Published:Updated:

`கொரோனா வார்டில் சிகிச்சையில் இருந்த ஒருவர் மரணம்!’ - கன்னியாகுமரி சோகம்

கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை
கன்னியாகுமரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

`திருநெல்வேலிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வந்த பின்னர்தான் அவரது இறப்புக்கான காரணம் தெரியவரும்.’

கன்னியாகுமரி மாவட்டத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த சுமார் 3,600 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். தனிமைப்படுத்தப்பட்டவர்களின் வீட்டு வாசலில் அதுகுறித்த அறிவிப்பு ஒட்டப்பட்டுள்ளது. மேலும், மாவட்டம் முழுவதும் சுகாதாரப் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனி வார்டு ஏற்படுத்தப்பட்டு கொரோனா அறிகுறியுடன் வருபவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த குளச்சல் அருகே உள்ள கோடிமுனையைச் சேர்ந்த 40 வயது நபர் மரணமடைந்தார். கடந்த 3-ம் தேதி குவைத் நாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வந்துள்ளார். பின்னர் கடந்த ஆறு நாள்களுக்கும் மேலாக வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தார்.

கொரோனா
கொரோனா

இந்த நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதித்ததற்கான அறிகுறி ஏற்பட்டதால், நேற்று நாகர்கோவில் அருகே ஆசாரிப்பள்ளத்தில் உள்ள கன்னியாகுமரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவரது மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்காகத் திருநெல்வேலி மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

இந்நிலையில், அவர் இன்று காலை திடீரென உயிரிழந்தார். இதுகுறித்து மருத்துவர்கள் கூறும்போது,``உயிரிழந்தவருக்கு ஏற்கெனவே கல்லீரல் மற்றும் மூளைக்காய்ச்சல் பாதிப்பு இருந்துள்ளது. திருநெல்வேலிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு முடிவுகள் வந்த பின்னர்தான் அவரது இறப்புக்கான காரணம் தெரியவரும்" என்றனர்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 59 வயது பெண் ஒருவர் கடந்த மூன்று நாள்களுக்கு முன் உயிரிழந்தார். அவரது மாதிரிகள் சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட சமயத்தில்தான் அவரும் உயிரிழந்தார். சோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை எனத் தெரியவந்தது. இதய நோய் உள்ளிட்ட காரணங்களால் அவர் உயிரிழந்தது தெரியவந்தது.

அடுத்த கட்டுரைக்கு