Published:Updated:

எளிமை... கனிவு... அன்பு... கோதை ஆச்சி!

குமுதம் தொடங்கிய காலம் முதல் கோதை ஆச்சி, கணவருக்கு உற்ற துணையாக இருந்தது வரலாறு

பிரீமியம் ஸ்டோரி

குமுதம் நிறுவனரும், ஆசிரியருமான மறைந்த எஸ்.ஏ.பி. அண்ணாமலை அவர்களின் மனைவி திருமதி கோதை அண்ணாமலை 9.5.2021-ல் இயற்கை எய்தினார். 92 வயது நிறைந்த இவர் எஸ்.ஏ.பி அவர்களோடு வாழ்க்கையிலும் எழுத்திலும் இணைந்து, அனுபவ சாந்தத்தில் மிளிர்ந்து மறைந்திருக்கிறார்.

குமுதம் தொடங்கிய காலம் முதல் கோதை ஆச்சி, கணவருக்கு உற்ற துணையாக இருந்தது வரலாறு. இதழின் வளர்ச்சியிலும், படிப்பதிலும், எழுதுவதிலும் அவருக்கு ஆர்வம் இருந்தது. எந்நேரமும் பத்திரிகை வேலைகளில் ஈடுபாடுகொண்டிருந்த எஸ்.ஏ.பி-க்கு உதவியாக அவர் ஓடிக்கொண்டேயிருந்தார். பெரும் செல்வக் குடும்பத்தின் வழி வந்திருந்தாலும் அதற்கான சாயல்களைக் கொண்டிராமல் தெளிந்த எளிமையில் இருந்தார். கணவர் மறைவுக்குப் பிறகு ஒரு பக்கக் கதைகள், சிறுகதைகள் தேர்ந்தெடுப்பதில் ரசனையும் ஜனரஞ்சகமும் கலந்த பாணி அவருடையது. ஒவ்வொரு குமுதம் இதழையும் அவர் படித்துவிட்டு ஆசிரியர் குழுவுக்கு எழுதுகிற கடிதம் விசேஷமானது. இளம் வயதில் பினாங்கில் கல்வி பயின்றதால் சரளமாக ஆங்கிலம் பேசுவார்.

எளிமை... கனிவு... அன்பு... கோதை ஆச்சி!

ஆன்மிகத்தின் மீது ஈடுபாடு இருந்தது. அவரது 80-வது பிறந்ததினத்தைக் கோலாகலமாக மகன் டாக்டர் ஜவஹர் பழனியப்பன் நடத்தினார். 1994-ல் எஸ்.ஏ.பி-யின் மறைவுக்குப் பிறகு அவரின் மகன் டாக்டர் ஜவஹர் பழனியப்பன் குமுதம் இதழின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். அப்போதும் அவருக்கு நல் ஆலோசனைகள் வழங்கியவர் கோதை ஆச்சி. ஒவ்வோர் ஆயுத பூஜை தினத்தன்றும் ஊழியர்களைக் கூட்டி, புரசைவாக்கம் வீட்டில் விழா நடத்திப் பரிசளிப்பார். ஊழியர்கள் தொட்டு அனைவரிடமும் அவர் கனிவும் அன்பும் காட்டினார்.

மகள் விஜயலட்சுமி அழகப்பன் மைசூரில் வசிக்க, இன்னொரு மகளும் பத்திரிகையாளருமான கிருஷ்ணா சிதம்பரம் சென்னையில் இருக்கிறார். கொரோனா நடைமுறைகள் காரணமாக, மனதுக்கு இசைந்த மகன் டாக்டர் ஜவஹர் பழனியப்பன், தன் தாயாரின் மறைவுக்குச் சென்னைக்கு வர இயலாதது பெரும் துக்கம்.

நிறைவாழ்வு வாழ்ந்து மறைந்திருக்கும் திருமதி கோதை அண்ணாமலையை அன்பால் நினைவுகூர்ந்து, அருமைத் தாயாரை இழந்து நிற்கும் டாக்டர் ஜவஹர் பழனியப்பனின் கைகளைப் பற்றிக்கொள்கிறோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு