Published:Updated:

`மகன் இறந்ததை ஜீரணிக்க முடியவில்லை!'- கரூர் மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தம்பதி

கிருஷ்ணவேணி உடல்
கிருஷ்ணவேணி உடல்

கரூரில் மகனை இழந்த சோகத்தில் இருந்த வயது முதிர்ந்த தம்பதியினர், ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கரூர் மாவட்ட மக்களை சோகத்தில் தள்ளியியிருக்கிறது.

கரூர் நகராட்சிக்கு உட்பட்ட சணப்பிரட்டி, எழில் நகரில் வசிப்பவர் சேகர் (வயது 64). கரூர் மாவட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணி செய்யும் காலத்தில் மிகவும் நேர்மையாகவும் அர்ப்பணிப்பு உணர்வோடும் செயல்பட்டதால், இவர் பணியாற்றிய இடங்களில் எல்லாம், இவருக்கு நல்ல பெயர்.

இந்த நிலையில், பணி ஓய்வு பெற்ற பிறகு, தன் மனைவி கிருஷ்ணவேணியுடன் சேர்ந்து அந்தப் பகுதியில் மரக்கன்று நடுதல், அப்பகுதியில் உள்ள கோயில்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு உதவி செய்வது எனச் சமூக அக்கறையுள்ள பணிகளைச் செய்து வந்துள்ளார்.

சேகர்
சேகர்
`தற்கொலை போன்ற செட்-அப்!’ - கரூரில் நகை, பணத்துக்காக மூதாட்டி கொலை?

இதனால், சணப்பிரட்டி பகுதி மக்களே இந்தத் தம்பதி மீது அளவில்லாத மரியாதையையும் அன்பையும் வைத்திருந்தனர். இந்த நிலையில், கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு முன்பு, இந்தத் தம்பதியின் ஒரே மகன் பாலச்சந்திரன் காதல் தோல்வியால் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படுகிறது. தங்களது ஒரே மகனை இழந்த இழப்பில் இருந்து முழுவதும் விடுபடாமல் இருவரும், மனமுடைந்த நிலையில் இருந்துள்ளனர்.

சணப்பிரட்டி மக்கள் இந்தத் தம்பதியிடம் எவ்வளவோ ஆறுதல் சொல்லி மனதை மாற்ற முயன்றுள்ளனர். ஆனால், தங்கள் மகன் பாலச்சந்திரன் மீது அளவுகடந்த அன்பு வைத்திருந்ததால், அவரது இழப்பை இவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. இருந்தாலும், மன ஆறுதல் கிடைப்பதற்காக முன்பைவிட சமூக அக்கறையுள்ள பணிகளில் அதிக நாட்டமுடன் செயல்பட்டு வந்திருக்கிறார்கள்.

கிருஷ்ணவேணி
கிருஷ்ணவேணி

ஆனால், மகனின் இழப்பை அவர்களால் முற்றிலும் மறக்க முடியவில்லை. இந்தச் சூழலில், மனமுடைந்து இருந்த சேகர் - கிருஷ்ணவேணி தம்பதியினர், இன்று அதிகாலையில் கரூர் - திண்டுக்கல் ரயில் பாதையில் வந்த ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர்.

இன்று அந்தப் பகுதியைக் கடக்க முயன்ற பொதுமக்கள் சிலர், ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்த சேகர் - கிருஷ்ணவேணி தம்பதிகளின் சடலங்களை பார்த்து, பசுபதிபாளையம் காவல் நிலைய போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். இதையடுத்து, அங்கு வந்த பசுபதிபாளையம் காவல் நிலைய போலீஸாரும் ரயில்வே போலீஸாரும் உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கிருஷ்ணவேணி உடல்
கிருஷ்ணவேணி உடல்

தன்னலம் கருதாமல் மக்களுக்குப் பயன்படும்படியான பொதுக் காரியங்களில் ஈடுபட்டு வந்த இந்தத் தம்பதியினர், மகனின் பிரிவு தாளாமல் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மரம் நடுதல், கோயில்களுக்கு உதவுவது என்று இந்தத் தம்பதி சமூக சேவைகளில் ஈடுபட்டு வந்ததால், அவர்களது தற்கொலையைப் பார்த்து சுற்றியுள்ள மக்கள் கண்ணீர் வடித்து வருகிறார்கள்.

அடுத்த கட்டுரைக்கு