Published:Updated:

‘சென்னை ஐ.ஐ.டி ஒரு மர்மத் தீவு...’

ஃபாத்திமாவுக்கு நீதி கிடைக்குமா?

பிரீமியம் ஸ்டோரி

உயர்கல்வி நிலையங்களில் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் சம்பவங்கள் அதிகரித்துவரும் நிலையில், சென்னை ஐ.ஐ.டி மாணவி ஃபாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் உலுக்கியிருக்கிறது.

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த ஃபாத்திமா லத்தீப், சென்னை ஐ.ஐ.டி-யில் சமூகவியல் துறையில் முதுகலை முதலாம் ஆண்டு படித்துவந்தார். ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள மாணவர் விடுதியில், நவம்பர் 9-ம் தேதி அவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். படிப்பில் மிகுந்த ஆர்வம்கொண்ட ஃபாத்திமா, ஐ.ஐ.டி நுழைவுத்தேர்வில் முதல் இடம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதர்சன் பத்மநாபன், செல்போன் பதிவு
சுதர்சன் பத்மநாபன், செல்போன் பதிவு

சென்னை ஐ.ஐ.டி-யில் சாதிரீதியான மதரீதியான ஆதிக்கமும் பாகுபாடும் இருப்பதாக பல ஆண்டுகளாகவே குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. பிற்படுத்தப்பட்ட, பட்டியல் இன, சிறுபான்மைச் சமூகங்களைச் சேர்ந்த மாணவர்கள் பாகுபாட்டுடன் நடத்தப்படுவ தாகவும், அதனால் தற்கொலைகளும் தற்கொலை முயற்சிகளும் தொடர்வதாகவும் சொல்லப் படுகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு மாட்டு இறைச்சி சாப்பிடுவதற்கு ஒரு தரப்பு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. சூரஜ் என்கிற மாணவர் படுகாயமடைந்தார். இத்தகைய சம்பவங்களால், சர்ச்சையின் மையமாகவே சென்னை ஐ.ஐ.டி இருந்துவருகிறது. இந்த நிலையில், கடந்த ஓராண்டில் மட்டும் கோபால் பாபு, ரஞ்சனா குமாரி உட்பட ஐந்து மாணவர்கள் அங்கு தற்கொலை செய்துகொண்டனர். ‘தலைநகர் சென்னையில் ஐ.ஐ.டி இருந்தாலும், அது ஒரு மர்மத்தீவுபோல் இருக்கிறது’ என்று கூறியிருக்கிறார் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்.

மற்ற தற்கொலைகள் சிறிய சலசலப்புடன் கடந்து செல்லப்பட்ட நிலையில், ஃபாத்திமாவின் மரணம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. காரணம், தன் மரணத்துக்கு யார் காரணம் என அவர் எழுதி வைத்த குறிப்புதான். சுதர்சன் பத்மநாபன் மற்றும் இரண்டு பேராசிரியர்களின் பெயர்களை தன் செல்போனில் எழுதிவைத்துள்ளார் என்பது முக்கிய ஆதாரமாகச் சொல்லப்படுகிறது. தங்கள் மகள் மதரீதியான பாகுபாட்டுடன் நடத்தப்பட்ட தாகவும், துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப் பட்டதாகவும் ஃபாத்திமாவின் பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர்.

ஐ.ஐ.டி-யில் எல்லா பாடங்களிலும் முதல் மதிப்பெண் பெற்ற இந்த மாணவி, குறிப்பிட்ட ஒரு பாடத்தில் மட்டும் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளார் எனச் சொல்லப்படுகிறது. ‘மதப்பாகுபாட்டுடன் நடத்திய பேராசிரியர் சுதர்சன் பத்மநாபன், வேண்டுமென்றே மதிப்பெண்ணைக் குறைத்து ஃபாத்திமாவைத் துன்புறுத்தியுள்ளார்’ என்று அவரின் பெற்றோர் குற்றம்சாட்டுகின்றனர். அதுதான் ஃபாத்திமாவின் மரணத்துக்குக் காரணம் என்பது முக்கியக் குற்றச்சாட்டாக எழுந்துள்ளது.

‘சென்னை ஐ.ஐ.டி ஒரு மர்மத் தீவு...’

