து அவர் 5 லட்ச ரூபாய் வாங்கியிருந்தார். சமீபகாலமாக எனது மகளைச் சந்திப்பதை அவர் தவிர்த்து வந்தார். எனது மகளைத் திருமணம் செய்யவும் மறுத்தார். அவரது குடும்பத்தினர் வேறு பெண்ணைப் பார்த்து திருமணம் செய்துவைக்கப் போவதாக சந்தனாவிடம் கூறியிருக்கிறார்கள். இதனாலேயே மனமுடைந்து எனது மகள் இந்த முடிவை எடுத்திருக்கிறாள். இதனால், அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.

`மரணம் குறித்த கனவு கொடுமையானது; கடும் மன அழுத்தம்?’- விபரீத முடிவெடுத்த 25 வயது டிவி நடிகை

இதுதொடர்பாக வழக்குப் பதிவுசெய்துள்ள போலீஸார், தினேஷின் குடும்பத்தினரைக் கைது செய்தனர். போலீஸ் புகாரை அடுத்து தினேஷ் தலைமறைவான நிலையில், அவரைத் தேடும்வகையில் தனிப்படை அமைக்கப்பட்டிருப்பதாக பெங்களூரு போலீஸார் தெரிவித்தனர்.

அடுத்த கட்டுரைக்கு