அலசல்
Published:Updated:

நடைபயணம்... லோகேஷ் மரணம்... யார் காரணம்?

லோகேஷ் மரணம்
பிரீமியம் ஸ்டோரி
News
லோகேஷ் மரணம்

லோகேஷ் வீட்டுக்குச் சென்று அவரின் பெற்றோருக்கு ஆறுதல் சொன்ன நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மெகராஜ்

முன்னேற்பாடுகளும் காலஅவகாசமுமின்றி அறிவிக்கப்பட்ட ஊரடங்கின் பாதிப்புகள் ஏராளம். நாக்பூரிலிருந்து நடைப்பயணமாக தமிழகத்துக்கு வந்த நாமக்கலைச் சேர்ந்த லோகேஷ், வழியிலேயே மரணமடைந்திருப்பது அதன் உச்சம்.
நடைபயணம்... லோகேஷ் மரணம்... யார் காரணம்?

நாமக்கல் மாவட்டம், பள்ளிப்பாளையத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணி - ராதிகா தம்பதியின் மூத்த மகன் லோகேஷ். இளைய மகன் சஞ்சய், ஒன்பதாம் வகுப்பு படிக்கிறார். வாட்ச்மேன் வேலைபார்க்கும் பாலசுப்ரமணிக்கும் கூலி வேலைபார்க்கும் ராதிகாவுக்கும், ‘தங்கள் பிள்ளைகள் இருவரும் படித்து நல்ல வேலைக்குப் போக வேண்டும்’ என்பதுதான் வாழ்க்கை லட்சியம். டிப்ளோமா முடித்துள்ள லோகேஷ், பிப்ரவரி மாதம்தான் நாக்பூரில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணிக்குச் சென்றுள்ளார். அதன் பிறகு அவரது உயிரற்ற உடலைத்தான் அவரின் குடும்பம் பார்க்க முடிந்தது.

லோகேஷுடன் பணிபுரிந்த முகமது ஜானிடம் பேசினோம். ‘‘தமிழகத்தைச் சேர்ந்த 40 பேர் அங்கே வேலை செஞ்சோம். மார்ச் 24-ம் தேதி ஊரடங்கு அறிவிப்பு வந்ததும், அறையை காலிசெய்யச் சொல்லிட்டாங்க. எப்படி ஊருக்குப் போறதுனு தெரியலை. நாக்பூர் கலெக்டர், கமிஷனர்னு பலர்கிட்ட பேசியும் யாரும் உதவலை. எப்படியாவது ஊருக்குப் போயிடலாம்னு மார்ச் 30-ம் தேதி 40 பேரும் நடந்தே கிளம்பினோம். இடையிடையே லாரியில லிஃப்ட் கேட்டு ஏப்ரல் 1-ம் தேதி செகந்தராபாத் வந்தோம்.

லோகேஷ் மரணம்
லோகேஷ் மரணம்

அங்க இருக்கிற அம்பேத்கர் காய்கறி மார்க்கெட்ல இருந்து தினமும் தமிழ்நாட்டுக்கு லாரி போறதா சொன்னாங்க. அங்க போனோம். நிலைமையைப் புரிஞ்சுக்கிட்ட மார்க்கெட் சேர்மன், விடியற்காலையில தமிழ்நாடு போற லாரியில அனுப்பிவைக்கிறதா சொல்லி, ஒரு மண்டபத்துல தங்கவெச்சாரு. ரொம்ப தூரம் நடந்ததால, லோகேஷ் சோர்வா இருந்தான். சரியா சாப்பிடாமப் படுத்துட்டான். ராத்திரி 11 மணிக்கு எங்க ஆதார் கார்டைக் காண்பிக்கச் சொன்னாங்க. அதுக்காக எந்திரிச்ச லோகேஷ், திடீர்னு மயங்கி விழுந்துட்டான். ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போனோம். மாரடைப்பால் அவன் இறந்துட்டதா சொன்னாங்க. லோகேஷ் உடலோடு நாங்க ஊருக்கு வந்துட்டோம். மறுநாள் லாரியும் கிடைக்காததால சிலர் நடந்தே வந்துட்டாங்க. பலர் இன்னும் ஊருக்கு வர முடியாம தவிச்சுக்கிட்டு இருக்காங்க’’ என்றார் கண்ணீருடன்.

லோகேஷ் வீட்டுக்குச் சென்று அவரின் பெற்றோருக்கு ஆறுதல் சொன்ன நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மெகராஜ் நம்மிடம், ‘‘லோகேஷின் குடும்பத்துக்கு உதவி கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். செகந்தராபாத் தாசில்தாரிடம் பேசினேன். லோகேஷுடன் வந்த தமிழக இளைஞர்கள் நன்றாக இருப்பதாகக் கூறினார். அந்த இளைஞர்களுடனும் பேசினேன். எல்லோரும் நன்றாக இருக்கின்றனர்’’ என்றார்.

கொரோனா மரணத்தைவிடக் கொடியது அரசின் அலட்சியம் தரும் மரணம்!