Published:Updated:

`கடத்தப்பட்டாரா 6 வயது கேரளச் சிறுமி?!' -பிரேத பரிசோதனை அறிக்கையும்.. பெற்றோரின் சந்தேகங்களும்..

சிறுமி
சிறுமி ( manoramanews )

திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பின்னர் அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கொல்லம் பகுதியைச் சேர்ந்த தேவானந்தா என்ற 6 வயதுச் சிறுமி வியாழக்கிழமையன்று (பிப்ரவரி 27) காணாமல் போயுள்ளார். அன்று காலை 10.15 மணியளவில் சிறுமி காணாமல் போனதாகக் காவல்நிலையத்தில் அவரின் தாய் தன்யா புகார் அளித்தார். சிறுமியின் தந்தை வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். தன்யா துணி துவைக்கச் சென்றபோது தேவானந்தாவும் அவரைப் பின்தொடர்ந்து வந்துள்ளார்.

தன்யாவின் 3 மாதக் குழந்தை வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தது. தம்பியைப் பார்த்துக்கொண்டு வீட்டில் இருக்குமாறு தன் மகளை அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து, தேவானந்தா வீட்டுக்குத் திரும்பியுள்ளார்.

சிறுமி
சிறுமி

மகள் வீட்டுக்குள் சென்றதை தன்யா கவனித்துள்ளார். சிறிது நேரம் கழித்து தன்யா வீடு திரும்பியபோது வீட்டின் முன்கதவு திறந்து கிடந்துள்ளது. மகளைக் காணவில்லை. இதையடுத்து, காவல்துறையில் புகார் தெரிவித்தார். மகள் காணாமல் போன விவகாரத்தில் யார் மீது சந்தேகம் இல்லை என போலீஸில் தன்யா தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர் சிறுமியை ஒருபக்கம் தேடும் பணியை மேற்கொள்ள மம்மூட்டி, மோகன்லால் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் சிறுமியின் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்து தேடினர். இதன்காரணமாக சிறுமி தேடும் பணி தீவிரமானது. சிறுமி எப்படியும் கிடைத்துவிடுவார் என்ற நம்பிக்கையில் உறங்கச் சென்ற கேரள மக்களுக்கு விடியல் மோசமானதாக இருந்தது.

அதிகாலையில் சிறுமியின் உடல் ஆற்றில் மிதப்பதை அருகிலிருந்தவர்கள் பார்த்துள்ளனர். தன்யாவின் வீட்டிலிருந்து 600 மீட்டர் தொலைவில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. உடனடியாக அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. இதையடுத்து, அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பின்னரே சிறுமியின் மரணத்துக்கான காரணம் தெரியவரும் என்பதால் அறிக்கையை எதிர்நோக்கி அனைவரும் காத்திருந்தனர்.

திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறுமியின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. அதன்பின்னர் அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, சிறுமியின் சொந்த ஊரான கொல்லத்துக்கு உடல் எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு அவருக்கு இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டன.

தன்யா
தன்யா

இதற்கிடையே, வெளியான பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்தது தெரியவந்துள்ளது. சுவாசக்குழாயில் சேறும் மண்ணும் இருந்துள்ளது என்றும், தடயவியல் சோதனையிலும் அவரது உடலில் காயங்கள் எதும் இருந்ததாகக் கூறப்படவில்லை. எனவே, சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது. இந்த நிலையில், சிறுமியின் மரணத்தில் அவரது பெற்றோரும் உறவினர்களும் திடீர் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

சிறுமி கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் ஆற்றில் அவள் விழுந்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறியுள்ளனர். இதுதொடர்பாக பேசியுள்ள சிறுமியின் தாய், ``என் மகள் என்னிடம் தெரிவிக்காமல் எங்கும் செல்வதில்லை. எனவே, யாராவது அவளைக் கடத்தியிருக்கிறார்களா என்று எனக்கு சந்தேகம் உள்ளது. எல்லாம் நிமிடங்களில் நடந்துவிட்டது. காணவில்லை என்றதுமே அவள் பெயரைச் சொல்லி கத்தினேன். அப்போதே​​ அக்கம்பக்கத்தினர் அனைவரும் கூடிவிட்டனர்.

உண்மையில் என்ன நடந்தது என்பதை நான் அறிய விரும்புகிறேன். என்னிடம் சொல்லாமல் அவள் இதுவரையிலும் எங்கும் சென்றதில்லை. இதுவே எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது" என்றவர், சிறுமி சடலமாக மீட்கப்பட்டபோது ஷால் ஒன்றும் கைப்பற்றப்பட்டது. அதுகுறித்து பேசிய தாய், `` அவள் விளையாடும்போது அந்த ஷாலை வைத்திருந்தாள்" என்று கூறினார்.

இதே சந்தேகத்தை தெரிவித்து பேசிய சிறுமியின் தாத்தா மோகனன், ``தேவானந்தா ஆற்றுக்குச் செல்லும் பாதையில் நடந்து சென்றதாகக் கூறப்படுகிறது. அந்தப் பாதை அவளுக்கு முற்றிலும் அறிமுகமில்லாதது, அவள் ஒருபோதும் அந்தப் பாதையில் செல்லமாட்டாள். தேவானந்தா இதற்கு முன்பு ஆற்றுக்குச் சென்றதில்லை. ஆற்றைத் தாண்டி உள்ள கோயிலுக்கும் சமீபத்தில் அவள் செல்லவில்லை. கடைசியாக அவள் கோயிலுக்குச் சென்றதுகூட வேறு சாலை வழியாகத்தான்.

`கடத்தப்பட்டாரா 6 வயது கேரளச் சிறுமி?!' -பிரேத பரிசோதனை அறிக்கையும்.. பெற்றோரின் சந்தேகங்களும்..

தேவானந்தாவைப் பொறுத்தவரை தனது தாயோ பாட்டியோ இல்லாமல் ஒருபோதும் வீட்டை விட்டு வெளியே சென்றதில்லை. காணாமல் போனபோது, ​​அவரின் தாய்க்குச் சொந்தமான ஷால் அணியவில்லை" என்று கூறி இதனால் அவள் கடத்தப்பட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுப்பினார்.

அக்கம் பக்கத்தினரும், சிறுமி விழுந்ததாகக் கூறப்படும் ஆறு வீட்டிலிருந்து சிறிது தொலைவில் இருப்பதால், சிறுமி தனியாக அங்கு வந்திருக்க மாட்டார் என்றும், குழந்தை ஏரியை எவ்வாறு அடைந்தது என்பது குறித்து மேலும் விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், மருத்துவர்களின் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் சந்தேகப்படும் வகையிலான காயங்கள் எதுவும் உடலில் இல்லை என்று கூறப்பட்டுள்ளது. இதனால் சிறுமியின் மரணம் மர்மம் நிறைந்ததாக உள்ளது.

அடுத்த கட்டுரைக்கு