ஃபாத்திமாவின் தாயார் சபீதா, ‘‘நாங்கள் இஸ்லாமியர் என்பதால், எங்கள் மகளை வெளியூருக்கு அனுப்ப அச்சமாக இருந்தது. முக்காடு அணிந்தால் இஸ்லாமியப் பெண் என்று ஏதாவது தொல்லை வரும் என்ற அச்சத்தில், எங்கள் மகளை முக்காடு அணியவிட வில்லை. ஆனாலும் என்ன செய்ய? அவள் பெயர் ஃபாத்திமா லத்தீப் என்றாகி விட்டதே! முதலில் பனாரஸில்தான் ஃபாத்திமாவுக்கு இடம் கிடைத்தது. வடமாநிலங்களில் நிலவும் கும்பல் படுகொலைக்கு அஞ்சி, அங்கு போக வேண்டாம் என மறுத்தேன். ‘நான் விமானத்தில்தானே போகப்போகிறேன். பிறகு ஏன் கவலைப்படுகிறீர்கள்?’ என்று ஃபாத்திமா சொன்னாள். `விமானத்தில் போனாலும் சாலையிலும் நடக்க வேண்டியிருக்கும். சாலைகளில் சர்வசாதாரணமாக கும்பல் படுகொலை நடக்கிறது. அதனால் அங்கு போக வேண்டாம்’ என மறுத்துவிட்டேன்.

தமிழ்நாடு பாதுகாப்பான மாநிலம் என்று நம்பித்தான் சென்னை ஐ.ஐ.டி-க்கு அவளை அனுப்பினோம். ஆனால், சென்னை ஐ.ஐ.டி-யில் என் மகளைத் துன்புறுத்தியுள்ளனர். பேராசிரியர் சுதர்சன் பத்மநாபனின் துன்புறுத்தல்கள் தாங்காமல்தான் அவள் மரணமடைந்தாள். இன்டெர்னல் மதிப்பெண் குறித்து என் மகள் விவாதம் செய்தது, அந்தப் பேராசிரியருக்குப் பிடிக்கவில்லை. என் மகள் மரணத்துக்கு, சுதர்சன் பத்மநாபன்தான் காரணம். என் மகளுக்கு சுடிதார் பேன்ட் கயிற்றைக்கூட கட்டத் தெரியாது. அந்தக் கயிறு இறுகுவதால் வலிப்பதாகச் சொல்வாள். அதனாலேயே அவளுக்கு லெக்கின்ஸும் ஜீன்ஸும் வாங்கிக் கொடுத்தோம். அப்படிப்பட்டவள் தூக்குக்கயிறு நெரிப்பதை எப்படிப் பொறுத்துக்கொண்டாளோ தெரியவில்லையே...’’ என்று கதறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஐ.ஐ.டி தரப்பில் பேசியபோது, ‘‘ இந்த விவகாரம் விசாரணையில் இருப்பதால், இதுகுறித்து எதுவும் சொல்ல முடியாது’’ என்று தெரிவித்தனர்.

இதை ஒரு சாதாரண தற்கொலை வழக்காக மட்டுமே கோட்டூர்புரம் போலீஸார் பதிவு செய்துள்ளனர். மகளின் மரணச்செய்தி அறிந்து கொல்லம் மேயர் ராஜேந்திரபாபுவுடன் சென்னை வந்த ஃபாத்திமாவின் குடும்பத்தினர், கோட்டூர்புரம் காவல்நிலையம் சென்றனர். அப்போது, உரிய முறையில் போலீஸார் விவரங்களைத் தெரிவிக்கவில்லை என்று அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் ஃபாத்திமாவின் பெற்றோர் முறையிட்டதைத் தொடர்ந்து, அவர் இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ளார்.

‘ஃபாத்திமா மரணம் குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்’ என்று அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் அறிக்கைகள் வெளியிட்டுள் ளனர். பல்வேறு மாணவர் அமைப்புகள் போராட்டங்களை நடத்திவருகின்றன. அதனையடுத்து, சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், ஐ.ஐ.டி-க்குச் சென்று விசாரணை நடத்தியுள்ளார். வழக்கு, மத்திய குற்றப்பிரிவு விசாரணைக்கு மாற்றப்பட்டு, கூடுதல் துணை ஆணையர் மெகலினா தலைமையில் விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

#JusticeForFathimaLathif என்ற ஹெஷ்டேக் சமூக வலைதளங்களில் இந்திய அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது. நீதி கிடைக்குமா?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு