Published:Updated:

வறுமை ஒருபக்கம்... கொரோனா மறுபக்கம்... அச்சத்தில் விபரீத முடிவெடுத்த குடும்பம்!

தற்கொலை
பிரீமியம் ஸ்டோரி
News
தற்கொலை

மருந்தைக் குடிக்காமல் தூங்கிவிட்டதால், ஆதீஸ்வரன் மட்டும் தப்பியிருக்கிறான். இந்தச் சம்பவத்தால் கடும் அதிர்ச்சியடைந்தவனுக்கு மருத்துவமனையில் கவுன்சலிங் தரப்பட்டுவருகிறது.

மதுரை சக்கிமங்கலத்தில் வசித்துவந்த லட்சுமி என்பவரின் குடும்பம், வறுமையையும் கொரோனாவையும் கண்டு பயந்துபோய் எடுத்த விபரீத முடிவு, அனைவரையும் அதிர்ச்சியடையவைத்துள்ளது. அவர் குடும்பத்தைச் சேர்ந்த இருவர் இறந்துவிட, இருவர் தீவிரச் சிகிச்சையில் இருக்க, எந்த ஆதரவுமில்லாத 15 வயது ஆதீஸ்வரன் பிரமை பிடித்தவன்போல மருத்துவமனை கவுன்சலிங்கில் இருக்கிறான்!

உடல்நலம் இல்லாமலிருந்த கணவர் நாகராஜன் கடந்த மாதம் இறந்துபோக, நிலைகுலைந்துபோனார் லட்சுமி. கணவரின் கூலி வேலை மூலம் கிடைத்துவந்த சொற்ப வருமானமும் இனி இல்லை என்றானது. ஆதீஸ்வரன், சிபிராஜ் (13) என இரண்டு பள்ளி செல்லும் பிள்ளைகள், திருமணமாகி கணவரைவிட்டுப் பிரிந்துவந்த மகள் ஜோதிகா, அவரின் 3 வயது குழந்தை ரித்திஷ், என ஐந்து பேருமாக ஒரு சிறிய வாடகை வீட்டில் வறுமையோடு ஒவ்வொரு நாளையும் கடத்திக்கொண்டிருந்தார்கள். இந்நிலையில், மகள் ஜோதிகாவுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட, ‘இதற்கு மேல் கஷ்டங்களுடன் வாழ முடியாது’ என்று முடிவெடுத்து, சாணி பவுடரைக் குடித்து தற்கொலை செய்ய முடிவெடுத்தார் தாய் லட்சுமி.

வறுமை ஒருபக்கம்... கொரோனா மறுபக்கம்... அச்சத்தில் விபரீத முடிவெடுத்த குடும்பம்!
வறுமை ஒருபக்கம்... கொரோனா மறுபக்கம்... அச்சத்தில் விபரீத முடிவெடுத்த குடும்பம்!

டிசம்பர் 8-ம் தேதி இரவு சாணி பவுடரைத் தண்ணீரில் கலந்து குடித்திருக்கிறார்கள். ஜோதிகாவும் அவரது குழந்தை ரித்தீஷும் உடனே மரணமடைந்திருக்கிறார்கள். லட்சுமியும் இளைய மகன் சிபிராஜும் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்திருக்கிறார்கள். காலையில், லட்சுமியின் அக்கா தேவி வந்து பார்த்தபோதுதான், இவர்கள் விஷம் குடித்த விஷயம் தெரியவந்திருக்கிறது. காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட, அவர்களை மீட்டு மதுரை இராசாசி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள். லட்சுமியும் சிபிராஜும் ஐ.சி.யூ-வில் தீவிர சிகிச்சையில் இருக்கிறார்கள். மருந்தைக் குடிக்காமல் தூங்கிவிட்டதால், ஆதீஸ்வரன் மட்டும் தப்பியிருக்கிறான். இந்தச் சம்பவத்தால் கடும் அதிர்ச்சியடைந்தவனுக்கு மருத்துவமனையில் கவுன்சலிங் தரப்பட்டுவருகிறது.

ஜோதிகா
ஜோதிகா
வறுமை ஒருபக்கம்... கொரோனா மறுபக்கம்... அச்சத்தில் விபரீத முடிவெடுத்த குடும்பம்!

இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்த சக்கிமங்கலம் கல்மேடு, எம்.ஜி.ஆர் நகரிலுள்ள லட்சுமியின் வீட்டுக்குச் சென்றோம். வீடு பூட்டப்பட்டுக் கிடக்க, அக்கம் பக்கத்தில் விசாரித்தோம்... ‘‘அன்னைக்கு காலையில லட்சுமியோட அக்கா வந்து பார்த்தப்பதான் அவங்க விஷம் குடிச்ச விஷயமே தெரியும். நைட்டுல ஒரு சத்தமும் கேட்கலை. சுத்தியும் யாரோடயும் லட்சுமி அதிகமா வெச்சுக்க மாட்டாங்க. அவங்க உண்டு... அவங்க வேலை உண்டுனு இருப்பாங்க. அவங்க வீட்டுக்காரர் சம்பாதிச்சதுலதான் குடும்பம் நடந்தது. அவருக்கு உடம்பு சரியில்லாமப் போயி, நிறைய செலவு செஞ்சு வைத்தியம் பார்த்தும் இறந்துட்டாரு. அதுலருந்து லட்சுமி ரொம்ப கஷ்டப்பட ஆரம்பிச்சிருச்சு. ரொம்ப வறுமை... இதுல, குடும்பப் பிரச்னையால மூத்த பொண்ணு ஜோதிகாவும் அவ குழந்தையோட இங்க வந்துட்டா... பாவம்... வறுமையை நெனைச்சு ரொம்ப பயந்து போயிருக்காங்க... அன்னைக்கு மகளுக்கு உடம்பு சரியில்லைனு ஆஸ்பத்திரிக்குப் போறதும் வர்றதுமா இருந்தாங்க. ஆனாலும், இப்படிப் பண்ணுவாங்கனு கொஞ்சம்கூட நெனைக்கலை” என்றார்கள்.

லட்சுமியின் உறவினர் மனோகரனிடம் பேசினோம். ‘‘புருஷன் இறந்ததுலருந்து அப்செட்டாகி புலம்பிக்கிட்டே இருந்திருக்காங்க. ‘அவரு கூப்பிடுறாரு... நானும் அவர்கிட்டப் போகப்போறேன்’னு பினாத்திக்கிட்டே இருந்திருக்காங்க. அந்த நேரம் பார்த்து ஜோதிகாவுக்கு உடம்பு சரியில்லாமப் போய் செக் பணணினதுல, ‘கொரோனா பாசிட்டிவ்’னு வந்திருக்கு. ‘எல்லாருக்கும் கொரோனா பரவிட்டா, யாரு காப்பாத்துவா?’னு பயந்துபோய் இப்படி முடிவெடுத்திருக்காங்க. தண்ணியில சாணி பவுடரைக் கலந்து எல்லாரும் குடிச்சப்ப, பெரிய பையன் ஆதீஸ்வரன் மட்டும் ‘குடிக்க மாட்டேன்’னு தட்டிவிட்டுட்டுத் தூங்கியிருக்கான். அதனால அவன் தப்பிச்சான். அவங்க நிலைமை புரியுது... ஆனாலும், லட்சுமி ஒரு நிமிஷம் யோசிச்சிருக்கலாம்’’ என்றார் ஆற்றாமையுடன்.

ஹக்கீம்,
ஹக்கீம்,
மனோகரன்
மனோகரன்

தற்போது இவர்களுக்கு உதவிவரும் சமூக ஆர்வலர் ஹக்கீமிடம் பேசினோம். ‘‘கணவர் இறந்த பிறகு, கூலி வேலைக்குப் போக முயற்சி செய்த லட்சுமிக்கு எந்த வேலையும் கிடைக்கலை. ஸ்கூலுக்குப் போற ரெண்டு மகன்களோட அன்றாடத்தைக் கடத்துறதுக்கே தவிச்சுருக்காங்க. இதுல கணவனால கைவிடப்பட்ட மகளும் குழந்தையோட வந்தது கூடுதல் சுமையாகிடுச்சு. வறுமை ஒருபக்கம், கொரோனா இன்னொருபக்கம்... என்ன செய்யுறதுனு புரியாம இப்படியொரு விபரீத முடிவை எடுத்திருக்காங்க. அக்காவும், அக்கா குழந்தையும் மார்ச்சுவரியிலும், அம்மாவும் தம்பியும் ஐ.சியூ-விலும் இருக்க... 15 வயசு பையன் ஆதீஸ்வரன் அதிர்ச்சி விலகாம அழுதுக்கிட்டு இருந்ததைப் பார்க்கவே கஷ்டமா இருந்துச்சு. இப்ப அவனுக்கு ஆஸ்பத்திரியிலேயே கவுன்சலிங் கொடுக்குறாங்க. இவங்களோட எதிர்காலத்துக்கு உதவணும்னு மாவட்ட நிர்வாகத்துகிட்ட கோரிக்கை வெச்சுருக்கோம்’’ என்றார் நம்பிக்கையாக.

சிகிச்சையிலிருப்பவர்களுக்கும் ஆதரவற்ற சிறுவனுக்கும் உடனடியாக அரசு உதவ வேண்டும்!

வறுமை ஒருபக்கம்... கொரோனா மறுபக்கம்... அச்சத்தில் விபரீத முடிவெடுத்த குடும்பம்!

FOLLOW UP: ஆட்சியரின் கரிசனம்... நெகிழ்ந்த மாற்றுத்திறனாளி தாய்!

‘ஒரு மாற்றுத்திறனாளி தாயின் கண்ணீர்!’ என்ற தலைப்பில், 09.01.2022 தேதியிட்ட ஜூ.வி இதழில் தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகிலுள்ள ஆழிக்குடி கிராமத்தைச் சேர்ந்த, பானுமதியின் துயர நிலையை எழுதியிருந்தோம். கணவரை இழந்த மாற்றுத்திறனாளியான இவர், 40 வயதான மூளைச்சவால் கொண்ட தன் மகன் உதயகுமாருடன், இடியும் நிலையிலுள்ள பலவீனமான வீட்டில் வசித்துவருகிறார். இந்தத் தகவலை மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜிடம் நாம் கொண்டுசென்றபோது, அதிகாரிகளை உடனடியாக ஸ்பாட்டுக்கு அனுப்பி, ஆய்வுசெய்து அறிக்கை தர உத்தரவிட்டார். பிறகு, இந்திரா காந்தி நினைவுக் குடியிருப்புத் திட்டத்தின் கீழ் ரூ.2,40,000 மதிப்பீட்டில் புதிதாக வீடு கட்டித்தர முடிவுசெய்தது மாவட்ட நிர்வாகம்.

இந்நிலையில், பானுமதி வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த மாவட்ட ஆட்சியர் டாக்டர் செந்தில்ராஜ், ‘பசுமை வீடு’ திட்டத்தின் கீழ் வீடு கட்டித்தர ஆணையளித்து நெகிழச் செய்திருக்கிறார். நம்மிடம் பேசிய ஆட்சியர், ‘‘இந்திரா காந்தி நினைவுக் குடியிருப்புத் திட்டத்தின்கீழ் பானுமதி அம்மாவுக்கு வீடு அலாட்மென்ட் ஆக தாமதமாகலாம் என்பதால், உடனடி நடவடிக்கையாகப் பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்டித்தர ஆணை அளித்துள்ளேன். இப்படியோர் ஏழ்மையான குடும்பத்தை எனக்கு அடையாளம் காட்டிய ஜூ.வி-க்கு நன்றி’’ என்றார். அவரிடம், ‘‘அந்தக் கிராமத்திலுள்ள 32 காலனி வீடுகளுக்கும் பட்டா கிடையாது’’ என்ற விஷயத்தையும் எடுத்துரைக்க, 32 வீடுகளுக்கும் பட்டா வழங்கிட நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்!