Published:Updated:

`அப்பா உன்கூடவே இருப்பேன்!'- 4 பக்க உருக்கமான கடிதம்; ஆட்டோ டிரைவர் எடுத்த விபரீத முடிவு

ஆட்டோ டிரைவர் ரெகுபதி
ஆட்டோ டிரைவர் ரெகுபதி

`மாவட்ட கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகளை இரு கரம் கூப்பிக் கேட்டுக்கொள்கிறேன். என் மறைவிற்குப் பிறகு என் மனைவியிடம் யாரும் பணம் கேட்டு தொல்லை கொடுக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். முடிந்தால் தமிழக அரசிடமிருந்து உதவி பெற்று அந்தப் பணத்தை என் மனைவியிடம் கொடுத்து உதவிடுங்கள்’

கொரோனா ஊரடங்கால் ஏற்பட்ட வறுமையால் மன உளைச்சல் ஏற்பட்ட ஆட்டோ டிரைவர் ஒருவர் 4 பக்கத்துக்கு உருக்கமான கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இனி அவருடைய குடும்பத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்டதாக சக ஆட்டோ ஓட்டுநர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

உருக்கமான கடிதம்
உருக்கமான கடிதம்

கும்பகோணத்தைச் சேர்ந்தவர் ரெகுபதி (43). ஆட்டோ டிரைவரான இவர் வங்கியில் கடன்பெற்று ஆட்டோ வாங்கி கும்பகோணம் ரயில்வே ஸ்டேஷன் ஸ்டாண்டில் வைத்து ஓட்டி வந்துள்ளார். இவருடைய மனைவி அமுதா. இவர்களுக்கு சந்தியா (14), சஞ்சய் (13) என ஒரு மகள், ஒரு மகன் என இரண்டு பிள்ளைகள். இந்த நிலையில் கொரோனா ஊரடங்கால் கடந்த 4 மாதமாக ஆட்டோ ஓட்ட முடியவில்லை. இதனால் வருமானமில்லாமல் தவித்திருக்கிறார். இதனால் ஏற்பட்ட மனஉளைச்சல் காரணமாக இந்த முடிவை எடுத்திருக்கிறார்.

ரெகுபதி அந்தக் கடிதத்தில் எழுதியிருப்பதாவது, கொரோனா ஊரடங்கால் 4 மாதமாக ஆட்டோ ஓட்ட முடியவில்லை. அதனால் கடன் வாங்கியதற்கான மாதம் வட்டி பணம், வார, மாதக் குழு கடன்கள், ஆட்டோவிற்குச் செலுத்த வேண்டிய தவணைத் தொகை ஆகியவற்றைச் செலுத்த முடியவில்லை. தற்போது எல்லாம் என்னை நெருக்கி மன உளைச்சலுக்கு ஆளாக்கிவிட்டது.

மாவட்ட கலெக்டர் மற்றும் அரசு அதிகாரிகளை இருகரம் கூப்பிக் கேட்டுக்கொள்கிறேன். என் மறைவிற்குப் பிறகு என் மனைவியிடம் யாரும் பணம் கேட்டுத் தொல்லை கொடுக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். முடிந்தால் தமிழக அரசிடமிருந்து உதவி பெற்று அந்தப் பணத்தை என் மனைவியிடம் கொடுத்து உதவிடுங்கள். அமுதா என்னை மன்னித்து விடு. என் அன்பு மகனை நல்ல படியா பார்த்துக்கொள். என் செல்லக்குட்டி சஞ்சய் அப்பா உன் கூடவேதான் இருப்பேன்.

எனது தங்கை ரேவதி எனது பாசமச்சான் மற்றும் உறவினர்கள் அனைவரும் என் குடும்பத்திற்கு உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். அத்துடன் ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என்னை மன்னித்து விடுங்கள். ஆட்டோவை விற்று அதற்கான கடனை அடைத்துவிடுங்கள். மேலும் நமது சங்கத்தின் மூலமாகக் கிடைக்கும் உதவித்தொகையை எனது மனைவியிடம் கொடுத்துவிடுங்கள். எனது மகனின் மருத்துவச் செலவையும் பார்த்துக்கொள்ளுங்கள். வேறு ஏதேனும் உதவித்தொகை கிடைத்தாலும் அதையும் கொடுங்கள்.

தற்கொலை செய்து கொண்ட ஆட்டோ டிரைவர்
தற்கொலை செய்து கொண்ட ஆட்டோ டிரைவர்

இதுவரை நான் செய்த தவறுகளை எல்லாம் மன்னித்து என்னை அரவணைத்த நமது சங்கத்தினருக்கு நன்றி. நமது சங்கத்தினர் முன் நின்று எனது உடலை அடக்கம் செய்யுங்கள். மீண்டும் ஒரு முறை எல்லோரும் என்னை மன்னித்துவிடுங்கள் என உருக்கமாகக் கடிதத்தை எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு